ஸ்தான ஜோதிடர்கள் சொல்லி அனுப்பிய தகவல்களால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் தொடர்புடைய சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் கைதாகி 2017, பிப்ரவரி 15-ந்தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி 61-வது பிறந்த நாள்.

sasikalaஜெயலலிதாவுடன் இருந்தவரை சசிகலா பிறந்தநாள் வெளியே தெரியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த வருடம் வந்த முதல் பிறந்தநாளையும் ஜெ.வுக்காக கொண்டாடாமல், மௌனவிரதம் கடைப்பிடித்தார் சசிகலா. பின்னர், கணவர் நடராசனின் மறைவும் அவரை சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், கடந்த 18-ந் தேதி சிறையிலேயே தனது பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடியுள்ளார் சசிகலா. அன்றையதினம் சசிகலாவும் இளவரசியும் சிறைக் கைதிகளுக்கு இனிப்புடன்கூடிய உணவுக்கு ஏற்பாடு செய்து அசத்தியிருக்கின்றனர்.

தமிழகம் முழுவதுமுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சசிகலாவின் ராசி, நட்சத்திரத்தின்படி சிறப்பு பூஜைகளும் அன்னதானங்களும் தினகரன் உத்தரவுப்படி கட்சிக்காரர்களால் செய்யப்பட்டன. கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, ஜூலை 16-ந்தேதி தன்னை சந்தித்த தினகரனிடம், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு, எடப்பாடியும் பன்னீரும் கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு, டெல்லியில் உள்ள இரட்டை இலை வழக்கு ஆகிய நான்கு வழக்குகளின் நிலவரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார் சசிகலா.

அத்துடன், மத்திய அரசுக்கும் எடப்பாடி-பன்னீருக்குமான நட்பில் ஏற்பட்டுள்ள விரிசல் பற்றியும் விசாரித்த சசிகலா, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்றும், பா.ஜ.க. கூட்டணிக்கு ரஜினி ஓ.கே. சொன்னால் உடனடி ஆட்சி கவிழ்ப்பில் பா.ஜ.க. கவனம் செலுத்தும் என்றும் டெல்லியிலிருந்து நம்பிக்கையான வழக்கறிஞர் ஒருவர் தமக்கு அனுப்பிய தகவலையும் தினகரனிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சசிகலாவின் ராசி எண் 7. இந்த வருடம் அவருக்கு 61-வது பிறந்தநாள். இதன் கூட்டுத் தொகையும் 7. அதனாலேயே பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட அனுமதித்தார் சசிகலா.

Advertisment

சென்னையிலுள்ள ஆஸ்தான ஜோதிடர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 18-ந்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி அருகே இருக்கும் ஒரு பங்களாவில் சசிகலாவுக்காக சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. உடல் ஆரோக்கியத்துக்காக சுதர்சன ஹோமமும், எதிரிகளை வீழ்த்த (ஆட்சி கவிழ) சண்டிஹோமமும் நடத்தியுள்ளனர். யாகங்களை முழுமையாக நடத்தி முடித்த விசயத்தை சசிகலாவுக்கு தெரிவித்ததுடன், "அக்டோபர் 4-ல் நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சி, நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவிபுரியும்' என்கிற தகவலையும் அனுப்பி வைத்துள்ளனர்.

சசிகலாவுக்கு மீன ராசி, ரேவதி நட்சத்திரம். அக்டோபரில் நடக்கவிருக்கும் குருப் பெயர்ச்சியின்போது, மீன ராசிக்கு 9-வது இடத்துக்கு குரு வருவதால், உயர்வான நிலை அவருக்கு உருவாகும். எதிரிகள் அவரிடம் சரணடைவார்கள் என்றும், குருப்பெயர்ச்சி நடக்கும் காலம் வரை கடவுள் முருகனுக்கு 108 அஷ்டோத்திர மந்திரம் சொல்லி வழிபட்டு வருமாறு ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, சிறையில் தனது அறையில் முருகன் படத்தை வைத்து தினமும் வழிபட்டு வருகிறார் சசிகலா’என்று விவரிக்கின்றனர்.

சிறையில் இருக்கும் சசிகலாவின் தண்டனைக்காலம் முடிய இன்னும் 30 மாதங்கள் இருக்கின்றன. ஆனால், "இன்னும் மூன்றே மாதத்தில் எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்பேன்' என சொல்லிவருகிறாராம் சசிகலா. அதற்கேற்ப டெல்லியில் காய்களை நகர்த்துகிறது தினகரன் தரப்பு.

Advertisment

-இரா.இளையசெல்வன்

வரிந்து கட்டும் கோஷ்டிகள்!

sasi

அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன், ""ஆர்.கே.நகரைப் போலவே இடைத்தேர்தல்களில் திருப்பரங்குன்றத்தையும் திருவாரூரையும் கைப்பற்றுவோம்... கலைஞருக்குப் பிறகு நானே திருவாரூரின் மைந்தன்'' புன்சிரிப்பு மாறா முகத்தோடு செல்லுமிடங்கள்தோறும் சொல்கிறார் கட்சிப் பொறுப்புகளையும் தாராளமாகக் கொடுக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கிழக்கு மா.செ.யாக நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரையை நியமித்தார். மேற்கு மா.செ.யாக ஒட்டன்சத்திரம் நல்லசாமியை நியமித்தார். சமீபத்தில் திண்டுக்கல் மாநகரச் செயலாளராக ராமுத்தேவரை நியமித்தார். நிலக்கோட்டை ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ. தங்கதுரைக்கும் ராமுத்தேவருக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இப்பொழுது கேட்க வேண்டுமா?

19-08-18 மாலையில் திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மைக் பிடித்த எம்.எல்.ஏ. தங்கதுரை மாநகரச் செயலாளர் ராமுத்தேவரின் பெயரைத் தவிர்த்துவிட்டு மற்ற பெயர்களை உச்சரித்தார்... அவ்வளவுதான்... பிரச்சினைகள் கூச்சலாகி பிளாஸ்டிக் நாற்காலிகள் பறந்தன. வசவுகளோடு சவால்களும் கிளம்பின. ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்த தங்க தமிழ்ச்செல்வன் ""பிரச்சினையாளர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவோம்'' என்றார்.

இதுபோலவே சிவகங்கை மாவட்ட அ.ம.மு.க.விலும் மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி- மா.செ. கூத்தக்குடி உமாதேவன் இடையே மல்லுக்கட்டு.

-சக்தி