ரஜினியின் அரசியல் துறவு அறிவிப்புக்கு பிறகு அடுத்த ஆப்ஷனாக சசிகலாவை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்த அதிகாரி ரூபா, கர்நாடகத்தின் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ரூபா உள்துறைச் செயலாளராக இருந்தால் சசிகலாவின் விடுதலையை எதிர்ப்பார் என சொல்லப்பட்டது. அந்த ரூபாவை உள்துறைச் செயலாளர் பதவியிலிருந்து, கைவினை பொருட்கள் உற்பத்தி துறைக்கு மாற்றிருக்கிறது எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பா.ஜ.க. அரசு.
""சசிகலாவின் விடுதலைக்கும் ரூபாவின் மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை மாற்றியது ஒரு சாதாரண மாற்றம்தான். ரூபா தேவையில்லாமல் சில நடவடிக்கைகளை ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்டார். அவரை உள்துறைச் செயலாளர் பதவியில் வைத்திருந்தால் ஆபத்து என ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்க்கொடி தூக்கினார்கள். அதனால்தான் அவர் மாற்றப்பட்டார் என சொல்லப்பட்டாலும், ரூபாவின் மாற்றம் சசிகலாவுக்காகச் செய்யப்பட்டது'' என்கிறார்கள் கர்நாடக அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடக சிறையில் இப்பொழுது சசிகலா கிட்டத்தட்ட விடுதலையாகி விட்டதைப் போல ஃப்ரீயாக நடந்து கொள்கிறார். அவரை சந்திக்க வருபவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்கா மல் கர்நாடக சிறை அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். (நெருக்கடி இருந்தபோதே வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு வந்தவராயிற்றே) தற்போது தேவையான அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் ரூபா உள்துறைச் செயலாளராக இருக்கும் பொழுது நடக்காத விஷயங்கள். அங்கிருந்தபடியே அனைவரிடமும் சசிகலா பேசுகிறார். அரசியல் நடவடிக் கைகளை மேற்கொள்கிறார். அதற்கு உதாரணமாக தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.
""எடப்பாடி பழனிசாமி சில தினங்களாக ஊடகங்களில் "வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற பெயரில் சில விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார். அதில் அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் எனக் கூறி வருகிறார். இந் நிலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென ஓ.பி. எஸ்.ஸும் ஒரு விளம்பரத்தை எடப்பாடிக்கு போட்டியாகக் கொடுத்தார். ஓ.பி.எஸ். என் கின்ற தலைவரின் பலம் சொல் அல்ல செயல். அவரின் வெற்றி அவருக்கானது மட்டுமல்ல மக்களுக்கானது. ஜெயலலிதா தான் நடத்திய ஆட்சிக்கு மட்டுமல்ல கட்சிக்கும் ஓ.பி.எஸ்.சையே பொருளாளராக்கி மாநிலத்தின் கஜானா பெட்டியின் கை சாவியோடு, அ.தி.மு.க.வின் பொருளாதார நிர்வாகத்தையும் ஓ.பி.எஸ் கரங்களிலேயே ஒப்படைப்பதன் மூலம் நேர்மைக்கும் கண்ணியத்திற்கும், நிர்வாகத்திறமை பெயர் பெற்றவர் ஓ.பி.எஸ். அவரை மூன்று முறை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார் என ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்.
திடீரென ஓ.பி.எஸ் இவ்வாறு ஒரு விளம்பரத்தை இ.பி.எஸ்.ஸுக்கு போட்டியாகக் கொடுத்திருப்பதன் மூலம் இ.பி.எஸ்.-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க பா.ஜ.க. மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.ஸும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்கிற நிலையை தமிழகம் முழுவதும் ஒரே ஒரு விளம்பரத்தின் மூலம் நிலைநாட்டி இருக்கிறார் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கொடுக்கும் விளம்பரங்கள் ஓ.பி.எஸ்.ஸை பாதித்திருக்கிறது என்பது மட்டுமல்லாமல், பா.ஜ.க.வின் குரலோடுதான் ஓ.பி.எஸ்-சின் குரலும் ஒத்துப் போகிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
இது இ.பி.எஸ்.சுக்கு எதிரான குரல் மட்டுமல்ல சசிகலாவுக்கு ஆதரவான குரல். சசிகலா வந்தால் அ.தி.மு.க.வில் எந்த மாற்றமும் இருக்காது என இ.பி.எஸ் சொல்லி வருகிறார். சசிகலாவைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாத ஓ.பி.எஸ் கட்சிக் கூட்டங்களில் பேசும்போது சசிகலா வந்தால் அ.தி.மு.க.விற்கு நல்லதுதான் என்று பேசி வருகிறார். சசிகலாவை வரவேற்பதுடன் சசிகலாவுடன் இணைந்து இ.பி.எஸ்க்கு செக் வைக்கிறார் ஓ.பி.எஸ் அதற்கு பாரதிய ஜனதாவின் மறைமுக ஆதரவும் இருக்கிறது என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.
இ.பி.எஸ்.சுக்கும் சசிகலாவுக்கும் இடையே உள்ள ஒரே ஒரு நெருடல் டி.டி.வி தினகரன்தான். அதனால் தான் டி.டி.வியை சைலன்ட்டாக்கி வைத்திருக்கிறார். வெளியே வரும் சசிகலா அ.தி.மு.க.விற்குள் பழையபடி நுழைய காத்திருக்கிறார். அதற்காக பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களுடன் பேசி வருகிறார். குருமூர்த்தி போன்றவர்கள் சசிகலா மறுபடியும் அ.தி.மு.க.விற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குருமூர்த்தியை மீறி அ.தி.மு.க.விற்கு வரும் வியூகத்தில் உள்ள சசிகலாவிடம் ஓ.பி.எஸ் ஏற்கனவே தூது அனுப்பி சரணடைந்துவிட்டார்.
இ.பி.எஸ்.ஸும், தினகரன் ஒதுக்கப்படுவாரேயானால் சசிகலாவை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்பது இ.பி.எஸ் சசிகலாவுக்கு வைத்திருக்கும் நிபந்தனை. இந்த விஷயத்தில் இன்னமும் முடிவெடுக்காத சசிகலாவை தூண்டும் விதத்தில் ஓ.பி.எஸ், நானும் முதல்வர் ரேஸில் இருக்கிறேன் என இந்த விளம்பரத்தை கொடுத்து அ.தி.மு.க.வில் முதல்வர் பதவி குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என தெரிவித் திருக்கிறார்.
இந்நிலையில், ""அ.தி.மு.க. இரண்டு பிரிவுகளாக பிரிந்து நிற்கிறது. எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டல நிர்வாகிகள் வேகமாக வேலை பார்க்கிறார்கள். அதேநேரத்தில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியப்பகுதியில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத் தைச் சார்ந்த அ.தி.மு.க. தலை வர்கள் வேலை பார்க்கிறார்கள். அ.தி.மு.க. நியமித்த வழிகாட்டு தல் குழு உறுப்பினர்களில் ஒருவர் கூட முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. ஆனால் கொங்கு வேளா ளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளராக வருவதை நாங்கள் விரும்பவில்லை'' என்கிறார்கள் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக வேலை செய்யும் தென் மாவட்ட அ.தி.மு.க.வினர்.
இந்நிலையில் ஓ.பி.எஸ்.சின் இந்த பா.ஜ.க ஆதரவு பெற்ற இ.பி.எஸ் எதிர்ப்பு நிலையை சசிகலா வகையறாக்கள் விரும்பவில்லை. ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு ஆதரவைத் தெரிவித்தாலும் அவர் பா.ஜ.க. சொல்படி கேட்பவர். பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், சசிகலா முன்பு கூவத்தூரில் நடந்த சம்பவங்களை மறக்க வில்லை. ஓ.பி.எஸ் போல வெளிப்படையான பா.ஜ.க. ஆதரவு நிலையை சசிகலா மேற்கொள்ளமாட்டார். பா.ஜ.க.வுடன் ஒருவிதமான அண்டர்ஸ்டாண்டிங் உடன் செயல்பட சசிகலா சம்மதித் தாலும் வெளிப்படையாக அ.தி.மு.க.வை பா.ஜ.க. கட்டுப்படுத்துவதை சசிகலா விரும்பவில்லை.
ஓ.பி.எஸ்.ஸையோ எடப் பாடியையோ பகைத்துக் கொள்ள வும் சசிகலா தயாராக இல்லை. தினகரனின் அ.ம.மு.க.வை அப்படியே வைத்து விட்டு அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட சசிகலா தயாராகி வரும் நிலையில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரையும் சம தூரத்தில் வைத்து அ.தி.மு.க.வை இயக்குவதைதான் அவர் விரும்புவார் என்கிறது அவரது சொந்த பந்தங்கள்.
இந்நிலையில், ""எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட வில்லையென்றால் ஓ.பி.எஸ் மூலம் கட்சியை மறு படியும் உடைப்போம். இ.பி.எஸ்.ஸும் சசிகலாவும் ஒன்றாகக் செயல்படட்டும் என ஒரு நகர்வையும், இ.பி.எஸ் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஓ.பி.எஸ் சசிகலாவும் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தையே முடக்குவோம் என்கிற இன்னொரு நகர்வையும் பா.ஜ.க. யோசித் துக்கொண்டு காய் நகர்த்தி வருகிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்