கேரளாவின் மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பக்கமுள்ள பொட்டல் பகுதியில் அமைந்துள்ள பூமி எம். சாண்ட் குவாரிக்கு, 2019-ம் ஆண்டில் அப்போதைய மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியிருக்கிறார். இந்த அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, மணலை லோடுக்கணக்கில் கேரளாவிற்கு கடத்தி விற்பனை செய்திருக்கிறார்கள். அதிகாரிகளுக்கான போனஸ் தொகையைப் பழுதில்லாமல் சப்ளை செய்து, கோடி கோடியாய் மணலைக் கொள்ளையடித்து, பொட்டல் விவசாயப் பகுதியையே சூன்யமாக்கிய மணல் கொள்ளை, அப்பகுதி விவசாயிகளால் மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரை கொண்டு செல்லப்பட்டது. பொட்டல் மணல் கடத்தல் பற்றி அப்போதைய நக்கீரன் இதழில் விரிவாகவே வெளிட்டிருந்தோம்.

ss

உரிய அனுமதியின்றி நடந்த மணல் கடத்தலால் கோடி கோடியாய் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் கிளம்பியதையடுத்து, இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி. அந்தஸ்திலுள்ள அதி காரியைக் கொண்டு விசாரணை செய்ய வேண்டு மென்ற உத்தரவின் பேரில், தற்போது சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வினோதினி, எஸ்.ஐ. காசிப்பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குவாரி உரிமதாரரான கேரளாவின் மனுவேல் ஜார்ஜ், அவரது ஐந்து கேரள பாதிரியார் பங்காளிகள், நெல்லை மாவட்டத்தின் ரமேஷ், குபேரசுந்தர், வினோத், முகம்மது சமீர் உள்ளிட்ட 23 பேர் மீது மணல் கொள்ளை வழக்கு பாய்ந்தது. மேலும், வருவாய்த்துறையின் வி.ஏ.ஓ. தொடங்கி, டாப் லெவல் அதிகாரியான கனிம வளத்துறையின் உதவி இயக்குன ரான சபியா வரையிலும் கிஃப்ட்கள் சென்றடைந்ததை விசாரணையில் கண்டறிந்த டி.எஸ்.பி. வினோதினி, யாருமே எதிர்பாராத வகையில் சபியாவை கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி, பாளையி லுள்ள அவரது வீட்டில் விசாரணைக்காகக் கைது செய்த மறுகணமே, பொட்டல் மணல் கொள்ளையில் பலனடைந்த அனைத்து அதிகாரிகளின் அடிவயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கிறது. உதவி இயக்குனர் சபியாவை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம், பல அதிகாரிகளின் தூக்கத்தைப் பறித்திருக்கிறது.

பாளையிலுள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கஸ்டடிக்குக் கொண்டுவரப்பட்ட சபியாவிடம் ஒருசில ஆவணங்களைக் காட்டி விசாரித்த டி.எஸ்.பி. வினோதினி டீமின் கெடுபிடிகளால், அனைத்தையும் வாக்குமூலமாகக் கொடுத்து விட்டாராம் சபியா.

Advertisment

ss

எம். சாண்ட் தயாரிப்பதற்கு மட்டுமே அனுமதியைப் பெற்றவர்கள், மணல் அள்ளுவதற்கு கலெக்டரின் அனுமதிக்காக, அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்களைத் தயாரித்திருக்கிறார்கள். எம். சாண்ட் தயாரிப்பை விட்டுவிட்டு, 280 ஏக்கர் பட்டா நிலங்களிலிருந்து பல லோடு மணலையள்ளி கேரளாவிற்கு கடத்தி விற்பனை செய்திருக்கிறார்கள். இதில், தமிழ்நாட்டில் ஒரு லோடு மணல் கூட விற்பனை செய்யப்படவில்லை.

மேலும், மணலைக் கொண்டுசெல்ல 3,600 பெர்மிட்கள் வரை வழங்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றை பல முறை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த வகையில் 91 ஆயிரம் யூனிட்டிற்கும் அதிகமாக மணல் கடத்தப் பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில், ஒரு லோடு மணலை எடுத்துச்செல்ல 25 ஆயிரம் ரூபாய் வரை கமிசன் பெறப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்த சி.பி.சி.ஐ.டி. அதிர்ந்துவிட்டது. குற்றம்சாட்டப் பட்ட சமீரும் அவரைச் சார்ந்தவர்களும் அரசின் மணல் பெர்மிட்டை போலியாகத் தயார் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதன்மூலம் மணல் கடத்தப்பட்டதாக விசாரணையில் கூறியதாக செய்தி கசிகிறது. இந்த மணல் கடத்தலுக்குத் துணைபோன வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.

பாளையங்கோட்டையை சேர்ந்த அப்போதைய துணை தாசில்தாரான செந்தில்வேல், இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அந்த மனுவில், "குவாரியை ஆய்வு நடத்த எனக்கு அதிகாரமில்லை, வருவாய் ஆய்வாளர் தரப்பில் தயாரித்து வழங்கப்பட்ட கோப்பில் கையெழுத்து மட்டுமே போட்டேன். இம் முறைகேட்டில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை' என்று நழுவப் பார்த்திருக்கிறார்.

மே 20-ஆம் தேதி அந்த மனுமீது விசாரணை நடந்தபோது ஆஜரான அரசின் வழக்கறிஞர், "பட்டா நிலங்களிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மணல் அள்ளிக் கடத்தப்பட்டுள்ளது. பெர்மிட் மற்றும் கலெக்டர் அனுமதிக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எந்த விதிகளையும் பின்பற்றாமல், மணல் கடத்தலுக்காக 3,600 பெர்மிட்கள் வழங்கப்பட்டுள்ளதாக, உதவி இயக்குனர் அளித்த வாக்குமூலம், கைதானவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டிருக்கிறார். இதனையடுத்து முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. எம்.சாண்ட் நிறுவனத்தின் சைலண்ட் பங்குதாரரும், அக்கவுண்டன்ட்டுமான சியாத் என்பவரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டி ருக்கிறது.

அடுத்த கட்ட விசாரணைக்காக, சமீர் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள் மீண்டும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும், அப்படி கைது செய்யப்பட்டால் முன்ஜாமீனோ, ரெகுலர் ஜாமீனோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரியவந்ததால், இவ்வழக்கோடு தொடர்புடைய அதிகாரிகளின் பி.பி. எகிறத் தொடங்கியுள்ளதாம்.

Advertisment