"சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குதான் பாதிப்பு. அ.தி.மு.க.வின் கொடியைப் பயன்படுத்தியதற்காக சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும்''’என்று சசிகலாவைக் குறித்துச் சொன்னார் எடப்பாடி.
"சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அரசியல் இயக்கத்தை நடத்துபவர்கள் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று ஓ.பி.எஸ். பொடி வைத்துப் பேசினார்.
சசிகலா ஆதரவு -எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்னிட்டு அ.தி.மு.க.வுக்குள் கருத்துவேறுபாடுகள் ஓப்பனாக வெளிப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி பசும்பொன் தேவரின் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வந்த ஓ.பி.எஸ்.ஸிடம் உதயகுமார், “"அண்ணே உங்களிடம் தனியாக எடப்பாடி பேசச் சொல்லியிருக்கிறார், பேசலாமா''’என்று அழைத்தார்.
"எதுவா னாலும், மதுரை அன்னபூர்ணா ஹோட்டலில் வைத்து ஓப்பனாக எல்லோர் முன்னாடி யும் சொல்லு''’என்று சொல்லி தென்மாவட்ட அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியம், பகுதி என்று அனைவரை யும் அழைக்க, அடுத்த ஒருமணி நேரத்தில் மதுரை மாவட்டச் செயலாளர்கள் ராஜன்செல்லப்பா, செல்லூர் ராஜு, உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ஜக்கையன் எம்.எல்.ஏ., செந்தில்நாதன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி, எம்.எல்.ஏ. பாஸ்கரன், மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், தேனி, திண்டுக்கல், பரமக்குடி, மானாமதுரை அனைத்து ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளார்கள் என அனைவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். கூட்டத்தில் நடந்ததை தயங்கியபடி நம்மிடம் பேசினார், அதில் பங்கேற்ற முக்கியஸ்தர் ஒருவர்.
"பா.ஜ.க. நமக்கு ஆதரவா இருப்பதா சொல்லி நம் கட்சியைச் சீரழித்துவிட்டது. என்னை முதல்வர் பதவியிலிருந்து சசிகலா விலகச் சொன்னப்பவே ஒழுங்கா விலகியிருந்தா, அவர் சிறைக்குப் போன நிலையில், நான்கு ஆண்டு கள் நான்தான் முதல்வரா இருந்திருப்பேன். தேவையில்லாம இந்த குருமூர்த்தி பேச்சைக் கேட்டு அம்மா சமாதியில் போய் உட்கார்ந்ததுதான் நான் செய்த பெரிய தப்பு. இப்ப என்னை எடப்பாடி மட்டுமல்ல… அவரை சுற்றி இருப்பவர்கள்கூட ஒழுங்கா நடத்தலை. கட்சிக்கு பொதுச்செயலாளரா எடப்பாடியை அறிவிக்க அவர்கள் தயாரா இருக்காங்க. அடுத்து என்ன செய்யலாம்னு நீங்களே சொல் லுங்க''’என கூடியிருந்த வர்களிடம் வினா எழுப்பினார் ஓ.பி.எஸ்.
"அண்ணே நீங்க சொல்ற மாதிரி சின்னம்மாமேல் எனக்கும் மதிப்பு இருக்கு. ஆனா, அந்த குடும்பம் அதிகாரம் செலுத்தும். நாம அடிமையாத்தான் இருக் கணும்''’என்று உதயகுமார் சொல்ல... அதை ஆமோதிப்பதுபோல் ராஜன் செல்லப்பா, செந்தில்நாதன், முனியசாமி ஆகியோர் தலையாட்டினர். ஓ.பி.எஸ். கோபமாகி, "இதுக்கு முன்னால எப்படி இருந்தோம்...… அப்ப கட்சி எப்படியிருந்தது. ரெய்டுக்கே இப்படி பயப்படுறீங்கன்னா ஜெயிலை நினைச்சு எப்படி பயப்படுவீங்க? எடப்பாடி இதையெல்லாம் தாங்குவாரா? சரி பகுதிச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என்ன சொல்றீங்க?''…என்று கேட்க... “"எங்களுக்கு ஒண்ணுமில்லண்ணே, நீங்க என்ன முடிவெடுத்தாலும் கட்டுப் படுறோம்''’என்றனர்.
"அப்படின்னா தலைமைக் கழகத்திலிருந்து அனைத்து கிராம, வட்டம், பகுதி, ஒன்றிய கழக உறுப்பினர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்புவோம். சின்னம்மாவை சேர்ப்போமா வேண்டாமா என்று அதில் எல்லோரும் கையெழுத்துப் போடட்டும். அதை வைத்து முடிவெடுப்போம்''’என்று ஓ.பி.எஸ். ஒரு யோசனையை முன்வைத்தார்.
"சின்னம்மாவுக்கு எதிரா மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றியபொழுது, நான் எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. எல்லோரும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுறேன்''’என அங்குமில்லாமல் இங்குமில்லாமல் செல்லூர் ராஜு பதில்சொல்ல, "மறுபடியும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கக்கூடாது. ஒருமித்த முடிவா எடுத்தாத்தான் சரியா இருக் கும்''’என்று நத்தம் விஸ்வநாதன் மனதைத் திறந்தார் என விவரித்தார்கள்.
ஜெயலலிதாவால் பாராட்டி முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த நபரை தனியாக சந்தித்து, ஆலோசனைக் கூட்டம் பற்றிக் கேட்டோம். சற்றுநேர தயக்கத்துக்குப் பின் பேசத் தொடங்கிய அவர், “"அ.தி.மு.க. பிளவுபடுவது கிட்டத்தட்ட நிச்சயமாகி விட்டது. ஓ.பி.எஸ். சின்னம்மா பக்கம் சாய்ந்தால் அதைச் சரிக்கட்ட முன்னாள் அமைச்சர் உதயகுமாரை கையிலெடுத்திருக்கிறார் எடப்பாடி.
‘கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வை சேர்த்துக்க சொல்லி தினகரன் தரப்புல டெல்லிக்குப் போனபோதெல்லாம் அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்த டெல்லி, இப்ப சசிகலா பக்கம் போகவேண்டாம். எடப்பாடிக்கு எதிரா போகாதீங்கனு அதிகமா அழுத்தம் கொடுக்கிறாங்க.
இப்படியே விட்டா ஒரு சமுதாயத்தோட கையில கட்சி போய்டும். சின்னம்மா சாதி பார்த்திருந்தா எடப்பாடியை முதல்வரா ஆக்கியிருப்பாரா?…மாநகராட்சித் தேர்தலில் சரியான அடி வாங்குவதற்குள் எல்லோரும் ஒன்றுபடவேண்டும்னு பலரும் சொல்கிறார்கள்’ என மனம்திறந்து பேசினார் ஓ.பி.எஸ்.
ஜக்கையன், செல்லூர் ராஜு, அன்வர் ராஜா, தென்மாவட்டத்தின் பெரும்பாலான ஒன்றிய, பகுதிச் செயலாளர்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். உதயகுமார் பக்கம் ராஜன் செல்லப்பா. முனியசாமி போன்றவர்கள் இருக்கிறார்கள்.. திண்டுக்கல் சீனிவாசன், பாஸ்கரன், நத்தம் விஸ்வநாதன் போன்றோர் யார் கை ஓங்குகிறதோ அவர்கள் பக்கம் போக ரெடி. சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை நோக்கிச் செல்கிறார் ஓ.பி.எஸ்.''’என்றார் அவர்.