தமிழகத்திலேயே மிகவும் ரிலாக்ஸான அரசியல்வாதி என அறியப்படுபவர் சசிகலாதான். ஆனால், அவர் குடியிருக்கும் போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழகத்தையே கலக்கும் அரசியல் வியூகங்கள் ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் மிக முக்கியமான மைனஸ் ‘பாயிண்ட்டாக கருதப்படுவது தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.விற்கு இருக்கும் வாக்குகள் இழப்பு. கடந்த சட்ட மன்றத் தேர்தலிலும், நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தென் மாவட்டங்களில் மிகமோசமாக தோற்றது. ஒரு சில இடங்களில் டெபாசிட் இழந்தது. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நான்காவது இடத்துக்கே சென்றது. மறுபடியும் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டுமென்றால் இந்த பலவீனம் களையப்பட வேண்டும் என அ.தி.மு.க.வினர் அனைவரும் நினைக்கிறார் கள். ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரைச் சுற்றி இந்த வாக்கு சதவிகித இழப்பு அமைகிறது. இம்மூவரையும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி திரட்டினார். மொத்தம் 11 சதவிகித வாக்குகள் வாங்கிய பா.ஜ.க. அணியில் 8 சதவிகிதத்துக்கு மேல் இவர்கள் பெற்ற வாக்குகள் அடங்கும். இந்த வாக்குகள் எல்லாம் ஒரிஜினலாக அ.தி.மு.க.வின் வாக்குகள்.
எடப்பாடி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததி னால் பாதிக்கப்பட்ட சீர் மரபினர் உட்பட உள்ள முக்குலத்தோர்தான் அந்த 8 சதவிகித வாக்காளர்கள். வெறும் 3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தான் கடந்த முறை தி.மு.க. ஜெயித்தது. இந்நிலையில் இந்த 8 சதவிகித வாக்குகள் அ.தி.மு.க.விற்கு விழாமல் போனால் மேலும் அதிக சதவிகித வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோற்கும். அதற்காக எடப்பாடி, முக்குலத்தோர் இன அ.தி.மு.க. பிரமுகர்களை ஒருங்கிணைத்து வருகிறார். அவரது தென் மாவட்ட சுற்றுப்பயணம் ஓரளவுக்கு திருப்தியாக அமைந் தாலும் அவருக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. எடப்பாடியின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி தோற்கடிக்க பா.ஜ.க. முன்னாள் நிர்வாகியும், எஸ்.பி.வேலுமணியும் முயற்சி செய்கிறார்கள். செல்லூர் ராஜு தி.மு.க.விற்கு செல்லப் போகிறார் என வந்த செய்தியைத் தொடர்ந்து அவரை சுற்றுப்பயணத்தின் போது சந்தித்த எடப்பாடி தனது காரில் ஏற்ற மறுத்தார். இது முக்குலத்தோருக்கு எதிராக எடப்பாடி செயல்படுகிறார் என்கிற செய்தியை ஊதிப் பெரிதாக்கி விட்டது. அ.தி.மு.க. கூட்டணி யிலுள்ள தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பா.ம.க.வில் தந்தை -மகனுக்கு இடையிலே சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது. "முக்குலத்தோர் வாக்குகளை அ.தி.மு.க. இழப்பது சரியல்ல' என சீனியர் தலைவர்களே கருதுகிறார்கள்.
இந்த நிலையில், எடப்பாடிக்கு எதிராக அனைத்து ஆபரேஷன் களையும் ஒருங்கிணைப்பவர் சாட்சாத் சசிகலாதான். சசிகலாவின் கண் அசை வில்தான் அ.தி.மு.க.வின் எடப்பாடி எதிர்ப்பு தலைவர்களான எஸ்.பி.வேலு மணி, ஓ.பி.எஸ்., தங்கமணி, செங்கோட் டையன் ஆகியோர் இயங்குகிறார்கள். ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன் மூலம் நடிகர் விஜய் கட்சியுடன் பேசி வரு கிறார். தனிக்கட்சி துவங்கும் மூடில் இருக்கும் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி, கட்சி துவங்கினால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை தனது அணியில் சேர்த்துக் கொள்வதாக பேசிக்கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ்., நடிகர் விஜய்யுடனும் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகியுடனும் பேசுகிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து நடிகர் விஜயகாந்துடன் 2016-ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்தது போல ஒரு கூட் டணி அமைக்கத் தயாராகி வருகிறார்கள்.
சகோதரர் திவாகரன் மூலமாக அ.தி.மு.க.வினரிடமும் ஓ.பி.எஸ். மூலமாக மற்ற கட்சியினருடனும் சசிகலா பேசி வருகிறார். சசிகலாவின் ஆட்டத்தில் முன்னே நிற்கும் முதல் காய் பன்னீர்தான். பன்னீரை வைத்து கேம் விளையாடும் சசிகலா, எடப்பாடிக்கும் பா.ஜ.க.விற்கும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். "என்னை அ.தி.மு.க.வில் சேருங்கள், இல்லையென்றால் உங்கள் ஆட்டத்தைக் கலைப்பேன்'’என்கிற சசிகலாவின் கேமை முறியடிக்க, "ஆட்டத்தின் முக்கிய துருப்புச் சீட்டான பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி தனிக்கட்சி ஆரம்பிப்பதை தவிர்க்க என்ன செய்வது' என பா.ஜ.க.வின் மேலிடமும் எடப்பாடி யும் ஆலோசித்து வருகிறார்கள் என்கிறார்கள்” அரசியல் கூர் நோக்கர்கள்.
______________
இறுதிச்சுற்று!
ராகுல் தலைமையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான பேரணி!
சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் கட்சியோடு கூட்டணியமைத்து வாக் காளர்களின் வாக்குகளை திருடுவதாகச் சொல்லி, எப்படியெல்லாம் வாக்குகள் திருடப்படுகின்றன என விளக்கினார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையோ, விளக்கமோ அளிக்காத தேர்தல் ஆணையத்தை நோக்கி 1 கிலோமீட்டர் தூரம் 11-08-2025 அன்று பேரணி சென்று முழக்கங்கள் எழுப்ப இந்தியா கூட்டணி திட்டமிட்டது. திட்டமிட்டபடி பேரணி கிளம்பிய நிலையில்... டெல்லி போலீசார், பேரணியைத் தடை செய்தனர். இதையடுத்து ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனையும் காவல்துறை அனுமதிக்காமல் ராகுல், கனிமொழி, சுப்ரியா சுலே உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் எதிர்க் கட்சியினரை கைதுசெய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். போலீஸ் வாகனத்திலும் முழக்கங்கள் எழுப்ப டெல்லியே பரபரப்பானது.
-கீரன்
கொங்கு மண்டலத்தில் முதல்வர்!
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை (11-08-2025) விசிட்டடித்தார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு தமிழக அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது. திருப்பூர், உடுமலை நேதாஜி மைதானத்தில் நடந்த விழாவில், 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின். 182 கோடி மதிப்பில் 35 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 40 கோடியில் 7 தளங்களுடன் நவீனமாக கட்டப்பட்ட நியோ டைட்டல் பார்க்கை திறந்து வைத்தார். திருப்பூருக்கு வருவதற்காக முதல்நாள் கோவைக்கு வந்த முதல்வர், அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக திருப்பூருக்கு வேன் மூலம் பயணித்தார். அவருடன் அமைச்சர்கள் சக்கரபாணி, சாமிநாதன், முத்துச்சாமி, கயல்விழி மற்றும் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரும் வேனில் இருந்தனர்.
-இளையர்