சேலம் மாநகராட்சியில் விதிகளுக்குப் புறம் பாக பணி நியமனங் கள் செய்த விவ காரத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் தேர்வுக்குழுவில் இடம் பெற்ற பொறியாளர்கள் வரை அனைவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாய்கிறது.
சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில் காலியாக இருந்த 6 செயல்திறன் உதவியாளர்கள் (ஸ்கில்டு அசிஸ்டன்ட் - கிரேடு 2) பணியிடங்களை நிரப்ப, கடந்த 9.12.2022-ல் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்தப் பணியிடத்திற்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem_70.jpg)
இந்தப் பணியில் சேர கடும் போட்டி நிலவியது. நேர்காணலில் மொத்தம் 55 பேர் கலந்துகொண்டனர். விதிகளை மீறி, சேலம் மாநகராட்சியில் அப்போது செயற்பொறியாளராக இருந்த செல்வராஜின் மகன் கனிஷ்ஹரன், மேயர் ராமச்சந்திரனின் அலுவலக உதவியாளராக பணியாற்றிவந்த அனந்தசயனத்தின் மகன் ஹரீஷ், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் பில் கலெக்டராகப் பணியாற்றி வரும் குப்புசாமியின் மகன் தமிழரசன், தி.மு.க. பிரமுகர்கள் சண்முகத்தின் மகன் ராமச்சந்திரன், அரியானூர் மோகனின் மகன் ஞானேஸ்வரன், மாஜி பில் கலெக்டர் சக்திவேலின் உற வினர் ஜெகதீஷின் மகன் ஸ்ரீதரன் ஆகிய 6 பேரும் நேர்காணலுக்கு முன்பே செயல்திறன் உதவியா ளராகத் தேர்வு செய்யப் பட்டுவிட்டனர்.
ஆளுங்கட்சிப் புள்ளிகளின் அழுத்தம் காரணமாக அப்போது சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ் ஐ.ஏ.எஸ்., பணி நியமனக் கோப்புகளில் கையெ ழுத்துப் போட்டி ருப்பது 'நக்கீரன்' கள விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக, சேலம் மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, "குறுக்கு வழியில் பணி நியமன ஆணை பெற்றவர்களில் ஒருவர் தவிர மற்ற 5 பேரும் அடிப்படை கல்வித்தகுதியை முடிக்காதவர்கள். இந்த இடத்திலேயே அவர்கள் பணிநியமனத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றனர். அவர்கள், திருவாரூர், சேலத்திலுள்ள தனியார் ஐ.டி.ஐ.க்களில் குறுகிய கால பயிற்சியை முடித்ததுபோல் போலிச் சான்றிதழ் பெற்றுவந்துள்ளனர். அவர்களின் கல்விச்சான்றிதழ்களை மாநகராட்சி பணியமைப்புப் பிரிவு ஊழியர்கள் சரிபார்த்திருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நேர்காணல் நடந்த காலகட்டத்தில் புதிய அரசாணை 152-ன் படி, செயல்திறன் உதவியாளர் (நிலை 2) பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. மேலும், இனச்சுழற்சி விதியும் பின்பற்றப்படவில்லை. இவ்வாறு, 6 பேர் பணி நியமனத்தில் அனைத்து விதிகளும் பட்டவர்த்தனமாக மீறப்பட்டுள்ளன'' என்கிறார்கள் சேலம் மாநகராட்சி அதிகாரிகள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem1_30.jpg)
இதுதொடர்பாக, 17-12-2022, 21-1-2023, 27-12-2023 நாளிட்ட "நக்கீரன்' இதழ்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்ட கனிஷ்ஹரன், ஹரீஷ், தமிழரசன், ராமச்சந்திரன், ஸ்ரீதரன், ஞானேஸ்வரன் ஆகிய 6 பேரையும் அப்போதிருந்த மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
இந்த பணி நியமன ஊழல் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்த நிலையில், பணி நியமன விதிகள் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட அடிப்படையான விவரங் களைக்கூட சரிபார்க்கத் தவறியதாக பணியமைப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, உதவி ஆணையர்கள் சாந்தி, சாய்லட்சுமி, இளநிலை உதவியாளர்கள் உதயநந்தினி, விஜயலட்சுமி, உதவியாளர் மாதவன், நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோருக்கு விளக்கம்கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர், கடந்த ஜூலை மாதம் தாம்பரம் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது ஒருபுறமிருக்க, செயல்திறன் உதவியாளர் பணிக்கான நேர்காணலின்போது தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஆத்தூர் ஆர்.செந்தில்குமார், கூத்தாப்பிள்ளை செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் சிற்றுளி செந்தில் என்கிற எஸ்.செந்தில்குமார், புவனேஸ்வரி மற்றும் அப்போதைய சேலம் மாநகராட்சி ஆணையரும், தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியருமான கிறிஸ்துராஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நகராட்சிகள் நிர்வாக ஆணையரகம் முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையே, செயல்திறன் உதவியாளர் பணி நியமனம் பெற்றவர்களுள் ஒருவரான ஹரீஷ், பணிநீக்க உத்தரவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 'டிஸ்போஸ்' செய்து கடந்த ஜூலை 22-ஆம் தேதி உத்தர விட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem2_29.jpg)
இதுதொடர்பாக தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சிவராசுவிடம் கேட்டபோது, "பணி நியமனத்தின்போது செலக்சன் கமிட்டியில் இடம்பெற்றிருந்த பொறியாளர்கள், அப்போதைய ஆணையர் கிறிஸ்துராஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். அவர்கள் இனி ஒருபோதும் பணி வாய்ப்புப் பெறமுடியாது'' என்றார்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "செயல்திறன் உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் இப்போது அதைப்பற்றி எதுவும் கூறமுடியாது'' என்றார்.
சேலம் மாநகராட்சி ஊழலுக்கு துணை போனவர்கள்மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்கக்கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-இளையராஜா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/salem-t.jpg)