பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் என அனைவ ரிடமும் ஒன் டூ ஒன் பேசக்கூடிய, விவாதிக்கக் கூடிய பவர்ஃபுல் நபரான பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் கடந்த வாரம் சென்னையில் நடந்த தமிழக பா.ஜ.க.வின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் காரசாரத்துக்குப் பஞ்சமில்லை.

Advertisment

இதில், பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த்மேனன், சுதாகர்ரெட்டி, கேசவ விநாயகம், நயினார்நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், சக்ரவர்த்தி, டால்பின் ஸ்ரீதர், கராத்தே தியாகராஜன், சரத்கு மார், குஷ்பு, கரு.நாகராஜன், மாஜி தலைவர் அ...மலை உள்பட மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தி 5 அமர்வுகளாக இந்த கூட்டம் நடந்தது.  காலை 11 மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் டீ பிரேக்கும், மதியம் 1:30க்கு உணவு இடை வேளை யும் என புரோக்ராம் திட்டமிடப்பட்டிருந்தது.  

வரவேற்பு நிகழ்ச்சியிலேயே பி.எல்.சந்தோ ஷின் கோபம் வெடித்தது. அதாவது, அனைவரை யும் வரவேற்றுப் பேசிய கரு.நாகராஜன், ஒவ் வொருவரின் பெயரையும் சொல்லியபோது, அ...மலையின் பெயரையும் சொல்லி வரவேற்றார். அதைக்கேட்டு டென்சனான பி.எல்.சந்தோஷ் குறுக் கிட்டு, "அவர் (அ...மலை) எங்கே இந்த கூட்டத் துக்கு வந்திருக்கிறார்? வராத நபரை எப்படி நீங்கள் வரவேற்கலாம்? எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிப்பீங்களா? நீங்க, கோட்டப் பொறுப்பாளர் தானே? உங்களுக்கென யோசனை எதுவும் இல்லையா? கூட்டத்துக்கு வராத நபரை வரவேற் பது என்ன அரசியல்?' என்று கோபமாக கடிந்து கொள்ள... கரு.நாகராஜனுக்கு வியர்த்துவிட்டது.  

அவரின் கோபம் இந்த கூட்டத்துக்குச் சொல்லும் மெசேஜ் என்பதால் மொத்த கூட்டமும் அதிர்ச்சியுடன் அமைதியாக இருந்தது. மேலும், அ...மலையின் பெயரைச் சொன்னாலே கூட்டத்தில் கைத்தட்டல் எழும். இந்தமுறை அந்த கைத்தட்டலும் எழவில்லை. பி.எல்.சந்தோஷின் கோபத்தின் தாக்கம் இது. 

Advertisment

கூட்டத்தைப் புறக்கணிக்கும் நோக்கத்தில், "தனக்கு டெங்கு காய்ச்சல்; அதனால் கூட்டத்துக்கு வர இயலாது' என தெனாவெட்டாகத் தெரிவித்து கூட்டத்தைத் தவிர்த்திருந்தார் அ...மலை. இதனையறிந்திருந்த பி.எல்.சந்தோஷ், டீ பிரேக் நேரத்தில்... அ...மலையின் வீட்டுக்குச் சென்று, "உங்க நாடகம் என்னென்னு எனக்குத் தெரியும், கட்சியை விட்டு வெளியேறுவதாக நீங்க சொல்லிக்கிட்டிருப்பதும், உங்க ஆட்களை வெச்சு பரப்புவதும் தெரியும். உங்க அரசியலை அமித்ஷாவிடம் காட்டாதீங்க. உங்களால தாங்க முடியாது. யாரை மிரட்ட இந்த அரசியலை செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள செக்யூரிட்டியை (பாதுகாப்பு) வித்ட்ரா பண்ண வேண்டியதிருக்கும்''’என்று கடுமையாக எச்சரித்தார். அவரின் எச்சரிக்கை யிலும், மிரட்டலிலும் மிரண்டுபோன அ...மலை, அடுத்த 15-ஆவது நிமிடத்தில் கூட்டத்துக்கு ஓடோடிவந்துவிட்டார். மாலையில் அ...மலை கலந்து கொண்டதாக பத்திரிகைகள் எழுதின. ஆனால், அவர் காலையில் நடந்த மூன்றாவது அமர்விற்கே வந்துவிட்டார். அப்போது, தேர்தல் பிரச்சார அமர்வு தொடங்கியது. 

இதில் பேசிய பலரும், "தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க (விஜய்) கட்சிகளெல்லாம் மக்களை சந்திக்கத் தொடங்கிவிட்டன. பா.ஜ.க. இன்னும் ஸ்டார்ட்டே ஆகலை' என்றெல்லாம் விவரித்தனர். அப்போது, பவர் பாயிண்ட் பிரசன்டேசன் மூலம் பேசிய அ...மலை, "நயினார் நாகேந்திரனும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்பவேண்டும்' என கோரிக்கை வைத்தார். யாரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. காரணம், வாயாலேயே வடை சுடுவதில் அ...மலை  கில்லாடி. நடைமுறைக்கு அவரது பேச்சு எந்த வகையிலும் உதவாது. அதனாலதான் அவருக்கு வாழப்பாடியின் பேரன்னு ஒரு பட்டப்பெயர் இருக்குது' என்கின்றனர். 

பூத் கமிட்டி அமர்வில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், விஜய்யின் சுற்றுப் பயணத்தில் கூடும் கூட்டத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு, "விஜய்க்கு வரும் கூட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்றார். இதற்குப் பதிலளித்த சரத்குமார், "கூட்டம் கூடுவதை மட்டுமே வைத்து எடை போடக்கூடாது. கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமெனில் தி.மு.க.தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கும். நான் கட்சி ஆரம்பிக்கும்போதும் அதன் பிறகும் எனக்குக் கூடாத கூட்டமா? அதனால், விஜய்யை பற்றி அலட்டிக்கத் தேவையில்லை''’என்றார்.

Advertisment

அப்போது எழுந்த கராத்தே தியாகராஜன், "சரத்குமார் சொல்வது சரி. அவருக்கு தேர்தல் பல்ஸ் தெரியும், சரியாக கணிக்கக்கூடியவர். ஜெயலலிதா பர்கூரில் போட்டியிட்டபோது அவர் தோற்பார் என கலைஞரிடம் முதன்முதலில் சொன்னவர் சரத்குமார். கலைஞரே அதை நம்ப வில்லை. "எப்படிச் சொல்றே' என கேட்டார். அதற்கு பல விசயங்களைச் சொன்னார். அதே போலவே, தேர்தல் ரிசல்ட் வந்தபோது ஜெயலலிதா தோற்றார். சரத்தின் தேர்தல் கணிப்பை கலைஞர் பாராட்டினார். நம் கட்சியில் பலரையும் பயன்படுத்தாமல் இருக்கிறோம். அவர்களின் வலிமை வேஸ்டாகிறது. சரத்குமார், குஷ்பு போன்றவர்களை சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.  அதேபோல, தமிழகத்தை பெரியார் மண் என சொல்கிறார்கள். அந்த பெரியாருக்கே நிதி உதவி செய்தவர் எம்.ஆர்.ராதா. அவரின் மகன் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இருக் கிறார். ஆனால், அவரையும் பயன்படுத்த நமது கட்சி தவறிவருகிறது. சரத், ராதாரவி, குஷ்பு போன்ற வர்களை சீரியசாக பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

இந்த நிலையில் கூட்டத்தின் அனைத்து அமர்வுகளும் முடிந்து இறுதியில் பேசிய பி.எல்.சந்தோஷ், ’"தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருக்கிறது. ஆனால், ஒருத்தர்கூட கோரிக்கை எடுத்துக்கொண்டு வருவதில்லை. வானதி, தமிழிசை மாதிரி சிலர்தான் வருகின்றனர். கட்சியின் வளர்ச்சிக்காக, உங்களின் வளர்ச்சிக்காக என்னை வந்து பாருங்கள். அமைச்சர்களிடம் அப்பாயிண்ட் மென்ட் வாங்கித் தருகிறேன். அவர்களை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை சொல்லுங்கள். மேற்கு வங்கத்திலும் கேரளவிலும் ஆளும் கட்சியோடு வீதியில் இறங்கி பா.ஜ.க. சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் நீங்கள் சோசியல் மீடியாவில் மட்டும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இப்படியிருந்தால் எப்படி மக்களிடம் பா.ஜ.க. போய்ச்சேரும்? கட்சி ஜெயிக்கும்? நீங்களும் கீழே இறங்கி சண்டை போட வேண்டும்''’என்று உசுப்பேத்தி கூட்டத்தை முடித்திருக்கிறார் பி.எல். சந்தோஷ்.