சேலம் மாநகராட்சியில், போலி ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் வரித் தொகை, கணக்கில் வராமல் மாயமாகியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் மாநகராட்சியின் 2023-24ஆம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகள், அண்மையில் உள்ளாட்சித் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், சூரமங்கலம் மண்டலத்தில் பல கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Advertisment

ss

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்திலிருந்து சொத்து வரி, தொழில் வரி, பிறப்பு - இறப்பு படிவம், சொத்து பெயர் மாற்றம் உள்ளிட்ட பண மதிப்புப் படிவங்கள், ஒவ்வொரு மண்டல அலுலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். சூரமங்கலம் மண்டல அலுவலகத்திற்கு வழங் கப்பட்ட பண மதிப்புப் படிவங்களில் 1.30 லட்சம் பணமதிப்புப் படிவங்கள், போலி ரசீதுகள் மூலமாக சூரமங்கலம் மண்ட லத்தில் மட்டும் 16.11 கோடி ரூபாய் மாயமாகியுள்ளது.

வணிகர்கள், வியாபாரிகள், குடியிருப்பு வாசிகளிடமிருந்து காசோலையாக வசூலிக்கப்படும் தொகைக்கு உடனடியாக அதற்கான கணினி ரசீதை பில் கலெக்டர்கள் கொடுத்து விடுகின்றனர். அந்த காசோலை கள் வங்கியில் செலுத்தப்படும் போது, அவை பணமில்லாமல் திரும்பிவந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிட மிருந்து வரித்தொகை மற் றும் தண்டத்தொகையை வசூலித்து மாநகராட்சி வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். இந்த இடத்தில்தான் கோல் மால் நடந்துள்ளது.

Advertisment

ஏற்கெனவே கணினி ரசீது கொடுக்கப்பட்டு விட்டதால், வரி வருவாய் மாநகராட்சி கணக்கிற்கு வந்துவிட்டதாக கணினி யில் காண்பிக்கும். இது பெயரளவுக்கு மட்டுமே. பில் கலெக்டர்கள், ஆர்.ஐ.கள் முதல் மண் டல உதவி ஆணையர்கள் வரை வரிதாரர்களிடம் சொற்பத்தொகையை ரொக்கமாக வசூலித்துக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

சூரமங்கலம் மண்டலத்தில் தொழில் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படாததால் 1.91 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. சொத்து வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம் போன்ற காசோலைகளை திட்டமிட்டே பவுன்ஸ் செய்து மாநகராட்சி ஊழியர்கள் 2.27 கோடி வரை கையாடல் செய்துள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலைய நுழைவுக் கட்டண வசூல் பணிகளை, முன்பு சத்திய மூர்த்தி என்பவருக்கு, வாரத்திற்கு 1,48,350 ரூபாய் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் குத்தகை ஒப்பந்தம் வழங்கியிருந்தது. குத்தகைக் காலம் முடிவடைந்ததால் 24.4.2023 முதல் சூரமங்கலம் மண்டல நிர்வாகமே வசூலித்து வருகிறது. குத்தகை விடப்பட்டிருந்த கால கட்டத்தில் தினசரி வசூல் 32,820 ரூபாயாக இருந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் வசூலித்த போது 3000 ரூபாயாக குறைந்தது. இதனால் 24-4-2023 முதல்79 வாரத்திற்கு 1.17 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

சேலம் மாநகராட்சி பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 10.35 கோடி ரூபாய் இதுவரை கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கத்திற்குச் செலுத்தப் படவில்லை. இதில், சூரமங்கலம் மண்டல ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 2.16 கோடி ரூபாயும் அடங்கும். இந்த பணம் எங்கே சென்றதென்று விவரம் சொல்லப்பட வில்லை. உரிய காலத்தில் தவணையை செலுத்தாததால் வட்டி, அபராத வட்டியென 4.11 கோடி ரூபாய் பணியாளர்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது.

சூரமங்கலம் மண்டலத்தில் 2022-2023ஆம் ஆண்டில், வருவாய் நிதி, குடிநீர் நிதி இனங் களில் 6.05 கோடி ரூபாய் இதுவரை வசூலிக்காமலேயே போலி ரசீதுகள் போடப்பட்டுள்ளன. தொழில் வரி 92.30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படவில்லை. கையாடல் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் சுரேஷ்குமார், ஏ.ஆர்.ஓ. முருகேசன், வருவாய் ஆய்வாளர் வீரகுமார், காசாளர்கள் சிராஜ், சங்கர் ஆகியோர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தணிக்கை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஏ.ஆர்.ஓ. முருகேசன் மீது ஏற்கெனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையி லுள்ளது.

உள்ளாட்சித் தணிக்கைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாநகராட்சி எல்லைக்குள் பணியாற்றி வரும் அரசு மற்றும் சார்பு நிறுவனத் தொழி லாளர்களிடமிருந்து இ.பி. எஃப்.ஓ.விற்குச் செலுத்தவேண் டிய 31.69 கோடி தொழில் வரியும், இ.எஸ்.ஐ.க்கு செலுத்த வேண்டிய 21.20 கோடி தொழில் வரியும் வசூலிக்கப்படவில்லை. இதனாலும் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது'' என்றார்.

இதுகுறித்து சேலம் மாநக ராட்சி ஆணையர் ரஞ்சித் சிங்கிடம் கேட்ட போது, "இ.எஸ்.ஐ., இ.பி.எஃப்.ஓ. அமைப்பு களுக்குச் செலுத்தவேண்டிய தொகை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனினும், தணிக்கைத் தடையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ள குறைபாடுகளைச் சரிசெய்வது அவ்வளவு சுலபமில்லை. சேலம் மாநகராட்சிக்கு வருவாயும், அரசு நிதி உதவியும் போதுமானதாக இல்லை. இதனால் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்குவதிலும், ஓய்வுக்கால பலன்கள் கொடுப்பதிலும் சிக்கல் உள்ளது. தணிக்கைத் தடைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்றார்.

"சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல தணிக்கை அறிக்கையும் வெளியாகும் பட்சத்தில் பல நூறு கோடி ரூபாய் மோசடி அம்பலமாகும்...'' என்கிறார்கள்.