கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை, வேளங்கி பட்டு, அத்தியாநல்லூர். மணிக் கொல்லை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயற்கை யாகவே சவுடு மணல் விளை நிலங்களில் சமதளத்தில் மேடுகளாக உள்ளது. இந்தப் பகுதிகளில் விவசாயிகள் மணிலா, சவுக்கை, பூச்செடிகள், முருங்கை, முந்திரி, கம்பு, எள், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆற்று மண் பல்லாயிரக்கணக்கில் விலை உயர்ந்துள்ளதால் அந்தப் பகுதியிலுள்ள சிலர் விவசாய நிலங்களில் ஆற்று மணலைவிட நைசாக இருக்கும் சவுடு மணலை எடுக்க அனுமதி பெற்று, சில மேடான விளைநிலங்களில் சவுடு மணல் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர். கட்டட வேலையில் செயற்கை மண்ணுடன் கலந்து கட்டடம் கட்டவும், வீடு கட்டப்பட்டு தரைத்தளத்தில் இந்த மண்ணைக்கொண்டு நிரப்பினால் குளிர்ச்சியாக தரை இருக்கும். அதனால், சவுடு மணல் தற்போது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒரு லாரி மண் 50 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திலும் ஒரு அனும தியை மட்டும் வைத்துக் கொண்டு அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டி கள்ளத்தனமாக மற்ற இடங்களையும் எடுத்து, அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களைப் பாழ்படுத்தி, கடல் நீர் உட்புகுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.
சட்டத்திற்குப் புறம்பாக இரவுபகல் பாராமல் 100 முதல் 200 லாரிகள்வரை தொடர்ந்து மணல் அள்ளிவருவதால் அப்பகுதியிலுள்ள சாலைகள், விவசாய போர்வெல்கள் பழுதாகி உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதுகுறித்து மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், "தற்போது கொத்தட்டை மற்றும் அத்தியாயநல்லூர் கிராமத்தில் மணல்குவாரி இயங்கிவருகிறது. அரசு சவுடு மணலை 6 அடிக்குக் கீழே எடுக்கக்கூடாது என அனுமதியளிக்கிறது. ஆறு அடிக்கு மணல் எடுத்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 30 அடி வரை மண்ணை எடுக்கிறார்கள். இந்தப் பகுதியில் 10 அடி வரைதான் சவுடு மணல் இருக்கும். 10 அடிக்கு கீழே சேறும் சகதியுமாக ஊற்றுமண் இருக்கும் இதில் நீர்வளம் சேமிக்கப் பட்டு இருக்கும். இந்த சேறும் சகதியுமான மண்ணை பொக் லைன் மூலம் 30 அடி ஆழத்துக்கு தோண்டியெடுத்து மேலே போட்டு, மற்ற ஒரு பொக்லைன் மூலம் உலர்ந்த பிறகு லாரியில் ஏற்றி ஆற்று மணல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
ஊற்று மண்ணை வெளியே எடுத்துவிட்டால் கடல் நீர் நிலத்தடிக்குள் புகுந்து உப்பு நீராக மாறிடும். 15 அடியில் கிடைத்த தண்ணீர், தற்போது 300 அடிக்கு போர் போட்டும் கிடைப்பதில்லை. தண்ணீர் இல்லாததால் போர் அடிக்கடி பழுதாகிறது. எனவே இந்த பகுதியில் சவுடு மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது. மணல் அள்ளுபவர்கள், காவல்துறை, வருவாய் துறையினருக்கு செய்யவேண்டிய கவனிப்பை செய்துவிட்டு திருட்டுத்தனமாக மணலை அள்ளி அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள்'' என்கிறார்.
வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முரு கேசன், "கொத்தட்டை முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். அடியாட்களை கையில் வைத்துக்கொண்டு மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்து, 24 மணி நேரமும் இங்குள்ள வளங்களை அழித்துவருகிறார். கேட்டால் அமைச்சர் உள்ளிட்ட அனைத்து கட்சிக்காரனுக்கும், போலீசுக்கும், மைன்ஸ், வருவாய் என அனை வருக்கும் தினம் கொடுத்துத்தான் தொழில் செய்துவருகிறோம். உனக்கு என்ன தேவை என்று கூறு, அதைவிட்டுவிட்டு அனாவசிய மாக தலையிடவேண்டாமென்று கேட்பவர்களை மிரட்டிவருகிறார்.
10 அடிக்கு மேல் ஒரு நிலத்தில் மணல் எடுத்துக்கொண்டி ருக்கும்போது அருகே இருக்கும் நிலம் சரிந்து கீழே விழும். அதில் விவசாயம் பண்ணமுடியாத நிலையில் அடிமாட்டு விலைக்கு அந்த நிலத்தை அபகரிக்கும் வேலையையும் செய்து வருகிறார்கள். இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டால் காவல் துறை மிரட்டுகிறது. சரியான நடவடிக்கை இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட் டம் நடைபெறும்'' என்று இப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் கூறுகையில், "இந்தச் சம்பவம் நடப்பது உண்மைதான். சம்பந்தப் பட்ட விவசாயிகளோ, கிராம மக்களோ கடிதமாகக் கொடுத்தால் மார்க்சிஸ்ட் கட்சி இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு துணையாக இருக்கும்''’என்றார்.
-காளிதாஸ்