ஹலோ தலைவரே, ரஜினி பாணியில் சசிகலாவும் அரசியல் துறவுங்கிற மனநிலைக்கு வந்துட்டாருன்னு அவர் தரப்பே சொல்லுது.''
""என்னப்பா இது? சிறையில் இருந்து சசிகலா ரிலீஸாகறதுக்கு முன்பே, அவர் வெளியே வந்து தமிழக அரசியலையே புரட்டிப் போடப் போறாருன்னு அவர் தரப்பு சொல்லுச்சே?''
""ஆமாங்க தலைவரே, அவங்க மட்டுமில்லை. இங்க இருக்கும் பெரும்பாலான ஊடகங்களும் பிரமாண்டமான பில்டப்பை அவருக்குக் கொடுத்துச்சு. அதேபோல் அவர் ரிலீஸாகி பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தப்ப, வழிநெடுக, ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்களால் அவர் அமர்க்களமா வரவேற்க பட்டார். இருந்தும் சசிகலாவை, கட்சித் தொண்டர்களோ, அ.தி.மு.க.வின் முக்கிய வி.ஐ.பி.க்களோ போய்ச் சந் திக்கவே இல்லை. இதில் அவர் திகைத்துப்போயிருந்த நிலையில்தான், 25-ந் தேதி அ.ம.மு.க. பொதுக் குழுன்னு ஒருகூட்டத்தைக் கூட்டினார் தினகரன். தங்கள் அணியின் முதல்வர் வேட்பாளர் தான் தான்னு டி.டி.வி.தினகரன் ஒரு தீர்மா னத்தை நிறைவேற்றி, சசிகலாவுக்கு ஹை வோல்ட் அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அப்செட்டான சசிகலா, தன் மன்னார்குடி சொந்தங்களிடம்... "என்னால் அ.தி.மு.க கொடி போட்ட காரிலும் வெளியில் போக முடியலை. அ.ம.மு.க. கொடி போட்ட காரிலும் வெளியே தலைகாட்ட விரும்பலை. இனி அரசியலே வேணாம்ங்கிற முடிவுக்கு நான் வந்துட்டேன்'னு கலக்கமாச் சொல்லியிருக் கார்.''
""ஓ... முதல்வர் கனவில் தான் தினகரன் பா.ஜ.க. விடம் டீலிங் பேசினாரோ?''
""ஆமாங்க தலைவரே, எம்.பி. தேர்தல் போல இந்த முறையும் தெஹ்லான் பாகவி தலைமையிலான எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் தங்கள் தேர்தல் கூட்டணி தொடருவதாக அறிவித்த தினகரன், பா.ஜ.க.வைத் தொடர்பு கொண்டு டீலிங் பேசியிருக்கிறார். அப்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மை முஸ்லீம் மக்களின் வாக்குகளை, வரும் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ யின் துணையோடு நான் பிரிக்கிறேன். இதனால் தி.மு.க. பலவீனமடைந்து தோல்வியைத் தழுவப்போகிறது. உங்களுக்கு இப்படி மறைமுகமாக உதவும் என்னை, கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்னு சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பா.ஜ.க. தரப்பு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், இதே கட்சியுடன்தானே கூட்டணி வைத்திருந்தீர்கள். அப்போதும் இதே கதையைத் தானே சொன்னீர்கள். ஆனால் ஒரு தொகுதியைத் தவிர எல்லாவற்றிலும் தி.மு.க. கூட்டணிதானே வெற்றிபெற்றது. அதனால் அதிகம் பேசாதபடி உங்கள் நாக்குக்கு பயிற்சி கொடுங்கள்னு, பட்டுன்னு பதிலடி கொடுத்து அவரை சைலண்ட் ஆக்கிடிச்சாம்.''
""காங்கிரசோடு தி.மு.க. தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்துச்சே?''
""தி.மு.க. தரப்பை சந்திக்கிறதுக்கு முன்னாடி, காங்கிரஸ் பிரமுகர்கள் என்ன மாதிரி பேசறதுன்னு சத்தியமூர்த்தி பவன்ல தங்களுக்குள் கூடி விவாதிச்சாங்க. இந்தக் கூட்டத்தில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, ரன்தீப் சுர்ஜித்வாலா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டவர்களும் கலந்துக்கிட்டாங்க. அந்தக் கூட்டத்தில் முதல் ஆளாகப் பேசிய மாணிக்கம் தாக்கூர் எம்.பி., ராகுல்காந்தியின் பிரச்சாரம் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு. அதனால், போன தேர்தலைப் போலவே இப்பவும் 41 சீட்டுக்களை நாம் கேட்டு வாங்கனும்னு வலியுறுத்த இதைப் பலரும் வழிமொழிய, சீனியர் தலைவர்களோ, 41-லேயே கறாரா இல்லாமல், கொஞ்சம் கூட கொறச்சி கொடுத்தாலும், அதை ஏத்துக்கிட்டு தி.மு.க.வுட னான கூட்டணியை உறுதிப்படுத்துவோம்னு சொல்லியிருக்காங்க.''
""சரிப்பா, காங்கிரஸின் எதிர்பார்ப்பு குறித்து, தி.மு.க என்ன என்ன சொன்னதாம்?''
""இப்ப இருக்கும் சூழ்நிலையில் தி.மு.க என்ன சொல்லப் போகுதோங்கிற கவலையோடுதான் காங்கிரஸ் தரப்பு அறிவாலயத்துக்குப் போயிருக்கு. பேச்சுவார்த்தையைத் தொடங்கும் போதே, இந்தத் தேர்தல் களம் வேற மாதிரி இருக்கு. அதனால், உங்க ளுக்கு 12 சீட்டுன்னு தி.மு.க. ஆரம்பிக்க, காங்கிரஸ் தரப்பு பகீர் ஆயிடிச்சி. அப்புறம் சரி, அதிகபட்சம் 18 வரை தரலாம்னு கறார் காட்டியிருக்கு தி.மு.க. இதுக்கு மேலன்னா, ஆலோசிச்சிட்டுச் சொல்றோம்னு அது சொல்லி அனுப்ப, காங்கிரசோ, 35 சீட்டாவது கொடுக்கனும்னு எதிர்பார்க்குது. தி.மு.க.வோ, காங்கிரசுக்கு அதிகமா கொடுத்தால், அது எதிரணிக்கு சாதகமா ஆயிடும்னு சில கணக்குகளைப் போட்டுச் சொல்லுதாம். காங்கிரஸ் உள்பட தி.மு.க கூட்டணி யில் உள்ள கட்சிகள் கணிசமா தொகுதிகளை எதிர் பார்ப்பதால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நிலவுது.''’’
""இதேபோல் தே.மு.தி.க.வோடு அ.தி.மு.க.வும் பேச்சு வார்த்தை நடத்தியதிலும் சிக்கலாமே?''
""ஆமாங்க தலைவரே, பா.ம.க.வோடு கூட்டணியை உறுதிசெய்த அ.தி.மு.க. தரப்பு, அடுத்து தே.மு. தி.க.வோடு பேசும் முடிவுக்கு வந்துச்சு. உடனே விஜயகாந்தைத் தேடி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் திடீர்னு கிளம்பிப் போனாங்க. அந்த சமயத்தில் கள்ளக்குறிச்சி கூட்டத் தில் பிரேமலதா இருந்தார். அவர் சார்பில் சுதிஷ்தான் பேசினார். தே.மு.தி.க.வுக்கு 10 சீட் தர எடப்பாடி முடிவெடுத்திருப்பதா அமைச்சர்கள் தரப்பு சொல்ல, இதனை ஏற்க மறுத்த சுதிஷ், பிரேமலதாவை தொடர்புகொண்டு பேசியிருக்கார். பிரேமலதாவோ, பா.ம.கவுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்பட்டதோ அந்த எண்ணிக்கை அளவுக்கு தே.மு.தி.க.வுக்கும் ஒதுக்கனும். கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டுக்கும் உத்தரவாதம் தரனும்னு சொல்லியிருக்கார். இதை அமைச்சர்கள் டீம், எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போக, அவரோ, ஆசைப் படறதில் தப்பில்லை; பேராசைப் படறதுதான் தவறு. விருப்ப மனு கொடுக்கக் கூட ஆள் இல்லாத அவங்களுக்கு 23 சீட்டான்னு கிண்டலாக் கேட்டிருக்கார்.''
""தேர்தல்ல சீட் வாங்குறதுக்கு அரசியல் கட்சிக் கூடாரங்கள்ல ஒரு பக்கம் தள்ளு முள்ளுன்னா, இன்னொரு பக்கம், சிலருக்கு சீட் கிடைச்சிடக் கூடாதுங்கிறதுக்கான காய் நகர்த்தல்களும் நடக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க., அ.தி.மு.க ரெண்டு கட்சிகள்லயுமே சிட்டிங் எம்.எல். ஏ.க்களுக்கு கட்சித் தலைமை சீட் கொடுத்துடக் கூடாதுன்னு சிலர் சிவப்புக் கொடி பிடிக்கிறாங்க. குறிப்பா, செங்கல்பட்டு தொகுதியில் இப்படியொரு முட்டல் மோதல் நடக்குது. அ.தி.மு.க., மா.செ.வும், எக்ஸ் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், இந்தமுறை இந்தத் தொகுதியைக் குறிவைத்து எடப்பாடியை அணுகியிருக்காராம். இது தெரிஞ்சதும் டென்ஷனான காட்டாங்குளத்தூர் ஒ.செ.வான கஜேந்திரன் தரப்பு, சீனியரான இவருக்குதான் சீட் ஒதுக்கனும்னு கொடி பிடிக்கிது. அதோட, தொகுதி மாறி வந்து சீட் கேட்கும் சிட்லபாக்கத்துக்கு சீட் ஒதுக்கக்கூடாதுன்னு கட்சித் தலைமைக்கு மனுமேல் மனுவா அவங்க தரப்பு அனுப்பிக்கிட்டு இருக்குது.''
""இதே தொகுதியில் தி.மு.க.விலும் பஞ்சாயத்து நடக்குதேப்பா?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. வரலெட்சுமிக்கு எதிராவும் லோக்கல் கட்சியினர் சிலர் கொடி பிடிக்கிறாங்க. எம்.எல்.ஏ.வா இருப்பது வரலட்சுமிதான் என்றா லும், தான்தான் எம்.எல்.ஏ.ங்கிற மாதிரி அவர் கணவரான மதுசூதனன், அதகளம் பண்றாருன்னு அறிவாலயத்துக்குப் புகார்கள் பறந்திருக்கு. மாவட்டத்தில் உள்ள பல மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கு அவர் மேன்பவர் ஏஜன்ஸியாம். அதை வைத்து, அந்தக் கம்பெனிகளுக்கு நெருக்கடி தருவதா புகார்கள் அவர்மேல் வைக்கப்படுது. இதைப் பார்த்த அறிவாலயம், அந்தப் புகார்களை விசாரிக்கும் பொறுப்பை ஆ.ராசாவிடம் ஒப்படைக்க, அவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து விசாரிச் சிருக்கார். எம்.எல்.ஏ. வரலட்சுமியோ, எனக்கு சீட் கிடைச்சிடக் கூடாதுன்னுதான் பொய்யா இப்படியெல்லாம் எங்கள் மீது புகார் எழுப்பறாங்கன்னு சொல்றார்.''
""அதுசரிப்பா, சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகர் சரத்குமாருக்கு, முன்னாள் கட்சிக்காரர் வடிவத்திலேயே சிக்கல் வருது போலிருக்கே?''
""அ.தி.மு.க கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்தப்ப சரத்குமாருக்கு, நெல்லை மாவட்ட ஆலங்குளம் தொகுதி ஒதுக்கப்படுவ தாகப் பேச்சு அடிபட்டது. அவர் அங்கே போட்டியிட்டால் அவருக்கு எதிராக, தட்சிண நாடார் சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஆர்.காளிதாசைக் களமிறக்க தி.மு.க முடிவு பண்ணிருக்குன்னு நாடார் சமூகத்தினர் மத்தியில் பேச்சு அடிபடுது. இந்த காளிதாஸ். ஏற்கனவே சரத்தின் கட்சியில் துணை தலைவராக இருந்தவர். கருத்து முரண்பாட்டால் அவர் தி.மு.க.வில் சேர்ந்துட்டார். அவருக்கு நெல்லை தொகுதியில் மட்டும் தனித்த செல்வாக்கில் 40,000 வாக்குகள் இருக்குதாம். சரத்தோ இப்ப அ.தி.மு.க கூட்டணி யிலிருந்து வெளியே வந்துட்டாரு. ஏற்கனவே சசிகலாவை சந்திச்சவர், அதற்கப்புறம் கமலை சந்திச்சார். இடையில், தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐ.ஜே.கே.வுடன் ச.ம.க.கூட்டணின்னு அறிவிச்சாரு. எந்த அணியின் ஆதரவில் அவர் போட்டியிட்டாலும் களம் சவால்தானாம்.''’
""தேர்தலுக்காக முத்தரையர் சமூகத்தை பா.ஜ.க. கையில் எடுக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, செல்வகுமார் தலைமையிலான முத்தரையர் முன்னேற்றக் கழகம் பா.ஜ.க. முருகனை அழைத்து மாநாடு நடத்தியது பற்றி நாம் சமீபத்தில் பேசிக்கிட்டோம். இதைத் தொடர்ந்து அந்த சமூகத்தினரின் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்ட பா.ஜ.க. அவர்களைக் கையில் எடுக்கும் முயற்சியில் இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமீத்ஷாவிடம் இக்கட்சி பற்றிப் பேசிய பா.ஜ.க. பிரமுகர்களான அண்ணாமலையும், நடிகை காயத்ரி ரகுராமும், உ.பி.யிலுள்ள சோம்நாத் ஆலயத்தை ஹோலி சத்ரியர்கள் பாதுகாத்தது போல, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்துக்கு பிரச்சனை வந்தபோது, அதைப் பாதுகாத்தது இந்த சமூகத்தினர்தான்னு எடுத்துச் சொல்லியிருக்காங்க. இதைக் கேட்ட அமித்ஷா, அந்தக் கட்சியை நம் கூட்டணியில் சேர்ந்து இரண்டொரு சீட்டுகளையும் ஒதுக்கலாம்ன்னு சொல்ல, இதனால் அக்கட்சி ஏக தெம்பில் இருக்கிறது.''
""சில்மிஷப் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸின் மீதான விசாரணைப் பிடிகள் இறுகுதாமே?''
""ஆமாங்க தலைவரே, பெண் எஸ்.பி.யிடம் முறைகேடாக நடந்துகொண்ட சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ், மீதான விசாரணைப்பிடிகள் இறுகியிருக்கு. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு, எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்ததோடு, கைது நடவடிக்கையில் இறங்கலாமாங்கிற ஆலோசனையில் இருக்குதாம். இந்த ராஜேஸ்தாஸின் ஒர்க்கிங் ஹிஸ்டிரியைப் புரட்டினால், எல்லாமே மக்களுக்கு எதிரான டெரர் நடவடிக்கையாவே இருக்குதாம். குறிப்பாக கொடியன்குளக் கலவரத்தின் போது, இவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண், நீ எல்லாம் ஒரு காவல் அதிகாரியான்னு காறித் துப்பியதால், அந்தப் பெண்ணைத் தலைமுடியைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினாராம்.''’
""ஆமாம்பா, அது பற்றி எனக்கும் சில தகவல்கள் கிடைச்சிருக்கு. அந்தப் பெண்மணியின் உறவினர்கள் 56 பேர் மீது ராஜேஷ்தாஸ் அப்ப பொய் வழக்கையும் பதிவுசெய்து அலைக்கழித்தாராம். இதையெல்லாம் இப்ப திரட்டிய மனித உரிமை அமைப்பினர், அமெரிக்காவில் இருக்கும் சர்வதேச மனித உரிமை ஆணையம் வரை, இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றிருக்குதாம்.''