ரமேஷ்பாபு என்றால் அவ்வளவாக தெரியாது. மணல் பாபு என்றால் நாகை மாவட்டத்தில் எல்லோருக்கும் தெரியும். சீர்காழியைச் சேர்ந்த மணல் பாபுவின் அசுரவேக பொருளாதார வளர்ச்சி மாவட்டத்தில் அனைவரையும் கிடுகிடுக்க வைத்தது. இந்த மணல் பாபு கடந்த 23-ஆம் தேதி, தனது வீட்டிலிருந்து கிளம்பி பிடாரி வடக்கு வீதியில் உள்ள காண்ட்ராக்டர் ஜாகிர்உசேனை காலை 11:30 மணிக்கு சந்தித்துவிட்டு வெளியேவந்து காரில் அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது நான்குபேர் கொண்ட கும்பல், பாபுவின் கார் மீது வெடிகுண்டுகளை வீசி மிரளவைத்து, காரிலிருந்து பாபுவை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, காரில் பறந்தது. கொலைச்செய்தி கேட்டு, பதட்டத்துடன் ஓடி வந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அவரைத் தொடர்ந்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களான மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், சீர்காழி பாரதி ஆகியோரும் ஓடிவந்தனர்.
அமைச்சரும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பறந்துவரும் அளவுக்கு செல்வாக்கு உள்ள ரமேஷ்பாபு என்கிற மணல் பாபுவின் ஃப்ளாஷ்பேக்...……
2001-ல் சீர்காழி எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரமோகனுக்கு பி.ஏ.வானார் ரமேஷ்பாபு. அவருடன் செல்லும்போது இன்றைய அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் அப்போது தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். சின்னச்சின்ன காண்ட்ராக்ட் வேலைகள் செய்தவர், அகல ரயில்பாதை திட்டத்துக்கு சவுடு மணல் அடிப்பது, சீர்காழி வெளிவட்டச் சாலைக்கு சவுடு மணல் அடிப்பது என முன்னேற்றம் கண்டார். 2016 தேர்தலில் வேதாரண்யத்தில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன், சீர்காழி பாரதி, மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன் உட்பட 8 அ.தி.மு.க.வினரின் தேர்தல் செலவுகளை ஏற்றதோடு, வெற்றிக்குப்பின் அவர்களுக்கு காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு பாபுவின் கஜானா நிரம்பி வழிந்தது.
""மேல்மட்டத்தைக் குளிப்பாட்டிய தைரியத்தில் நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் லைசென்ஸ் இல்லாமலேயே மணல் அள்ள ஆரம்பித்தார். கொள்ளிடத்தில் இவர் ராஜ்யம்தான். அரசாங்க மணல்குவாரி இருந்தும் பாபுவின் மணல் லாரிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இவரின் ஓவர்ஸ்பீடு, அ.தி.மு.க.வுக்குள்ளேயே சிலருக்கு எரிச்சலைக் கிளப்பியது. தனது தொழில் போட்டியாளரான ஆக்கூர் செங்குட்டுவன் மீது குண்டாஸ் போட வைத்து கம்பி எண்ண வைத்திருக்கிறார் பாபு. பத்து நாட்களுக்கு முன்பாக ரிலீசான அந்த செங்குட்டுவனின் காரில்தான் கொலையாளிகள் வந்துள்ளனர்.
இது ஒருசைடு என்றால், டெல்டா மாவட்ட பிரபல ரவுடி ஒருவன், பாபுவிடம் பெரிய தொகை கேட்டு மிரட்டியிருப்பது இன்னொரு சைடு. இதைவிட முக்கிய சைடு, கொலை நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஒருவர் முன்னிலையில் பஞ்சாயத்து ஒன்று நடந்துள்ளது. மாவட்டத்தில் இருக்கும் வி.ஐ.பி. ஒருவருடன் நேரடியாகவே மோத ஆரம்பித்திருக்கிறார் பாபு. எல்லாம் சேர்ந்து எதிர்வினையாகிவிட்டது''’என்கிறார் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர்.
இதற்கிடையே வியாழக்கிழமை சேலம் கோர்ட்டில் பிரேம்நாத், கட்டபிரபு, பார்த்திபன் என மூவர் சரணடைந்துள்ளனர்.
-க.செல்வகுமார்