சனாதன தர்ம விவகாரத்தில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்குத் தக்க பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம், பிரதமர் மோடி யள் உதயநிதி இடையேயான பலப்பரீட்சையாக மாறியுள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் காரிய மாகும். சனாதனம், சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது''’என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து நாடு முழுவதும் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க.வினரிடையே எதிர்ப்பு எழுந்தது. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஓட்டு வங்கி அரசியலுக்கு இதனைக் கையிலெடுப்பதாகக்’கண்டனம் தெரிவித்தார். பா.ஜ.க. அதனை இந்துக்கள் இன ஒழிப்பு என்ற ரேஞ்சுக்கு மிகைப் படுத்த முயன்றது. வட இந்தியாவைச் சேர்ந்த சாமியாரான பரமஹம்ச ஆச்சார்யா உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப் போவதாக கெடுவிதித்தார். எப்போதும் முஸ்லிம்களின் பத்வாவை விமர்சிக்கும் இந்துத்துவாவினர், அதே பத்வா பாணியில் கொலை மிரட்டலில் இறங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது.
பா.ஜ.க. தரப்பு வட மாநிலங்களில் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையங்களில் வழக்குப் பதிவுசெய்வதில் ஆர்வம் காட்டியது. அதேபோல பரமஹம்ச ஆச்சார்யாவின் மிரட்டல் பேச்சுக்கு எதிராக 6 பிரிவுகளின்கீழ் மதுரையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இத்தகைய மிரட்டல்களுக்கு, தான் பயப்படப் போவதில்லையென்றும், தனது விமர்சனம் சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தின் மீதே ஒழிய இந்துக்களின் மீதல்ல… என்றும் தெளிவுபடுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதேசமயம்... சனாதனம் குறித்த தன் கருத்தில் மாற்றமில்லை என்றும் உறுதிப்படுத்தினார். தன் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். சாமியாரின் மீது வழக்குப் போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென தி.மு.க. தொண்டர்களை அமைச்சர் உதயநிதி 7-ந் தேதி வியாழக்கிழமை அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில்தான் சனாதனம் தொடர்பான அவதூறுகளுக்குப் பதிலடி தருமாறு மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு போட்டுள்ளது தேசிய அளவில் கவனம்பெற்றுள்ளது. "சனாதன தர்மம் பற்றியும், தற்கால உண்மை களையும் தெரிந்துகொண்டு தக்க பதிலடி கொடுங்கள். இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவது தொடர்பான விவகாரத்தால் சனாதன தர்ம சர்ச்சை மழுங்க விடாமல் பார்த்துக்கொள் ளுங்கள்' என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அமைச்ச ரவையைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் கருத்துக்கு பிரதமர் மோடி ஏன் இத்தனை முக்கியத் துவம் தரவேண்டும்? அதனை அறிய நாம் வேறு சில விவகாரங்களையும் பார்த்தாகவேண்டும்.
தென்னிந்திய அரசிய லுக்கும் வட இந்திய அர சியலுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. தென்னிந்தியாவில் நாத்திக, பகுத்தறிவுக் கருத்துகளை அரசியல் மேடையில் அழுத்திப் பேசமுடியும். பெரியார் முதல் அண்ணா வரையிலான பகுத்தறிவுப் பாரம்பரியம் தமிழகத்தில் உண்டு. அதனால் இங்கே, இந்து சமயம் குறித்த வலுவான விமர்சனங் களை வைக்கமுடியும். ஆனால் வட இந்தியாவில் மோடியின் தேசிய அளவிலான வருகைக்குப் பின் இந்துத்துவ அரசியல் பெருமளவில் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இந்துத்துவம் மீது விமர்சனம் இருந்தால்கூட அதனை வலுவாக முன்வைக்கத் தயங்கும் சூழ்நிலையே நிலவுகிறது. அதனால்தான் மேற்குவங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உட னடியாக உதயநிதியின் கருத்தை மறுத்துப் பேசினர்.
மோடி அரசுக்கு எதிராக "இந்தியா' கூட் டணி உருவாகி, தேசிய அளவில் கவனம் பெற்றுவரும் நிலையில் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்து வட இந்திய மக்களிடையே எதிர்மறையான தாக்கம் செலுத்திவிடக்கூடாது எனத் தயங்கும் "இந்தியா' கூட் டணி தலைவர் கள், ராகுல் காந்தி மூலம் இந்த விஷயத் தில் சற்று நீக் குப்போக்காக நடந்துகொள் ளும்படி தி.மு.க. தலைமைக்கு அறிவுரை கூறிவரு கின்றனர்.
"சனாதனம் குறித்த விமர்சனம், தி.மு.க.வுக்கு தமிழ்நாட் டில் சாதகமாக அமைந்தாலும் கூட, வட இந்தியப் பகுதிகளில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதை விட்டுவிட்டு வேறு விஷயங் களைப் பற்றி பேச்சை நகர்த்துங்கள்' என அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.
இதனை உய்த்துணர்ந்தே பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்பதற்காக தனது மத்திய மந்திரிகள் மூலம் சனாதன தர்ம சர்ச்சையை நீட்டிப்பதற்காக தக்க பதிலடி தருமாறு ஆலோசனை கூறியுள்ளார். இதனால் முதலாவதாக, இந்தியா கூட்டணி மீதான இந்துக்களின் அதிருப்தி பெருகும். இரண்டாவதாக சி.ஏ.ஜி. அறிக்கையால் எழுந்துள்ள ஊழல் பற்றிய விமர்சனம் பின்னுக்குப் போகும் என்பது மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கணிப்பு.
இதனை தி.மு.க.வும் புரிந்துகொண்டுள்ளதால்தான் தொண்டர்களை வழக்குத் தொடுப்பது, உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்களிலிருந்து விலகியிருக்குமாறு அறி வுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் தமிழகத்தில் நடந்தால், இதே பிரச்சனையை மையமாக வைத்து நெருக்குதல் எழலாம் என்பதால் நான்காவது கூட்டம் டெல்லியில் நடத்த முடிவாகியிருக்கிறது.
இன்றைய பிரதமரும், அன்றைய குஜராத் முதல்வருமான மோடி, ராகுல் காந்தி தேர்தல் அரசியலுக்கு வந்த 2014 காலகட்டத்தில், ராகுலை பப்பு என்று அழைப்பதன் மூலம், அரசியல் முதிர்ச்சியற்றவர், விவரம் போதாதவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதில் முன்னிலையில் இருந்தவர். அதே ராகுல் தனது தொடர்ச்சியான, தெளிவான நேர்மறை அரசியல் மூலம் மோடியை அச்சுறுத்தும் அரசியல் ஆளுமையாக உரு வெடுத்து நிற்கிறார்.
அன்றைக்கு ராகுலையே பொருட்படுத் தாதவர்போல் வேடமிட்ட மோடி, இன்று அவரைவிட இளையவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் பொருட்படுத்தி, மத்திய மந்திரிசபைக் கூட்டத்துக்கு முன்பாக தனியாக அமைச்சர்களிடம், அவரது பேச்சுக்கு தக்க பதிலடி கொடுங்கள் என உத்தரவிடுகிறார் என்றால் உதயநிதியின் தொடர் பேச்சுக்கள் மோடியைத் தொந்தரவு செய்வதாக மாறியிருக்கின்றன என்றே பொருள்.
உதயநிதியை தன் பேச்சில் தொட்டதன்மூலம், மாநில அரசியல் ஆளுமையான ஒருவரை தேசிய அரசியலில் கவனம்பெறச் செய்திருக்கிறார் மோடி. மேலும், பிரதமர் பதவியில் இருப்பவர் விமர்சித்ததன் மூலம் சர்வதேச அளவிலும் கவனம்பெற ஆரம்பித்துள்ளார் உதயநிதி.
இந்தியா கூட்டணியும், தி.மு.க.வும், சனாதன தர்ம விவகாரத்தை அரசியல் புயலின் மையமாக்க நினைக்கும் பா.ஜ.க.வின் மனநிலையைப் புரிந்து கொண்டு, பா.ஜ.க. அரசின் செயலின்மை, ஊழல்களை மக்கள் கவனத்துக்குத் தொடர்ந்து கொண்டுசெல்வதன் மூலம் அதன் எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்யவேண்டும். பா.ஜ.க.வை இந்தத் தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்பதற்கான வியூகங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்த ஆரம் பித்துள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய மோகன்பகவத், "நமது சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்தங்கிய நிலையில் வைத்துள் ளோம். 2000 ஆண்டுகளாக சாதிய பாகுபாடு தொடர்கிறது. பாகுபாடுகள் இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்'' என சனா தனத்தில் சமத்துவம் இல்லையென்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, "பிரதமருக்கோ, மற்றவர்களுக்கோ சனாதனம் குறித்து விளக்கம் வேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்' என சனாதன ஆதரவாளர்களின் வாயை அடைக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து பா.ஜ.க. தரப்பின் சுருதி இறங்கியுள்ளது.
-க.சுப்பிரமணியன்