தீபாவளிக்கு ரிலீசான "சர்கார்' திரைப்படம் நிகழ்கால அரசியல் மீதான பல்வேறு விமர்சனங்களைப் பற்ற வைத்திருக்கிறது. அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகளைக் கிளப்பியிருக்கிறது. இதுபற்றி தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா மற்றும் வி.சி.க. துணைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
பழ.கருப்பையா :
இலவசங்கள் கொடுக்கக் கூடாதென்கிற காட்சியை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களே?
டாஸ்மாக் மூலம் கணவனுடைய பணத்தை களவாடி, அவரது மனைவிக்கு இலவசமாக மிக்ஸி, கிரைண்டர்களைக் கொடுக்கிறார்கள். பஸ் கட்டணத்தைக் குறைக்காமல் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுப்பதும், விவசாயத்தை மேம்படுத்தாமல் இலவச அரிசி கொடுப்பதும் அந்த வகைதான். மக்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொ
தீபாவளிக்கு ரிலீசான "சர்கார்' திரைப்படம் நிகழ்கால அரசியல் மீதான பல்வேறு விமர்சனங்களைப் பற்ற வைத்திருக்கிறது. அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகளைக் கிளப்பியிருக்கிறது. இதுபற்றி தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா மற்றும் வி.சி.க. துணைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
பழ.கருப்பையா :
இலவசங்கள் கொடுக்கக் கூடாதென்கிற காட்சியை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களே?
டாஸ்மாக் மூலம் கணவனுடைய பணத்தை களவாடி, அவரது மனைவிக்கு இலவசமாக மிக்ஸி, கிரைண்டர்களைக் கொடுக்கிறார்கள். பஸ் கட்டணத்தைக் குறைக்காமல் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுப்பதும், விவசாயத்தை மேம்படுத்தாமல் இலவச அரிசி கொடுப்பதும் அந்த வகைதான். மக்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிற அடிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தால் இலவசத்தின் தேவை இருக்காது.
சர்கார் திராவிட இயக்க எதிர்ப்பைப் பேசுகிறதா?
இன -மொழிக்கொள்கை, தேசிய -இந்தி எதிர்ப்புக் கொள்கை, திராவிட இயக்கக் கொள்கை போன்ற ஆகச்சிறந்த கொள்கை களைப் பெற்றிருக்கும் ஒரு கட்சி, காலப்போக்கில் அழுக்கடைகிறது. அது தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டிய தேவையை இதுபோன்ற படங்கள் உருவாக்குகின்றன.
அரசியல் சார்பற்ற சமூக ஆர்வலர்களை ஆட்சிக்குக் கொண்டுவரும் தீர்வு சரியானதா?
ஒரு அமைப்போ, சின்னமோ இல்லாமல் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்களை ஒருங்கிணைக்கும், மந்திரி சபை அமைத்து முதல்வரைக் கைகாட்டும் சக்தியாக விஜய் இந்தப் படத்தில் இருக்கிறார். ஆனால், தங்களுக்கென்று ஒரு கொள்கை இல்லாத, ஒருங்கிணைக்கும் சக்தியான அரசியல் கட்சி இல்லாதபோது அது செயல்முறை சாத்தியமற்றது.
விஜய்யின் அரசியல் எண்ட்ரிதான் மையச் செய்தியாக தெரிகிறதே?
அவருக்கு அரசியல் வேட்கை இருக்கிறது. நிகழ்கால அரசியல் சரியாக இல்லையென்கிற கருத்து இருக்கிறது. கலைஞர் போன்ற போராளியாகவும், காமராஜர் போன்ற தியாகியாகவும் இருப்பவர்கள்தான் முதல்வராக முடியும் என்ற நிலை இல்லையென்றால், எடப்பாடி போன்றோருக்கு அது வாய்க்குமென்றால், விஜய் வருவதற்கு என்ன அடிப்படைத் தகுதி வேண்டும்?
ஆளூர் ஷாநவாஸ்
ஊழல் அரசியல்வாதிகளை நீக்க வேண்டும் என்று சொன்னது தவறா?
ஆளும், ஆண்ட கட்சியை விமர்சிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல்வாதி களுமே மோசமானவர்கள் என்று சித்தரிக்க முயல்வது தவறானது.
இலவசங்கள் தேவையில்லை என்று சொல்வதில் என்ன பிரச்சனை?
மிக்ஸி, கிரைண்டர்களை முருகதாஸே தீயிலிட்டு எரிக்கிறார். இலவசம்தான் பிரச்சனையென்றால் 108 ஆம்புலன்ஸை தூக்கிப்போட்டு எரிக்கலாமே. ஓட்டுக்குப் பணம் கொடுப் பதையும், மக்கள்நலத் திட்டங் களையும் ஊழல் என்ற ஒரே கோட்டில் நிறுத்த முயற்சிக்கும் அயோக்கியத் தனம்தான் இது. மக்கள் தங்களுடைய உரிமைகளைத்தான் இலவசமாகப் பெறுகின்றனர்.
அடிப்படை உரிமைகளைக் கூட இலவசமாகப் பெற வேண்டிய நிலையில்தான் தமிழகம் இருக்கிறதா என "சர்கார்' கேட்கிறது?
கல்வி, வேலைவாய்ப்பு, பொது சுகாதாரம், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை என எல்லாவற்றிலும் தன்னிறைவு அடைந்த புரட்சிகரமான மாநிலம் தமிழ்நாடு. மனிதநலக் குறியீடு, சமூகநலக் குறியீடு என எதில் நாம் குறைந்துவிட்டோம்?
தங்கள் மீதான தவறுகளைச் சுட்டிக் காட்டியதால் அரசியல்வாதிகள் கோபப் படுகிறார்களா?
கருத்தியல் நீக்கம் செய்வதாலேயே நாங்கள் கோபம் கொள்கிறோம். வெறும் ஊழல் ஒழிப்பு என்கிற பெயரில் திராவிட இயக்க அரசியலின் சமூகநீதித் திட்டங்களை எல்லாம் கூட்டாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுவொரு நுட்பமான கார்ப்பரேட் அர சியல் என்பதால் தீவிரமாக எதிர்க்கிறோம்.
விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு "சர்கார்' எந்தளவுக்கு உதவும்?
"சர்கார்' சிக்கலையும், பின்னடை வையுமே விஜய்க்கு ஏற்படுத்தும். சமூகநீதி அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்நாடு கடந்துவந்த பாதையை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். ஊழல் ஒழிப்பு என்ற மேம்போக்கான அரசியலைப் பேசாமல் சமூகநீதி அரசியலையும், மதவாத-சாதிய வாத எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுத்தால் மட்டுமே தமிழக அரசியலில் வெல்ல முடியும்.
சந்திப்பு: -பெலிக்ஸ்
தொகுப்பு: -ச.ப.மதிவாணன்