"காவிரி -கொள்ளிடம் ஆற்றில் இரக்கமே இல்லாமல் மணலை கொள்ளையடித்ததே முக்கொம்பு அணையின் எட்டு மதகுகள் உடைந்ததற்கு காரணம்' என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. மேட்டூர், பவானி, அமராவதி ஆகிய 3 அணைகளில் இருந்து வரும் நீரை, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாக பிரித்து அனுப்புவதற்கு வசதியாக 1836-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது முக்கொம்பு அணை. தற்போது, மூன்று அணை களிலிருந்தும் நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில்... கடந்த 22-ஆம் தேதி இரவு 8:50 மணிக்கு முக்கொம்பு அணையில் உள்ள 45 மதகுகளில், 8 மதகுகள் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றுக்கு மேல் இருந்த பாலமும் இடிந்தது. நல்லவேளையாக, இரவில் நடந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தென்னிந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்த்தர் காட்டன் என்பவரால் 1836-ம் ஆண்டில் ரூ. 2 லட்சம் செலவில் இந்த அணை கட்டப் பட்டது. இந்த அணையின் மொத்த நீளம் 630 மீட்டர். அணையுடன் கூடிய 3 மீட்டர் அகல பாலத்தை பயன்படுத்தி, திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைய முடியும்.
இந்த அணையின் மதகுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரில் பெரும்பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்கிறது. ஆனால், தற்போது மேட்டூர் அணையிலிருந்துவரும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்படவோ, கரைகளில் உடைப்பு ஏற்படவோ வாய்ப்பில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
""2005 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் வெள்ளம் வந்தபோது சுமாராக விநாடிக்கு 3 லட்சம் கன அடி அளவுக்கு இந்த அணை வழியாக தண்ணீர் கடத்தப்பட்டது. அப்போதெல்லாம் எந்தப் பாதிப்பும் ஏற்படாத நிலையில், குறைந்த அளவே தண்ணீர் திருப்பிவிடப்படும் நிலையில் அணையின் மதகுகள் உடைந்ததற்கு முக்கிய காரணம் மணல் கொள்ளைதான்'' என்கிறார் தண்ணீர் இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத். ""இனி ஒருபிடி மணலைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம். அரசு அனுமதி பெற்ற மணல் குவாரிகளிலும், திருட்டுத்தனமான குவாரிகளிலும் 50 அடிமுதல் 100 அடிவரை மணல் கொள்ளையடிக்கப்பட்டதுதான் முக்கொம்பு அணை உடைய காரணம். பாலத்தின் தூண் அருகில் அரிப்பு ஏற்பட்டு, பாலத்தின் சுவர் வலுவிழந்து இடிந்துவிட்டது'' என்று ஆவேசமாகக் கூறுகிறார். காவிரி -கொள்ளிட ஆற்றுப் பகுதியில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சக்திகளே அரசாங்கத்தின் ஆதரவுடன் மணலை லோடு லோடாக கொள்ளையடிக்கின்றன.
விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், அணை களின் பாதுகாப்பை உறுதிப்படுத் தாத அரசாங்கத்தை கடுமையாக சாடுகிறார். ""கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையின் மதகுகள் உடைந்தன. தொடர்ந்து எடப் பாடி அருகில் உள்ள அணையிலும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கொள்ளிடம் இரும்புப் பாலமும், முக்கொம்பு கொள்ளிட பாலமும் உடைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், மெத்தனமாக இருந்ததால் முக்கொம்பு அணையும் உடைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பிற்கு ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு? செலவு செய்தது எவ்வளவு? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்றார். பாதிப்பை பார்வையிடச் சென்ற அவரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றது காவல்துறை.
""கொள்ளிடம், முக்கொம்பு அணைகளை பராமரிப்பதற்காக கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் மேலே இரண்டுபுறமும் இரும்பு வேலிகள் அமைத்து, கீழே உள்ள மதகுகளுக்கு கருப்பு பெயிண்ட் மட்டும் அடித்து கணக்கை முடித்துவிட்டார்கள். பராமரிப்பு என்ற பெயரில் பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள்''’’ என்கிறார் இந்த பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் அய்யாரப்பன். இத னிடையே, "பாய்லர் தொழிற் சாலை உதவியுடனும், கரூர் பனைமரங்கள், சென்னையில் இருந்து வரவழைக்கப்படும் ராட்சஸ இயந்திரங்கள் ஆகிய வற்றை பயன்படுத்தியும் உடனே அணையைச் சரி செய்யும் பணி துவங்கும்' என்று அறிவித்து இருக்கிறார் கலெக்டர்.
பாதிப்பு ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுப்பது தமிழக அரசுக்கு புதிதல்லவே.
-ஜெ.டி.ஆர்.
___________________________
இறுதிச்சுற்று!
அஸ்திக்கு அஞ்சலி!
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் கவனமாக செய்யப்பட்டிருந்தன. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் அஞ்சலி செலுத்த, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினும் பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். சில மணிநேரங்களில், கலைஞர் நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்கும் தகவல் வெளியானது.