"ஹலோ தலைவரே, ஓ.பி.எஸ். மனைவியின் மரண நிகழ்வு அ.தி. மு.க.வின் போக்கை திசைமாற்ற ஆரம்பிச்சிருக்கு.''”
"ஆமாம்பா, ஓ.பி.எஸ்.சிடம் சசிகலா துக்கம் கேட்கப் போன பிறகு, அந்தப் பக்கம் நிறைய சலனங்கள் தெரியுதே?''”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, ஜெம் மருத்துவமனையில் சசிகலாவை நேரில் பார்த்த நொடியிலேயே, ஓ.பி.எஸ். பழைய ஓ.பி.எஸ்.சா மாறிட்டார்ன்னு, அவர் தரப்பே சொல்லுது. ’"எதுக்கும் கவலைப்படாதீங்க... மனசைத் தளர விட்றாதீங்க'ன்னு சசிகலா சொன்னதும், தேம்பித் தேம்பி அழுதிருக்கார் ஓ.பி.எஸ். அப்பவே அவர், மனரீதியா சசிகலா பக்கம் செட்டில் ஆயிட்டார்ன்னு சொல்றாங்க. வர்ற 16-ந் தேதி தினகரன் குடும்பத் திருமணத்துக்கும், ஓ.பி.எஸ்.சுக்கு பர்சனலா அழைப்பு போயிருக்கு. நான் கட்டாயம் கலந்துக்கு வேன்னு, ஓ.பி.எஸ். சொல்லியிருக்காராம். இது தெரிஞ்சி, பகீர் ஆன எடப்பாடி, ஒரு தொழில் அதிபரை சசிகலாவிடம் தன் சார்பில் தூது அனுப்பி, நானும் உங்கள் விசுவாசிதான்னு சொல்லச் சொன்னாராம். சசிகலாவோ, அவர் முதுகில் குத்தியது வலி இன்னும் இருக்குன்னு சொல்லி, அவரது தூதை மறுதலிச்சிட் டாராம்.''”
"அடக்கொடுமையே, மாஜி மந்திரி வேலுமணியும் தி.மு.க. தலைமைக்கு சளைக் காமல் தூது விட்டுக்கிட்டு இருக்காரேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில் வசமாக சிக்கிக் கொண்டிருக்கும் வேலுமணி, எப்படியாவது தி.மு.க. தலைமையை மனம்குளிர வச்சிடணும்னு பரபரக்கிறார். முதல்ல அவருக்காக லாட்டரி அதிபரின் மனைவி களம் இறங்க, அவருக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கலையாம். அடுத்து, மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் மூலம் ஒரு முயற்சியை மேற்கொண்டார் வேலு. அதுவும் எடுபடலையாம். பின்னர் கிறிஸ்டிஃபுட் நிறுவனர்கள் மூலம் அமைச்சர் சக்கரபாணியை அணுகியிருக்கார். அதுவும் தோதுப்படாததால், கடைசியா அமைச்சர் துரைமுருகன் வீட்டுக் கதவையும் தட்டினாராம். தி.மு.க. தலைமையோ, யார் மூலம் வந்தாலும், நீங்க போக வேண்டிய இடம் வேறன்னு சொல்லி விட்டதாம்.''”
"பொள்ளாச்சி வழக்கில் புதுப்புது தகவல்களா வருதே?''”
"உண்மைதாங்க தலைவரே, பொள்ளாச்சி பாலியல் வில்லங்க விவகாரம் தொடர்பா, கைதான திருநாவுக்கரசு, சபரி, மணிவண்ணன், சதீஷ், வசந்தகுமாரன் உள்ளிட்ட குற்றவாளிகள் கோவை சிறையில் இருக்காங்க. அதே சிறையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் குற்றவாளியான சயானும் இருந்திருக்கிறார். அப்போது பொள்ளாச்சித் தரப்பினர் சயானிடம், நாங்க இதுவரை 200 பெண்களுக்கு மேல் வீழ்த்தி, அவர்களை ஆபாச வீடியோ எடுத்திருக்கோம். அப்படி நாங்கள் மடக்கும் ஒவ்வொரு பெண்ணின் படத்தையும், பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகனுக்கு அனுப்பி வைப்போம். அதில் அவருக்குப் பிடித்த பெண்களை மட்டும் ஆசையாக் கேட்பார். அவர்களை நாங்கள் மிரட்டிப் பணியவச்சி, அவருக்கு ஏற்பாடு செய்வோம்னு கதை கதையாகச் சொன்னதோடு, அந்த அரசியல் வாரிசின் வீக்னஸ் பாயிண்ட்டுகளையும் எடுத்து விட்டிருக்கிறார்கள். இதுவும் பல வகையிலும் பரவிக்கிட்டு இருக்குது.''”
"சங்கரமடத் திசையிலும் பரபரப்பு தெரியுதே?''”
"ஆமாங்க தலைவரே, ஒரு பாலசங்கராச்சாரியரை நியமிப்பதற்கான முயற்சிகள் அங்கே நடக்குது. மறைந்த சங்கராச்சாரியாரான ஜெயேந்திரர், தமிழ் பிராமணர். அவர், தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த விஜயேந்திரரை இளைய சங்கராச்சாரியராக முடி சூட்டினார். இப்போது பா.ஜ.க. தரப்பின் பிரஷராலும், ஆடிட்டர் குருமூர்த்தியின் விருப்பத்தின் பேரிலும் குஜராத்தைச் சேர்ந்த விஜய் மேத்தா என்பவரை, இளைய சங்கராச்சாரியாராக முடிசூட்டப் போகிறார்களாம். அவர், அண்மைக் காலமாக விஜயேந்திரருடன் இருந்து வருகிறார். ஆனால், இந்த நியமனம் குறித்த புகைச்சலும் சங்கரமடத் தரப்பில் இருக்குது.''”
"அ.தி.மு.க. கூட்டணி தர்மத்துக்காக வரிந்து கட்டி தி.மு.க. அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திய த.மா.கா.வின் அரசியல் வியூகம் என்னவாம்?''“
"தலைவரே.. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. எதிரியும் கிடையாது. அண்மைக்காலமாவே அ.தி.மு.க. தலைமை, த.மா.கா. தரப்பை மதிக்கிறதே இல்லையாம். இந்த நிலையில், கடந்த 30-ந் தேதி வாசனின் அப்பா-காங்கிரஸ் மூத்த தலைவரான ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினம் என்பதால், அதற்கு முதல்நாளே மூலக் கொத்தளத்தில், அவர் நினைவாகக் கால்பந்தாட்டப் போட்டியை நடத்தி, அதுக்கு அ.தி.மு.க. மாஜியான ஜெயக்குமாரை அழைச்சிருந்தார் வாசன். ஆனால், ஜெயக்குமார் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிச்சிட்டாராம். சரி, மறுநாளாவது மூப்பனார் நினைவிடத்துக்கு அவர் அஞ்சலி செலுத்த வருவார்ன்னு நினைத்திருக்க, அங்கும் அவர் போகலையாம். அதனால், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து த,மா.கா. வெளியேறணும்னு அவங்கக் கட்சி பிரமுகர்கள் வ-யுறுத்த ஆரம்பிச்சதோட, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கணும்னும் சொல்றாங்களாம்.''”
"ஓஹோ.''”
"இன்னும் சில த.மா.கா நிர்வாகிகள், தி.மு.க.வுடன் நாம் தோழமையாக இருந்த போது, ஒவ்வொரு வருசமும் ஸ்டாலின் அல்லது தி.மு.க தலைவர்கள் யாரேனும், ஓரிருவர் நம் முப்பனார் அய்யாவின் நினை விடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்துவாங்க. தி.மு.க.விடம் அந்த நாகரிகம் இருந்தது. ஆனால், கூட்டணியில் நாம் இருந்தும் அ.தி.மு.க. தரப்பு, இந்த நினைவு நாளைப் புறக்கணிச்சி, அவமானப்படுத்திடிச்சி. அதனால், இனியும் நாம் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வது நாகரீகமில் லைன்னு தூபம் போட்டிருக்காங்க. அதனால், வாசன் இப்போது ஆழ்ந்த யோசனையிலும் ஊசலாட்டத்திலும் இருக்காராம்.''”
"தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்போது, த.மா.கா.வுக்கு அங்கு இடம் கிடைக்குமா?''”
"இந்த சந்தேகம் த.மா.கா. தலைவர்கள் சிலருக்கும் இருக்கு. அதே சமயம், காங்கிரசுடன் தி.மு.க.வுக்கு கூட்டணி இருந்தாலும், சோசியல் டிஸ்டன்ஸை ஸ்டாலின் மெயின்டெய்ன் பண்றார். எனவே, ஸ்டாலினை நீங்கள் ஒரு முறை சந்தித்தால் அரசியல் சூழல் மாறும்னு வாசனிடம் அவர்கள் வலியுறுத்தறாங்களாம். இதற்கிடையே, மூப்பனாரின் நினைவு நாளை அ.தி.மு.க. புறக்கணித்த போதும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டவர்கள் மூப்பனாரின் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தியிருக்காங்க. த.மா.கா.வை பா.ஜ.க.வுக்கு இழுப்பதற்கான வெள்ளோட்ட முயற்சிதான் இதுன்னு, பரவலா டாக் அடிபடுது.''”
"தமிழக தகவல் தொழில் நுட்பத்துறையில் டிரான்ஸ்பர் தொடர்பான சலசலப்பு கிளம்பியிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, தகவல் தொழில் நுட்பத்துறையின் இ-கவர்னன்ஸ் ஆணையரகத்தில், டெக்னிக்கல் பிரிவுக்கான இணை இயக்குநராக இருந்தவர் அன்புச் செழியன். இவரை திடீர்ன்னு இடமாற்றம் செய்துவிட்டு, கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளராக இருந்த செல்வி வனிதாவை, அவர் இடத்துக்கு நியமிச்சிருக் காங்க. இதில் கொடுமை என்னன்னா, அன்புச் செழியன், காவல்துறையில் டெக்னிக்கல் பிரிவில் பணிபுரிந்த அனுபவசாலி. அதனால்தான் அவரை டெபுடேஷனில் இ-கவர்னன்ஸில் நியமிச்சிருந்தாங்க. ஆனால், வனிதாவோ, தொழில்நுட்ப அனுபவம் இல்லாதவ ராம். வேண்டிய அதிகாரி என்ற ஒரே காரணத்துக்காகத் தான் இப்படி இவரை இங்க கொண்டு வந்து ருக்காங்கன்னு பரவலா பேச்சு அடிபடுது. இதற்காகவே, விதி களைத் தளர்த்தி இந்த நியமனத்தை நடத்தி யிருக்காங்க.''
"இதே, தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இருக்கும் எல்காட்டிலும் ஒரு சர்ச்சை இருக்குதேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, இ-கவர்னன்ஸ் போல, இதே தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் எல்காட்டிலும் ஒரு பிரச்சினை புகையுது. எல்காட்டின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அஜய்யாதவ் ஐ.ஏ.எஸ். இவரது பி.ஏ.வாகவும், ஸ்டெனோவாகவும் இருந்தவர் ஜெகதீசன். அவரை உடனடியாக மாற்றிவிட்டு, எல்காட்டில் முக்கிய அதிகாரியாக இருந்த ஒரு பெண்மணியை, தனது பி.ஏ. மற்றும் ஸ்டெனோவாக நியமித்துக் கொண்டார் அஜய் யாதவ். இப்படி நியமித்துக்கொள்ளும் அதிகாரம் அவருக்கு இருந்தாலும், ஸ்டெனோவுக்குப் படித்த ஒருவரை அவர் நியமித்திருந்தால், கேள்வியே எழுந்திருக்காதாம். அதிகாரிகள் இஷ்டத்துக்கும் விளையாட றாங்க.''”
"இதே எல்காட் நிர்வாக இயக்குனர் மீது வேறுசில புகார்களும் வெளிப்பட்டதே?''’
"ஆமாங்க தலைவரே, நன்றாக இருக்கும் தனது அலுவலக அறையை சுமார் 30 லட்ச ரூபாய் செலவில் மாற்றி அமைச்சிருக்காராம் அஜய் யாதவ். எல்லாம் மக்களின் வரிப்பணம்தான். ஒரு துறையில் ஒரு அதிகாரி நீடிப்பது என்பது அரசு அவரை இடம் மாற்றம் செய்யும் வரைதான். ஆனால், ரிட்டையர் மெண்ட் வரை இதே எல்காட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு இப்படி செலவு செய்து சொகுசு அறையாக மாற்றியிருப்பது, விருந்தாளியா போன இடத்தில், திண்ணை கட்டி சுண்ணாம்பு அடிச்ச கதையா இருக்குன்னு நேர்மையான அலுவலர்கள் சொல்றாங்க. அதோட, அங்க இருந்த நூலக அறையை வேறு இடத்துக்கு மாத்திட்டு, அதை ஓய்வு அறையா மாத்தச்சொல்லி இருக்காராம். அரசுச் செலவுகளை பலவகையிலும் முதல்வர் ஸ்டாலின் குறைக்க முயன்றுவரும் நிலையில், இப்படிப்பட்ட அதிகாரிகளின் விரயச் செலவு, அரசுக்குக் கேடா ஆகுது. அதனால், தங்கள் அறையை மாற்றியமைக்க அதிகாரிகள் விரும்பினால், அதை அவர்களின் சொந்த செலவில்தான் செய்துக்கணும்னு, முதல்வர் உத்தரவு பிறப்பிக்கணும்னு, நேர்மையான அதிகாரிகள் ஆலோசனை சொல்றாங்க.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். அகில இந்திய காங்கிரஸின் சீனியர் தலைவரான குலாம் நபி ஆஸாத், தனது பொதுவாழ்வு குறித்து ஒரு புத்தகத்தை எழுதி வருகிறாராம். விரைவில் வெளியிடப்பட இருக்கும், அந்த நூலில், தான் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், தான் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் குறித்தெல்லாம் விரிவாக சொல்லப் போகிறாராம். காரசாரமான விமர்சனங்களும் இதில் இருக்கும் என்கின்றன டெல்லி பக்கம் இருந்து வரும் செய்திகள்''”