தனியார்மயத்திற்கு எதிராக சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் அதிர்வுகள் அடங்கும்முன், தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கக்கூடாது, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், பண்டிகைக் காலங்களில் போனஸ் வழங்கவேண்டும், பணிச்சுமையை குறைக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரையில் சி.ஐ.டி.யு., எல்.பி.எஃப்., எல்.எல்.எஃப். நிறுவனங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழி லாளர்கள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி மதுரை மாநகராட்சி தலைமையகத்தில் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மேயர், மாநகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் தனியார் நிறுவனமான அவர்லேண்ட் நிறுவனத்தின் இயக்குனர் சிவகுரு மற்றும் துணை இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியடைந்ததால், மாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் போலீசாரால் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைதுசெய்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
மதுரையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகளிலும் போராட்டம் வெடிக்கும் என்று சி.ஐ.டி.யு. மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருப்பது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை சி.ஐ.டி.யு. துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியத்திடம், "ஏன் சென்னையைத் தொடர்ந்து மதுரை, திருப்பூர் என தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனை வேகமெடுக்கிறது, தனியாரிடம் ஒப்படைக்கும் முறை கடந்தகாலங்களிலும் உள்ள நடைமுறைதானே, அதில் வேறெதுவும் வேறுபாடுள்ளதா?''’என்று கேட்டோம்.
அதற்கு அவர், "துப்புரவுத் தொழிலாளிக்கு ஒருநாள் 752 ரூபாய் ஊதியம் கொடுக்கவேண்டும். ஆனால் மதுரை மாநக ராட்சி கொடுக்கக்கூடிய சம்பளம் 594 தான். மதுரை மாநக ராட்சியின் மொத்த மக்கள்தொகை 20 லட்சம். துப்புரவுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 3,327 பேர் மட்டும்தான். அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் 130 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இதே நிறுவனம்தான் கோவை யிலும், திருப்பூரிலும், சென்னையிலும் ஒப்பந்தம் எடுத்துள்ளது. தற்போது நடந்த போராட்டத்தின்போது இரண்டாம் நாள் மதுரை மாநகராட்சியின் உயரதிகாரிகள் மேயர், கமிஷனர் ஆகியோர் முன்னிலையில் ”அவர்லேண்ட்’டின் எம்.டி. சிவகுரு தியாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை யில் கலந்துகொண்டு எங்களது கோரிக்கை கள் ஒன்றைக்கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். "நாங்கள் மதுரை மாநகராட்சியோடு எந்த ஒப்பந்தமும் போடவில்லை. நாங்கள் தமிழ்நாடு நகராட்சி இயக்குனரகத்தோடு தான் ஒப்பந்தம் போட்டுள்ளோம். எங்களை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது' என்று அவர்கள் சொன்னதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்துதான் காவல்துறை அத்துமீறி எங்கள் தொழிலாளர்களைக் கைதுசெய்தனர். தற்போதைய அரசின் அதிகாரிகள் எடுத்த தவறான முடிவுதான் இதற்குக் காரணம். தி.மு.க. அரசோ, முதல்வரோ எவ்வளவோ திட்டங்களை வகுத்து மக்களுக்கு நல்லதுசெய்ய நினைத்தாலும் அதிகாரிகள் அதிமேதாவித்தனமாக சில தவறான முடிவுகளை எடுத்து அரசை தவறாக வழிநடத்திவிடுகிறார்கள்.
இவ்வளவு காலமாக தமிழ்நாட்டில் இருக்கும் 25 மாநகராட்சிகளில் ஒவ்வொரு மாநகராட்சியும் தனியாரிடம் கையளிக்கப்பட... அவுட்சோர்ஸிங் முறையில் ஒப்பந்தங்கள் போட்டன. ஆனால் தற்போதைய அரசு சில அதிகாரிகளின் ஆலோசனை யின் பேரில், அந்தந்த மாநகராட்சிகள் நேரடியாக தனியாரிடம் ஒப்பந்தம் போடும் அதிகாரத்தைப் பறித்ததுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். இதற்கு முன் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநகராட்சியும் நேரடியாக தனியார் நிறுவனங்களைத் தேர்ந் தெடுத்து அரசின் அரசாணைப்படி தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், போனஸ் விசயங்களில் கைவைக்காதபடி மாநகராட்சி
கவுன்சிலில் தீர்மானம்போட்டு அவுட்சோர்ஸிங் முறையில் தனியார் கம்பெனியிடம் ஒப்பந்தம் போடும். அதனால் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் உயரதிகாரிகளோ, மேயரோ நேரடியாகத் தலையிட்டு பிரச்சனையை முடித்துவைப்பார்கள். அதற்கு அந்த தனியார் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறொரு நிறுவனத்திற்கு மீண்டும் கொடுக்கலாம். அந்த அதிகாரத்தை 2023-ல் நீக்கிவிட்டு புதிதாக 152 மற்றும் 139 சட்ட அரசாணையைக் கொண்டுவந்து, தமிழகத்திலுள்ள 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகளுக்கும் உள்ள அதிகாரத்தை ரத்துசெய்து முழு அதிகாரத்தையும் தமிழ்நாடு நக ராட்சி இயக்ககத்திற்கு கொடுத்துவிட் டார்கள்.
அதனால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகளின் துப்புரவுத் தொழிலாளி களின் நியாயமான கோரிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட் டத்தைக் கையிலெடுக்க இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தும்''’என்றார் தீர்க்கமாக.