திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து தினசரி 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் 5 யூனிட் அளவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மண் திண்டிவனம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.
ஏரியில் அதிகப் படியான மண் எடுக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்தான் மண் அள்ளுவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் அதற்குரிய ஆவணங்களும் தங்களிடம் உள்ளது என கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் மக்கள் கேட்டதற்கு, அவர் கொடுத்த ஒப்புதல் அறிக்கையில், இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் இந்த ஏரியை தூர்வாருவதற்காக கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த ஏரியில் மண் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் தரப்பில் யாரும் கோரிக்கை மனு தரவில்லை.
மக்கள் கொந்தளித்ததால் பட்டணம் ஏரியில் வரைமுறையற்ற அளவில் சுரங்கம் போன்று மண்ணெடுப் பது சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி கள் வெளியானது. இதையடுத்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மண் எடுக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏரிப் பகுதியில் கீழே உள்ள கெட்டியான மண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதிகாரிகளோ மேற் பரப்பிலுள்ள பயனற்ற மண்ணை அவர்கள் வெட்டிய குழியில் கொட்டி சமன்செய்து ஒரு மீட்டர் அளவில் உள்ளதுபோல் வைத்து அதனை புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பும்படி கூறிச் சென்றதாக தெரிகிறது.
இந்த ஏரி மண் எடுக்கப்படுவதில் அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து ஊரல் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை நம்மிடம் பேசியபோது, ""பட்டணம் கிராமத்தின் பாசன ஏரியை அளவுக்கதிகமாக தோண்டுவதால் மழைக் காலங்களில் அதிக நீர் வரத்து வரும். அப்படி வரும் நீரை தேங்கி நிற்கும் அளவிற்கு கரை பலம் இல்லாததால் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலையும் உள்ளது. இப்படிப்பட்ட எதார்த்த நிலைமைகளை உணராமல் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான போக்கினால், ஏரிகளை மராமத்து செய்கிறேன் என்ற பெயரில் சுரங்கம் மாதிரி தோண்டி கிராம மக்களை அதில் சாகடிக்கப் போகிறார்கள்'' என்கிறார் ஆதங்கத்துடன்.
மேலும், ""நெடுஞ்சாலை அவசியம்தான். அதற்காக, ஒரே ஏரியை சுரங்கம் மாதிரி தோண்டுவது எந்த விதத்தில் நியாயம்?'' என்று ஆத்திரத்துடன் கேட்கிறார்.
- எஸ்.பி.சேகர்