தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மண்ணெடுக்கிறோம் என்கிற பெயரில் விவசாய விளைநிலங்களைக் குறிவைத்து தோண்டிய மணல் மாஃபியாக்கள் தற்போது குடியிருப்புப் பகுதி களையும் குறிவைத்துத் தோண்ட ஆரம்பித்துவிட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர் பொதுமக்கள்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்குவழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், புதுச்சேரி கடலூர் வழியாக 194 கிலோமீட்டர் தூரத்திற்கு 6,431 கோடி மதிப்பீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. அந்த பணிகளுக்கு தேவையான மண், மணல்களை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு இடையூறில்லாத, பயன்பாடற்ற இடங்களில் சவுடு மண்ணெடுத்து பயன்படுத்திக்கொள்ள கனிமவளத்துறை அனுமதி கொடுத்தது.
இதனை சாதகமாக்கிக்கொண்ட மணல் மாஃபி யாக்கள், புற்றீசல்போல புகுந்து விவசாய நிலங்களைக் குறிவைத்து சவுடு மண் தோண்டியதோடு, அதிக ஆழத்தி லிருக்கும் மணலைத் தோண்டி அருகிலிருக்கும் காரைக் கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி வருகின்றனர்.
சவுடு மண் குவாரிகளுக்கு நாகை மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்க ளும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததால், மொத்த மணல் மாஃபியாக்களின் கூடாரமாக மயிலாடுதுறை மாவட்டம் மாறியது.
சாலைப் பணிக்கு ஒரு லோடு ஏற்றினால், அந்த அனுமதியில் நான்கு லோடுகளை தனியாருக்கு விற்று வருகின்றனர். பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட கீழப் பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களை முற்றிலுமாகவே மண்தோண்டி அழித்துவிட்டனர். இந்தநிலையில்தான் நெய்தவாசல், வடபாதி, தென்பாதி, புதுகுப்பம் ஆகிய நான்கு கிராம மக்கள் திரண்டுவந்து தங்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் மணல் அள்ளுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து நெய்தவாசல் ஊராட்சிமன்றத் தலைவரான சசிகுமார் கூறுகையில், "கடலுக்கும் எங்க குடியிருப்புப் பகுதிகளுக்கும் வெறும் 400 மீட்டர்தான். கடல் கொந்தளித்தாலே எங்கள் ஏரியாவில் தண்ணீர் புகுந்துவிடும். உப்புநீர் கலந்த குடிநீரைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்படுகிறோம். மூன்றுபோகம் விளைந்த விவசாய நிலங்களில் கடல் நீர் புகுந்து விவசாயம் பெரும்பகுதி அழிந்துவிட்டது. மழைக்காலங்களில் ஒருபோகம் நிலக்கடலை சாகுபடி செய்து பிழைக்குறோம். இந்த இடத்தையும் குறிவைத்து பெருமுதலாளிகள் பணத்தைக் கொடுத்து அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி, மணல் அள்ளுவதற்கான முதற் கட்ட வேலைகளைத் துவங்கியுள்ளனர். அப்படி மணல் அள்ளினால் எங்கள் பகுதியில் இருக்கிற சிறுகுறு விவசாயமும் அழிந்து கடல்நீர் புகுந்துவிடும். எங்களின் நிலைமையை ஆட்சியரிடம் புகாராக அளித் திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் நான்கு கிராமங் களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள் ளோம்'' என்கிறார்.
மயிலாடுதுறை மாவட்ட கடலோர முள்ள கிராமங்களை சுற்றிவந்தோம். விவசாயிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், "சாலைப் பணி என்கிற பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய விளைநிலங்களை 25 அடி ஆழத் திற்கு மேல் தோண்டிவிட்டனர். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மயிலாடுதுறை மாவட்டமே உப்புத் தண்ணீரால் தவிக்கப்போகும் நிலையை உருவாக்கிவிட்டனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சாலைப் பணிகளுக்கு என ஒரு லெட்டர் வாங்கிக்கொடுத்தால் எந்தவித ஆய்வும் செய்யாமல் அதற்கு அனுமதி கொடுத்துவிடுகின்றனர்.
அவர்கள் அனுமதி வாங்கும் நிலம் வேறு, மணல் அள்ளுமிடம் வேறாக இருக்கிறது. நாகை மாவட்டத்தில் விவசாயிகள் கடுமையாக எதிர்த்துவிட்டனர். அதேபோல திருவாரூர், தஞ்சையிலும் எதிர்ப்பு இருக்கிறது. காரைக் கால் மாநிலத்திலும் அனுமதிக்கவில்லை. ஆக, மொத்த மணல் மாஃபியாக்கள் கும்பலும் எங்கள் மாவட்டத்தைச் சூறையாடிவிட்டனர்.
இப்படித் தோண்டிய குவாரி குழிகளில் விழுந்து 50-க்கும் அதிகமான ஆடுகள் இறந்தது, குளிக்கச் சென்ற சிறுவன் இறந்த கதை யெல்லாம் நடந்து மூடிமறைச்சிட்டாங்க. அரசு எங்களை ஒரு பொருட்டா கவே பார்ப்பதில்லை.
ஆற்று மணல் அனுமதியில்லாத குறையை எங்கள் பகுதியில் கிடைக்கும் மணலைக்கொண்டு பூர்த்திசெய்கின்றனர். உதாரணத்துக்கு, பூம்புகார் தொகுதியிலுள்ள மேலப்பெரும் பள்ளம் என்கிற ஒரு கிராமத்தை மட்டும் அதிகாரிகள் ஆய்வுசெய்தாலே போதும். எவ்வளவு அனுமதி வாங்கினார்கள், எவ்வளவு தோண்டியிருக்கிறார்கள் என்கிற ஆய்வை நடத்தினாலே மொத்த அதிகாரி களும், மணல் மாஃபியாக்களும் மாட்டிவிடு வார்கள். கிட்டத்தட்ட மொத்த கிராமத்தை யும், வாழ்வாதாரத்தை யும் அழித்து விட்டனர்''’ என்கிறார்கள் வேதனையுடன்.
தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை திரட்டிவரும் வழக்கறிஞர் ஒருவர் தற்போது பெயரோ, புகைப்படமோ வேண்டாம் என்கிற கோரிக்கையோடு நம்மிடம் கூறுகையில், "மணல் மாஃபியாக்களான புதுக்கோட்டை எஸ்.ஆர். குரூப் தமிழகத்தில் அறிவிக் கப்படாத அரசாங்கத்தை நடத்துறாங்க. அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள், காவல்துறை வரை அவர்களின் பிடியிலிருப்பதால் சாதாரண மக்கள் அஞ்சி நடுங்கும் நிலைமையாகிடுச்சி. மணல் அள்ள வருபவர்களை பொதுமக்களோ, விவசாயிகளோ ஒன்றுகூடி தடுத்து நிறுத்தினால், எஸ். ஆர். குரூப்பை சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் புதுப்புது மணல் மாஃபியாக்களை உருவாக்கி அனுப்புவாங்க. மக்கள் ஒற்றுமையைச் சிதைத்து போராட்டத்தை மழுங்கடிக்கும்வரை அவர்கள் ஓயமாட்டார்கள்.
இதற்கு அரசு அதிகாரிகளும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு கொடுக்கும். மணல் கொள்ளை யர்களில் கட்சிப் பாகுபாடுகள் கிடையாது. அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. என அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களையும் மணல் மாஃபியாக்களாக மாற்றிவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் கொலை, குற்றப் பின்னணி உடையவர்கள் இருப்பதால் யாரும் முன்னின்று எதிர்க்கத் தயங்கும் நிலை. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதுமுள்ள மணல் மாஃபியாக்களுக்கும் எஸ்.ஆர்.குரூப்புக்கும், போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் பாலமாக இருந்து கமிஷன் உள்ளிட்ட அனைத்தையும் சரிசெய்து கொடுப்பவராக மேலையூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுக ரான முத்து.தேவேந் திரன் என்பவர் இருக்கிறார். இவர் முதல் வர் குடும்பத்திற்கு வேண்டியவர் என்கிற பொய்யான பிம்பத்தைக் காட்டிக்கொண்டு செயல் படுகிறார். சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார், பொறையார், செம்பனார்கோயில் ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்களை தனக்கு ஏற்றாற்போல வைத்துள்ளார்'' என்கிறார்.
ஆரம்ப காலத்தில் மணல் தொழிலில் இருந்து தற்போது வேறு தொழிலுக்கு மாறிய ஒருவர் கூறுகையில், "தற்போது ஒரு மீட்டர் கியூப் மணல் 56 ரூபாய். அதாவது 1 யூனிட் என்பது 3 மீட்டர் கியூப். 3 யூனிட்டுக்கு அரசுக்கு 504 ஆன்லைன் மூலமாக கட்டணும். அதேநேரம் எஸ்.ஆர். குருப்னு ஒரு டீம் இருக்கு. எந்த ஆட்சி வந்தாலும் இவங்க இருக்காங்க. மூன்று யூனிட் டுக்கு அரசுக்கே வெறும் 504 ரூபாய்தான். அந்த எஸ்.ஆர். குரூப்புக்கு 3 யூனிட்டுக்கு ராயல்டியாக 2400 ரூபாய் கொடுக்கணும்.
பல போராட்டங்கள், அவமானங்கள், எதிர்ப்புகளை எதிர்கொண்டு மணல் அள்ளிவிற்பவர் ஒருவர், "புதுக்கோட் டையிலிருந்து வந்து அரசாங்கத்தை விட ஐந்து மடங்கு அதிகமா வாங்குறாங்களே இவர்கள் யார்? அரசும், அதிகாரி களும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்? அவர்கள் வாங்கும் பணத்தை அரசே வாங்கிக் கொண்டால் கஜானாவாவது நிரம்புமே, இவர்களுக்கு நாங்கள் ஏன் கப்பம் கட்டணும்?னு கேட்டால்... மேலிடத்திற்கு முழுக்க பணம் கொடுத்திருக்கிறோம்னு சொல்வாங்க. லோக்கல் போலீஸ் எல்லாத்தையும் நாங்க பாத்துக்கணும். நிர்வாக ரீதியாகவும், லோக்கல் உண்டாக்கும் இடை யூறு எல்லாத்தை யும் நாங்க பாத்துக்கணும், ஆனால் வசூல் மட்டும் இவங்க கரெக்டா பண்ணிடுவாங்க. லோக்கல்ல எங்களுக்கு பேரு மணல் மாஃபியா. இவ்வளவும் சவுடு மண்ணுக்கான கணக்கு''’என்று நிறுத்தி யவர்... மேலும் சில தகவல்களைக் கூறினார்.
"மயிலாடுதுறை அருகேயுள்ள காரைக்கால் மாநிலத்தில் மணல் குவாரியே கிடையாது. தமிழக மணலை நம்பித்தான் மணல் வியாபாரமே நடக்குது. அங்க 98 தனியார் மணல் யார்டுகள் இருக்கிறது. ஒரு யார்டுக்கு ஒரு நாளைக்கு 30 யூனிட் வரை மணல் தேவைப்படுகிறது. அந்த தேவைகளுக்கு மணலை கடத்தி விற்குறாங்க. தினசரி மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து குறைந்தது ஆயிரம் லோடு மண் போகுது. ஒரு லோடுக்கு 2,400 வீதம் தினசரி 24 லட்ச ரூபாய் சம்பந்தமேயில்லாம விவசாயிகளை நாசம்செய்து சம்பாதிக்கிறாங்க. மாதம் எவ்வளவு என அரசே கணக்கிட்டுக் கொள்ளட்டும். அந்த லாபம் போதாது என்று தற்போது, எஸ்.ஆர். குரூப்பினரே பினாமிகளின் பெயரில் மணல் விளைநிலங்களில் குவாரிகளை துவங்கி நடத்துறாங்க. அப்படி ஒன்றுதான் நெய்தவாசல் குவாரி'' என்கிறார் விரிவாக.