அ.தி.மு.க. இரண்டு, மூன்று துண்டுகளாக பிளவுபடுமா அல்லது வலுவான ஒற்றைத் தலைமையான சசிகலாவின்கீழ் வருமா என ஒரு பெரிய விவாதம் அ.தி.மு.க.வில் நடந்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் மறைந்தார். அதற்கு எடப்பாடி இரங்கல் தெரிவிக்கவோ, அவரது வீட்டுக்கு சென்று துக்கம் விசாரிக்கவோ இல்லை. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் ஓ.பி.எஸ். வீட்டுக்கே சென்று துக்கம் விசாரித்தனர். அப்பொழுது எடப்பாடி பற்றி நிறைய குறைகளை ஓ.பி.எஸ்.ஸிடம் கொட்டிவிட்டு வந்தனர். அதேபோல், எடப்பாடிக்கு பிறந்தநாள் வந்தது. ஓ.பி.எஸ்ஸோ., வானதி சீனிவாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாரே தவிர, மருந்துக்கு கூட எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தலைமைக் கழகத்துக்கு வந்த எடப்பாடி, சென்னையின் மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசினார். தலைமைக்கழகத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள ஓ.பி.எஸ்.ஸை கூட்டத்திற்கு அழைக்கவில்லை. இப்படியெல்லாம் எலியும் பூனையுமாக ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் சண்டைபோட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
இதற்கிடையே அ.தி.மு.க.வில், தி.மு.க. ஆதரவு கோஷ்டி ஒன்று உருவாகிவிட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தி.மு.க. ஆட்சிக்கு ஒத்துழைப்பு என தலைமைச் செயலகத்தைச் சுற்றி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, துணைத்தலைவர் ஓ.பி.எஸ். என கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. கொறடா யார் என முடிவு செய்யத்தான் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் இ.பி.எஸ். தனியார் ஹோட்டல் என்கிற பொதுவான இடத்தில்தான் உங்களை சந்திப்பேன் என ஓ.பி.எஸ். விதித்த நிபந்தனையை ஏற்று இ.பி.எஸ். சந்தித்தார். அதற்காக ஓ.பி.எஸ்.ஸுடன் கருத்து வேறுபாடு இல்லை என சொல்லிவிட்டுப் போய் சந்தித்தார். இ.பி.எஸ்., கொறடாவாக வேலுமணியை நியமிக்கலாம் என்றார்.
ஓ.பி.எஸ்., கொறடாவாக மனோஜ் பாண்டியனை நியமிக்கலாம் என்றார். சந்தித்த பதினைந்தாவது நிமிடத்திலேயே காரசார விவாதம் எழ... முடிவெடுக்காமல் அந்த சந்திப்பு முடிந்தது என நடைபெறும் நிகழ்வுகளை விளக்கினார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். சந்திப்பின்போதும் இ.பி.எஸ். தனியாக சென்னை நகர மா.செ.க்களை அழைத்துப் பேசியபோதும் தவறாமல் இடம்பெற்ற சப்ஜெக்ட், சசிகலாவின் வருகை பற்றியதுதான். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான் என் கைக்காசை வேட்பாளர்களுக்குச் செலவு செய்தேன். அது போதவில்லை என வேட்பாளர்கள் சொந்தக் காசை செலவு செய்தார்கள். அதற்குக் காரணம், கட்சியின் பணம் கோடிக்கணக்கில் டிரஸ்ட் பணமாக இருக்கிறது. அந்த டிரஸ்ட் பணமெல்லாம் போயஸ் கார்டனில் ஜெ.வின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம்தான் உள்ளது. பூங்குன்றன் சசிகலாவின் கண்ட்ரோலில் இருக்கிறார்.
சசி நினைத்தால் கோடிக்கணக்கில் பணத்தை இறைக்க முடியும். கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்க முடியும். அதனால்தான் ஜெ. இருக்கும்போது எம்.எல்.ஏ. தேர்தலுக்கு கட்சி நிதி அளித்தது போல என்னால் தர முடியவில்லை. அதனால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட நிர்வாகிகள் சசிகலா வந்தால் பணம் தருவார் என எதிர்பார்க்கிறார்கள். அதையெல்லாம் செய்ய கட்சியை சசி கைப்பற்ற வேண்டும். அதற்கு முதல்கட்டமாக தலைமைக்கழகத்தை கைப்பற்ற முயற்சி செய்வார். எனவே சென்னை மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமைக் கழகத்தை, சசிகலா கையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என எடப்பாடி மனமுருகி பேசியிருக்கிறார்.
ஓ.பி.எஸ்.ஸிடம் பேசும்போது சசிகலாவால் தினகரன் இல்லாமல் செயல்பட முடியுமா? சசிகலாவின் சொத்துகள் எல்லாம் தினகரன் குடும்பத்தில்தானே இருக்கிறது... தினகரனின் அட்டகாசம் என்னவென்று தெரியாதா? அ.தி.மு.க. தலைமைக்கு வர நினைக்கும் சசிகலாவால் அ.ம.மு.க.வை கழட்டிவிட முடியுமா? சசிகலா வந்தால் அ.ம.மு.க.வில் மா.செ.வாக இருப்பவரிடம் அ.தி.மு.க. மா.செ. கைகட்டி நிற்கவேண்டி வருமே? என்றெல்லாம் சூடான கேள்வி எழுப்பிய எடப்பாடியிடம், "சசிகலா அ.தி.மு.க.வில் இல்லை என நீங்கள் அறிவித்துவிட்டீர்களே... பின்பு அதைப்பற்றி ஏன் பேசவேண்டும்?' என கடுப்படித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
உண்மையில் டி.டி.வி. பற்றி ஓ.பி.எஸ்.ஸும் சசிகலாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். டி.டி.வி.யின் அ.ம.மு.க. தனி, அ.தி.மு.க. தனி என்பதுதான் அந்த ஒப்பந்தம். அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் சேரலாம் என சசிகலா அறிவிப்பு வெளியிடுவார். அதன்படி அ.ம.மு.க.வினர் சாதாரண உறுப்பினர்களாக அ.தி.மு.க.வில் இணைவார்கள். டி.டி.வி. தினகரன் சேர்க்கப்படமாட்டார். சசிகலா பொதுச்செயலாளர், ஓ.பி.எஸ். துணை பொதுச்செயலாளர், வைத்திலிங்கம் இன்னொரு துணை பொதுச்செயலாளர்... இதுதான் ஒப்பந்தம்.
அதற்கு நேர்மாறாக எடப்பாடி பொதுச்செயலாளர் என தனி ஆவர்த் தனம் நடத்த தயாராகிவருகிறார். அதனால்தான் அ.தி.மு.க.வினர் பற்றியோ ஓ.பி.எஸ். பற்றியோ எந்த அறிக்கையும் அ.ம.மு.க.வினர் விடுவதில்லை. "இப்பொழுது நீ ஒதுங்கியிரு, உனது அரசியல் எதிர்காலம் பற்றி பின்னர் முடிவு செய்யலாம் என்பதுதான் சசிகலா தினகரனுக்கு விதித்திருக்கும் நிபந்தனை' என்கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள். அ.ம.மு.க.வின் ஐ.டி. விங்தான் சசிகலா- அ.தி.மு.க. தொண்டர்களின் பேச்சை வைரலாக்குகிறது.
அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களோ அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்குள் இந்த குழப்பங்கள் முடிவுக்கு வரவேண்டும் என மதில்மேல் பூனையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே 8 எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பி.எஸ். அணி என்கிற குரலும் அ.தி.மு.க.வில் கேட்கிறது. கட்சி விசுவாசமிக்க அ.தி.மு.க. தொண்டன் குழம்பிப்போய் வேடிக்கைப் பார்க்கிறான்.