னது சொந்தஊரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தவே படாதபாடுபட்டு நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி, கடைசி நேரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளைக் கூட ரத்து செய்துவிட்டு பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறார், அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

"அமைச்சர் காமராஜுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். அதற்கான வேலைகளைப் பாருங்கள்' என்று தினகரன் உத்தரவிட.. அதற்கான பணிகளை அ.ம.மு.க மா.செ. எஸ்.காமராஜ், ந.செ. வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகியோர் மேற்கொண்டனர்.

நகரெங்கும் பதாகைகள் வைக்கும் இளைஞர்களை மிரட்டுவதும், நுழைவாயில் அலங்காரம் செய்து கொண்டிருந்த இளைஞர்களை விரட்டுவதுமாக இருந்தனர் போலீசார். ஒருகட்டத்திற்குப் பிறகு "சாலை மறியல் செய்வோம்' என்று அ.ம.மு.க.வினர் மிரட்டிய பிறகு அமைதியானார்கள். "தினகரன் மேடையில் பேசத்தான் அனுமதி, கொடி ஏற்ற அனுமதி இல்லை' என்றனர்.

டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி பல மாவட்டங்களில் இருந்தும் வேன்களில் வந்திருந்தனர். தேரடித் திடலில் அலைமோதிய கூட்டத்தைப் பார்த்ததும் தினகரன் ஆனந்தமாகிவிட்டார்.

Advertisment

மைக் பிடித்த மா.செ. எஸ்.காமராஜ்... ""இன்று கூடியுள்ள கூட்டத்தில் ஒரு பங்கு கூட்டத்தை அமைச்சர் தரப்பு கூட்ட முடியுமா? போட்டிக்கு நாங்கள் தயார். நீங்கள் தயாரா?'' என்று அமைச்சர் காமராஜுக்கு சவால் விட்டார்.

7:30-க்கு மைக் பிடித்த டி.டி.வி.தினகரன், ""முதல்நாளே வந்து மன்னார்குடியில் தங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சின்னம்மா இல்லாமல் மன்னார்குடி வந்து தங்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் கும்பகோணத்தில் தங்கிவிட்டேன். இந்த இடத்தை தேர்வு செய்ய காரணம் அன்னை இந்திரா, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., அனைவரும் பேசிய திடல் இது. அதனால் நீங்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க திடலில் பேசவேண்டும் என்று அழைத்தார்கள். வழக்கம்போல காவல் துறை தடை போட்டது. நீதிமன்றம் நமக்கு வழி கொடுத்தது. 1988 செப்டம்பர் 15-ந் தேதி ஜெ., தனது சுற்றுப்பயணத்தை தஞ்சையில் தொடங்கினார். அவருடன் நானும் சின்னம்மாவும் வந்தோம். மன்னார்குடியில் "ஜெ.'வுடன் அருகில் நின்றேன்.

ஊரை அடித்து உளையில் போட்ட அமைச்சர்கள் எங்களிடம் இல்லை. முட்டையில் தொடங்கி, பருப்பு, ரோடு என்று ஊழல்கள் இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. "ஊழல் செய்யவே' என்று ரூ. 400 கோடிக்கு ஒரு திட்டம் வகுத்தனர். அதில் 4, 5 கோடிக்கு கூட வேலை நடக்கவில்லை. அதுதான் தூர்வாரும் திட்டம்.

Advertisment

எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தெரியும் நீங்கள் இருக்கப் போகும் இடம் மாமியார் வீடு. திருப்பரங்குன்றத்தில் நமக்கு மற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பர் போஸ் நம்மிடம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பார். எமன்களிடம் போய் இப்ப இறந்தே போய்விட்டார். அதே திருப்பரங்குன்றத்தில் 75 சதவீதம் ஓட்டு வாங்கி குக்கர் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

மன்னார்குடியில் ஒரு சுரங்கம் இருக்கு. அந்த சுரங்கத்தை தோண்டினால் கோடி கோடியாக கிடைக்கும். மாற்று வேட்டிக்கு வழியில்லாமல் ஒ.செ. அண்ணாதுரை (இளவரசி அண்ணன் ) யிடம் வேட்டி வாங்கிக் கட்டிக்கொண்டவருக்கு எத்தனை கோடிகள் இருக்கிறது.? மன்னார்குடி ரோட்ல திரிஞ்சவன் எல்லாம் காண்ட்ராக்டராம். ரோட்ல, பஸ் ஸ்டாண்ட்ல நின்னவர்... எங்க வீட்டு கல்யாணத்துலயும், கருமாதியிலயும் சாம்பார் வாளி தூக்கினவர் எல்லாம் அமைச்சர் (ஆர்.காமராஜ்) கோடிகளுக்கு அதிபதி.

இங்கே ஒரு பவர் சென்டர் (திவாகரன்) இருந்துச்சு. யாரையும் சுதந்திரமாக செயல்பட விடாது. அந்த பீடையும் ஒழிந்துவிட்டது. அந்த ஞானிகள் தொந்தரவும் இனி இருக்காது. அடிமைகள் தி.மு.க. ஆட்சி ஒழிய வேண்டும். சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஒன்றாகவே தேர்தல் வரும்'' என பட்டாசாக வெடித்தார் தினகரன்.

-இரா.பகத்சிங்