வி.எஸ்.டி. டயலாக்குடன் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான "மெர்சல்' படத்தை பா.ஜ.க.வினர் மெர்சலாக்கினர்.
இப்போது தீபாவளிக்கு ரிலீசாகியிருக்கும் விஜய்யின் "சர்காரு'க்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டது முதல்வர் எடப்பாடியின் சர்க்கார். திரு வல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தனது ஓட்டைப் போடுவதற்காக அமெரிக்காவி லிருந்து வருகிறார் விஜய். வாக்குச் சாவடிக்குள் நுழைந்த பிறகுதான் தெரிகிறது, அவரது ஓட்டை யாரோ போட்டுவிட்டார்கள் என்று.
இதனால் கோபமான விஜய், ஓட்டு எண்ணிக்கையின் முடிவை வெளியிட உயர்நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்குகிறார். ஆனால் முதல்வராக வெற்றி பெற்ற பழ.கருப்பையாவோ அவசர அவசரமாக பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்கிறார். அதற்கும் தடை வாங்குகிறார் விஜய். அதனால் முதல்வர் பழ.கருப்பையா, அமைச்சர் ராதாரவி, முதல்வரின் மகள் வரலட்சுமி ஆகிய மூவரும் இணைந்து விஜய்யை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
ஒரு காட்சியில் வரலட்சுமி யை "கோமளவல்லி' என்கிறார் விஜய். இது முன்னாள் முதல்வரை நினைவுபடுத்துகிறது. இன்னொரு காட்சியில் அமைச்சர் ஒருவர் தவழ்ந்து போய் வரலட்சுமியின் காலில் விழுவது அ.தி.மு.க. பாணியை ஞாபகப்படுத்துகிறது. ""அரசியல் ஆதாயத்துக்காக அளவுக்கு அதிகமான மாத்திரையைக் கொடுத்து என் புருஷனை சாகடிச்சது என்னோட மகள்தான்'' என வரலட்சுமியின் அம்மா துளசி பேசும் டயலாக், சமீபத்திய ட்ரீட்மெண்ட் மர்மத்தைச் சொல்கிறது. அதேபோல் கண்டெய்னரில் பணம் இருக்கும் சீன் டைரக்டாக அ.தி.மு.க.வை குறிவைக்கிறது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல், ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆவேசமாகும் காட்சியில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸே சீனில் வந்து இலவச மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை தீயில் தூக்கி எறிவார். இதுதான் ஜெ.வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடியை டென்ஷனாக்கியுள்ளது.
விளாத்திகுளம் இடைத்தேர்தல் சம்பந்தமாக நடந்த அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் மீடியாக்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ""அரசாங்கத்திற்கு எதிராக "சர்கார்' படத்தில் வரும் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையெனில் நீக்குவது குறித்து ஆலோசிப்போம்'' என ஆவேசத்தை ஆரம்பித்தார்.
இதற்கடுத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்தார். ஆல் இன் அழகு ராஜாவான அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் விஜய்க்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். நவ.08-ஆம் தேதி மதுரையில் சினிப்ரியா காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களைக் கிழித்து டென்ஷ னுக்கு பிள்ளையார் சுழி போட்டார் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா. காலை, மதியம் காட்சிகளை ரத்து செய்தது தியேட்டர் நிர்வாகம்.
மதுரை தகவல் கிடைத்ததும் கோவை சாந்தி தியேட்டர் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து விஜய் பேனர்களைக் கிழித்தனர். ஆரணியில் நான்கு தியேட்டர்களில் "சர்கார்' ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் ராஜேஸ்வரி தியேட்டர் முன்பு, ந.செ. அசோக்குமார், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வலது, இடதுகளான சங்கர், பாரி பாபு ஆகியோர் தலைமையில் 35 பேர் கூடி, விஜய் பேனர்களைக் கிழிக்க ஆரம்பித்தனர்.
எல்லா ஊர்லயும் கச்சேரி ஆரம்பிச்சாச்சு, தலைநகர் சென்னையில் சும்மா இருக்கலாமா என்ற குஷியுடன் காசி தியேட்டர் முன்பாக விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.ரவி தலைமையிலான படை குதித்தது. 20 அடி உயரத்தில் ஏறி விஜய் பேனரை அ.தி.மு.க.வினர் தாறுமாறாக கிழித்த போது, "பார்த்துப்பா கீழ விழுந்து அடிபட்டுடப் போகுது' என்ற ரேஞ்சுக்கு போலீசார் சாதுவாக இருந்தனர். தமிழகம் முழுவதும் விஜய்யின் சர்காருக்கு எதிராக அ.தி.மு.க.வினர் ஆக்ரோஷமானார்கள். விஜய் ரசிகர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.
நிலைமையின் போக்கை உணர்ந்து சர்காரின் தயாரிப்பாளர் சன் டி.வி.அதிபர் கலாநிதிமாறனும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசும் விஜய்யை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்திருக்கிறது. அதன் பின் கலாநிதி மாறன் எடுத்த சில ஆக்ஷன்களால், 08-ஆம் தேதி மாலையிலிருந்து ‘"சர்கார்'’ ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அ.தி.மு.க.வினர் அப்புறப் படுத்தப்பட்டனர். ஆனாலும் டென்ஷன் நீடித்த படியேதான் இருந்தது. தேனியில் அ.தி.மு.க.வினருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வசனம் பேசுகிறார் விஜய். அதேபோல் சமூகநீதியை நிலைநாட்டத்தான் இலவசங்கள் என்பது திராவிட இயக்கத்தின் சித்தாந்தம். இதற்கு எதிராக சன் டி.வி தயாரித்த படத்திலேயே காட்சி வைத்திருப்பதை தி.மு.க. மேலிடமும் ஒருவித அசௌகர்யமாக உணர்கிறது.
இதற்கிடையே விஜய் தரப்பில் மாலை நடந்த ஆலோசனையில் சம்பந் தப்பட்ட வசனத்தை "மியூட்' பண்ணவும் காட்சியை "கட்' பண்ணவும் முடிவெடுக்கப்பட்டது. இதை தியேட்டர் அதிபரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். காரணம், "மெர்சல்' படத்திற்கு சிக்கல் வந்தபோது, வசனத்தையும் காட்சியையும் நீக்கியதால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்தது. அதேபோல் "சர்க்காரு'க்கும் இருக்கும் என்பது விஜய்யின் நம்பிக்கை. இதேபோல் தனது பேனர்களைக் கிழிக்கும் அ.தி.மு.க.வினருக்கு தனது ரசிகர்கள் எதிர்வினை ஆற்ற வேண்டாம். ஆனால் அ.தி.மு.க.வினர்மீது சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கண்டிப்பாக புகார் கொடுக்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு ரியாக்ஷன் காட்டியிருக் கிறார் விஜய்.
8-ம் தேதி இரவு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் வீட்டிற்கு போலீஸ் படை போனதும் பரபரப்பானது. பாதுகாப்புக்குத்தான். கைது செய்ய இல்லை என விளக்கம் அளித்தார். டி.சி. அரவிந்தன். தணிக்கைக்குழு தணிக்கை செய்த படத்திற்கு எதிராக போராடுவதும் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்கு புறம்பானது. சட்டவிரோதமான இந்த செயலை. வன்மையாக கண்டிப்பதாக 8-ம் தேதி நள்ளிரவு தனது ட்விட்டரில் பதிவிட்டார் ரஜினி.
"சர்கார்' படம் பற்றிய நெகட்டிவ் கமெண்டுகளும், நெட்டில் தமிழ் ராக்கர்ஸ் சவால் விட்டு படத்தை வெளியிட்டதும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இரண்டு நாள் கலெக்ஷனுக்குப் பிறகு அ.தி.மு.க.வினர் மறியலில் இறங்குவதும், மந்திரிகள் மிரட்டுவதும் எதிர்ப்பின் அளவைக் கூட்டினாலும், அதையே விளம்பரமாக்கி தியேட்டர்களுக்கு ரசிகர் களை ஈர்க்கும் வியூகம் வகுக்கிறது "சர்கார்' படக்குழு.
-ஈ.பா.பரமேஷ்வரன், ராஜா, அருள்குமார், அண்ணல்
படம்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின்
___________________
அவமதிப்புகளும் அறியாமையும்!
திரையில் தோன்றும் முதல் காட்சியிலேயே குடியும் கும்மாளமுமாக அறிமுகமாகிறார் விஜய். பத்திரிகையாளர்கள் சந்திப்பு காட்சியில் ""இங்க இருக்கும் பாதிப் பேர் முட்டாள்கள்'' என்கிறார். பத்திரிகையாளர்கள் உஷ்ணமானதும் ""இங்க இருக்கும் பாதிப் பேர் அறிவாளிகள்'' என்றதும் வழிகிறார்கள் பத்திரிகையாளர்கள். ""நான் முதல்ல சொன்னதத்தான் இப்பவும் சொன்னேன், ஆனா கொஞ்சம் மாத்தி சொன்னேன்'' என மீண்டும் பத்திரிகையாளர்களை அவமதிக்கிறார். "கத்தி' படத்திலும் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் காட்சி ஒன்று இருக்கும்.
இன்னொரு காட்சியில் விஜய்யிடம் அவரது கார் டிரைவர், “""பிரச்சனை நடந்தா மக்கள் அதை வாட்ஸ்-அப்பில் ஷேர் பண்ணுவாங்க. அதை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் பண்ணுவாங்க. அப்புறம் அதைவிட்டுட்டு அடுத்த பிரச்சனைக்குப் போயிருவாங்க'' என்றதும் எகத்தாளமாக சிரிப்பார் விஜய். ஆஸ்பத்திரி சீன் ஒன்றில் பேசும் விஜய், டெங்கு பரவுவதற்கு கொசுதான் காரணம். அந்தக் கொசுவை ஒழிக்கத் தவறிய பொதுப்பணித்துறை என்பார். இது சுகாதாரத்துறையின் கீழ் வருவது என்பது சாதாரண ஜனங்களுக்கும் தெரியும். ஆனால் அறிவாளி விஜய்க்கும் "திருட்டு' முருகதாசுக்கும் வசனம் எழுதிய ஜெயமோகனுக்கும் தெரியாமல் போனதுதான் காமெடி. க்ளைமாக்ஸ் சீனில் வாக்குப்பதிவு நாளன்று “""அடையாளம் அட்டையை எடுத்துக்கிட்டு எல்லோரும் ஓட்டுப் போட போங்கடா''’’என ஒட்டு மொத்த தமிழக மக்களையும் ஒருமையில் அவமதிக்கிறார் விஜய்.