நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் தொடங்கி யிருக்கிறது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் பா.ஜ.க.வில் தலைதூக்க, இதுகுறித்து பெரிய பஞ்சாயத்தே நடந்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் இந்த பஞ்சாயத்து மீண்டும் வெடிக்கும் என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர். இதற்கிடையே மணல் மாஃபியாக்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் முன் னாள் அ.தி.மு.க. அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர்.
தமிழகத்தின் மணல் மாஃபியாக்களாக புதுக்கோட்டை ராமச் சந்திரன் (எஸ்.ஆர்.), திண்டுக்கல் ரத்தினம், அமலாக்கத்துறையினரால் தேடப்பட்டு வரும் கரிகாலன் ஆகிய மூவரும் கோலோச்சி வருகிறார்கள். இவர்களில் கரிகாலனின் சொந்த சகோதரர் கருப்பையாதான் திருச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
தனது சகோதரர் கருப்பையாவை அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும் என திட்டமிட்டு தி.மு.க.வின் முக்கிய இடத்தில் பேசிப்பார்த்தார் கரிகாலன். ஓடிப் போய்டு என விரட்டி விட்டது தி.மு.க. இதனையடுத்து, அ.தி.மு.க.வில் சீட் வாங்கி விட வேண்டும் என மாஜி அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ் கரை அணுகினார் கரிகாலன். பல கட்டப் பேச்சுவார்த்தை அப்போது நடந்தது.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, கருப்பையாவுக்காக சீட் கேட்டு விஜயபாஸ்கரிடம் பேசிய கரிகாலன், "திருச்சி தொகுதியில் சீட் கொடுங்கள். ஒரு பைசா கூட அ.தி.மு.க. செலவு செய்யத் தேவையில்லை. முழுச்செல வையும் நான் ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வை திருச்சி யில் ஜெயிக்க வைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், கரூர், திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய 3 தொகுதி களையும் நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டாலும், அதன் கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் ஜெயிக்க வைக்கவேண்டியது என் பொறுப்பு'' என அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் கரிகாலன்.
இதனை நம்பி எடப்பாடியின் கவனத்துக்கு விஜயபாஸ்கர் கொண்டுசெல்ல, அனைத்தையும் விசாரித்த எடப்பாடி, விஜயபாஸ்கரின் சிபாரிசை ஏற்றுக்கொண்டு, கரிகாலனின் தம்பி கருப்பையா வுக்கு சீட் ஒதுக்கினார். ஆனால், சீட் வாங்கிய பிறகு, இவர்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டதும், கரிகாலனின் போக்கு மாறியது.
ஏற்கனவே பேசியிருந்தபடி திருச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளுக்கான தொகையையும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக விவாதிக்கப்பட்ட தொகையையும் கரிகாலனிடம் கேட்டிருக்கிறார் விஜயபாஸ்கர். அதாவது, "திருச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான தொகையை விஜயபாஸ்கரிடம் கரிகாலன் கொடுத்துவிட வேண்டும். விஜயபாஸ்கர் மேற்பார்வையில் தொகைகள் பகிர்ந்தளிக்கப்படும்' என்பது ஏற்பாடு.
அதன்படி கரிகாலனிடம் விஜயபாஸ்கர் கேட்க, "என் தம்பி கருப்பையாவுக்கு நானே செலவு செய்துகொள்கிறேன்; நீங்கள் கவலைப்பட வேண்டாம்; ரெஸ்ட் எடுங்கள்' என சொன்னதில் நொந்துபோன விஜயபாஸ்கர், மற்ற தொகுதிகளின் தேர்தல் செலவுகளுக்கான தொகையை கேட்க, விஜயபாஸ்கருக்கு பெப்பே காட்டிவிட்டார் கரிகாலன். இதனால் விஜயபாஸ்கருக்கு கோபம் உச்சத்துக்குப் போனது. தேர்தலின் கடைசி நாள்வரை ஏகத்துக்கும் மன உளைச்சல்களுக்கு ஆளானார் விஜயபாஸ்கர். மணல் கொள்ளையர் கரிகாலன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புலம்பி வருகிறார்”என்று கரிகாலனின் தேர்தல் மோசடியை சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க. மேலிடத் தொடர்பாளர்கள்.
தேர்தல் செலவுகளுக்கான தொகையை சொன்னபடி கரிகாலன் தராமல் ஏமாற்றிவிட்டதாக எடப்பாடியிடம் விஜயபாஸ்கர் புகார் சொல்ல, எடப்பாடியும் ஏகத்துக்கும் டென்சனாகியிருக்கி றார். இதனால் எடப்பாடிக்கும் பி.பி. எகிறியிருக் கிறது. அதேசமயம், பா.ஜ.க. பக்கமும் பார்வையைத் திருப்பிய கரிகாலன், பா.ஜ.க. கூட்டணியில் திருச்சி தொகுதியை டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு ஒதுக்க வைத்திருக்கிறார். இதற்காக, பெரிய தொகை செலவிட்டுள்ளார் கரிகாலன். அதாவது, மணல் மாஃபியாக்களான இந்த மும்மூர்த்திகளிடம் வேலைபார்த்தவர் விஜயகுமார். மணல் பிசினஸில் லாரிகளுக்கு டோக்கன் போடும் வேலை பார்த்துவந்தவர். கரிகாலனுக்கு நெருங்கிய உறவினரும்கூட. பா.ஜ.க.வில் உறுப்பினராகவும் இருந்துவந்தார்.
அந்த விஜயகுமாருக்கு புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவராக பதவி வாங்கிக் கொடுத்தார் கரிகாலன். இதற்காக, கணிசமான தொகை பா.ஜ.க.வின் மேலிடத் தலைவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், "திருச்சி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டாம்; அது நமக்கு செட் ஆகாது. தினகரன் கட்சிக்கு தள்ளி விட்டுவிடுங்கள்' என தமிழக தலைவரிடம் விஜயகுமார் மூலமாக பேசினார் கரிகாலன். காரணம், தி.மு.க. சார்பில் இங்கு ம.தி.மு.க.தான் போட்டியிடப்போகிறது. அதனால், அக்கட்சியுடன் மல்லுக்கட்டி ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம் என்கிற எண்ணத்தில்தான் இந்த ஐடியாவை எடுத்தனர் மணல் மாஃபியாக்கள்.
அதற்கேற்ப இந்த மும்மூர்த்திகளின் சிஷ்யரான விஜயகுமார் பா.ஜ.க. தலைமையிடம் பேசிப் பேசி திருச்சியை அ.ம.மு.க.வுக்கு ஒதுக்க வைத்துவிட்டார். இதனையடுத்து, பா.ஜ.க. பக்கம் முழுமையாக பார்வையை திருப்பிய கரிகாலன், திருச்சியில் போட்டியிடும் அ.ம.மு.க. கட்சி வேட்பாளருக்கு தேர்தல் வேலை செய்யவேண்டிய பொறுப்பிலிருந்த புதுக்கோட்டை பா.ஜ.க.வினரை ஒட்டுமொத்தமாக திருச்சியிலிருந்து துரத்தியது கரிகாலன் குரூப். கரிகாலனின் உத்தரவில் விஜயகுமார் உட்பட பா.ஜ.க.வினர் எல்லோரும் புதுக்கோட்டையை விட்டு கோவைக்கும் திருப்பூருக்கும் தாவினார்கள்.
இதற்காக, தனது வேலையாள் என்றாலும் விஜயகுமார் பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் என்பதால் அந்த பதவியை மதித்து அவருக்கு பெரிய தொகை ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். மேலும், அவர் மட்டுமல்லாமல் மாவட்ட பா.ஜ.க.வினருக்கும் கனமான ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுத்துள்ளார் கரிகாலன்.
இதனையெல்லாம் ஜீரணிக்க முடியாத பா.ஜ.க.வினர் சிலர், விஜயகுமாரிடம் கேள்வி கேட்டதில்தான் மோதல் வெடிக்க, அவசரம் அவசரமாக புதுக்கோட்டைக்கு வந்து பஞ்சாயத்து செய்திருக்கிறார் பா.ஜ.க.வின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம்.
இந்த விவகாரம் பா.ஜ.க.வில் பரபரப்பாகப் பேசப்பட, இதுகுறித்து விசாரித்தபோது, ‘’புதுக்கோட்டையில் பிரதான கட்சிகள் அனைத் திலும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்த வகையில் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் பணத்தால் வளைத்து வைத்திருக்கிறார்கள் மணல் மாஃபியாக்கள். பா.ஜ.க.விலுள்ள அனைவருக்கும் தேவையானபோதெல்லாம் பணத்தை வீசிவருகிறார் கரிகாலன்.
இந்த நிலையில்தான், கரிகாலன் தம்பி கருப்பையா போட்டியிடுவதால், அ.ம.மு.க.வுக்கு தேர்தல் வேலை பார்க்கவிடாமல் புதுக்கோட்டை பா.ஜ.க.வினரை கோவைக்கு இழுத்துச் சென்ற விஜயகுமார், மாவட்ட கட்சி அலுவலகத்திலிருப்பதை அறிந்து, புதுக்கோட்டை முன்னாள் ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி முன்னாள் பொதுச்செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட பா.ஜ.க.வின் பலர், கட்சி அலுவலகத்துக்கு வந்து விஜயகுமாரிடம் நியாயம் கேட்டிருக் கிறார்கள். குறிப்பாக, "இங்கு கட்சி வேலை பார்க்காமல், கோவைக்கு ஏன் போனீர்கள்? உண்மையான கட்சிக்காரன் இதைச் செய்வானா?' என்று கோபமாக எகிற, இதனால் ஆத்திரமடைந்தார் விஜய குமார். இரு தரப்புக்கும் வார்த்தைகள் தடித்து மோதலாக வெடித்துள்ளது. அலுவலக நாற்காலிகள் பறந்துள்ளன.
இந்த விவகாரத்தை கோவையில் தேர்தல் பணியிலிருந்த பா.ஜ.க.வின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத் திடம் புகாராக சிலர் தெரிவிக்கவும், உடனே கோவையிலிருந்து புதுக்கோட்டைக்கு விரைந்து வந்தார். விஜயகுமார் உட்பட இருதரப்பினரிடமும் பஞ்சாயத்து நடத்தினார் கேசவவிநாயகம். அப்போது, "என்னிடம் எந்த தப்பும் இல்லை; மாநில தலைவர் சொன்னதால்தான் கோவைக்கு வந்தேன்' எனச்சொல்ல, "இப்படி பொய்யெல்லாம் சொல்லக்கூடாது. மணல் கரிகாலனிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் நீ திருச்சி தொகுதியில் வேலை பார்க்காமல் கோவைக்கு வந்தாய் என்பதற்கு ஆதாரம் இருக்கு. போட்டுக் காட்டவா?' என்று கேசவ விநாயகம் கோபம் காட்ட... அதன்பிறகே அமைதியாகியிருக்கிறார் விஜயகுமார்.
" தேர்தல் முடிகிற வரைக்கும் எந்த பிரச்சனை யும் இருக்கக்கூடாது. தேர்தல் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம்' என எச்சரிக்கை செய்துவிட்டு புதுக்கோட்டையிலிருந்து கிளம்பினார் கேசவ விநாயகம். ஆனால், இரு தரப்பும் இன்னமும் உறுமிக்கொண்டிருப்பதால், தேர்தல் முடிந்ததும் பஞ்சாயத்து மீண்டும் வெடிக்கும்” என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
தனது சகோதரர் கருப்பையா மூலம் நேரடி அரசியலில் கோலோச்ச வேண்டும் என்று திட்டமிட்டு தேர்தல் களத்தில் அனைத்து தில்லுமுல்லுகளையும் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளில் நடத்தி யிருக்கிறார் மணல் மாஃபியாவான கரிகாலன். ஏற்கனவே அமலாக்கத் துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதால் தேர்தல் முடிந்ததும் கரிகாலன் கைது செய்யப்படுவார் என்கிறது அத்துறை வட்டாரம். ஆனால், "புதுக்கோட்டையைச் சேர்ந்த நெடுஞ் சாலைத்துறை காண்ட்ராக்டர் பாண்டி யன் (இவர் தொடர்புடைய இடங்களி லும் ஐ.டி. ரெய்டு நடந்திருக்கிறது) மூலமாக பா.ஜ.க. தலைவரிடம் பேசி முடித்துவிட்டேன். அதனால் என்னை அமலாக்கத்துறை கைது செய்யாது. வழக்கிலிருந்து விடுபட்டுவிடுவேன்' என்று சொல்லிவருகிறாராம் கரிகாலன்.