இருள் என்பதே குற்றத்தின் குறியீடு; இருள் என்பதே துயரத்தின் வெளிப்பாடு. இரவு 9 மணியளவில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் "மிட்நைட் மசாலா'வுக்கான பயணம் தொடங்கியது.
பேருந்துநிலையங்கள் என்றாலே கழிப்பறைகள் இருந்தாலும் திறந்தவெளியில் ’போகும்’ பயணிகளால் நாற்றம் நுரையீரலையே பிய்த்து எறிவதுபோல் இருக்கும். சேலம் பழைய பேருந்துநிலையத்தில் இன்னும் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தால் சுவாச நரம்புகளுக்குள் புகுந்து நம் மூச்சையே நிறுத்துவதுபோல் துர்நாற்றம் அடித்தது. "ஸ்மார்ட் சிட்டி' அதாங்க பொலிவுறு நகரமாக்கும் பட்டியலில் சேலமும் உள்ளது. ஆனால், பேருந்துநிலையம், அதையொட்டிய போஸ் மைதானம் என இருள்சூழ் இடங்களில் திறந்தவெளி பாசனம்(ஹெச். ராஜா சொன்னாரே அந்த பாசனம்தான்!) கரைபுரண்டு ஓடுகிறது. போதாக்குறைக்கு போஸ் மைதானம் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிக்கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் மதுபாட்டில் வீசப்பட்டு பாதசாரிகளின் கால்களில் கண்ணாடிச் சில்லு குத்தி இரத்தக்காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.
அப்படியே… டூவீலரில் பயணித்தபோது ஆடி பண்டிகையையொட்டி அரசு பொருட்காட்சிகளுக்கான கடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு வேலை செய்யும் ஊழியர்களும் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஊத்திக்கொள்கிறார்கள். தமிழகத்தில்… விளையாட்டு மைதானம் போல டாஸ்மாக் மைதானம் அமைத்த பெருமை சேலம் மாவட்டத்தை சாரும் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். வீடு தேடிவரும் டாஸ்மாக்கும் இங்குதான் ஃபேமஸ். தள்ளுவண்டியிலேயே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. தினமும் கொடுக்க வேண்டிய மாமூல்,… மாதம் ஒரு கேஸ்... இதை சரியாக செய்துவிட்டால் காக்கிகள் இவர்களை டச்சு பண்ணாமல் கிச்சு கிச்சுமூட்டி விளையாடிவிட்டு செல்வார்கள். இதைவிடக்கொடுமை, சிறுவர்கள் சீரழிப்புகளும் நடக்கின்றன.
அடுத்து நாம் அங்கிருந்து சேலம் புதிய பேருந்துநிலையத்திற்குச் சென்றபோது, திருநங்கைகளின் திருவிளையாடல்களை பார்க்க முடிந்தது. பார்த்த மாத்திரத்தில் பெண்ணென கண்டுபிடிக்கமுடியாவிட்டாலும், முழுமையான பெண்ணாக காட்டிக்கொள்ளும் அவர்களின் அதீத நளினமே அவர்களை காட்டிக்கொடுத்துவிடுகிறது. தனியான ஆண்கள்தான் அவர்களின் டார்கெட். விழிகளாலும் புருவங்களின் அசைவுகளாலும் ஆண்களை சுண்டி இழுத்துவிடுகிறார்கள். புருவம் உயர்த்தி ஃபேமஸ் ஆன பிரியா வாரியார் எல்லாம் சேலத்து திருநங்கைகளிடம் ட்யூஷன் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போது திடீரென்று வந்த போலீஸார் ரவுண்ட் கட்டி துரத்த, எஸ்கேப் ஆன திருநங்கைகள் போலீஸ் போனதும் மீண்டும் வந்து விடுகின்றனர். பிறகுதான், தெரிந்தது இது அவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு என்று. ""வாரா வாரம் போலீஸுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கோம். எங்களையும் சேர்த்துதான் கொடுத்துக்கிட்டிருக்கோம். "போலீஸு என்ன பண்ணுது?'னு பப்ளிக் கேட்டுடக்கூடாதில்லையா? அதான்.. விரட்டுற மாதிரி போலீஸ்காரங்க நடிக்கிறாங்க. நாங்களும் ஓடுறமாதிரி நடிச்சோம்'' என்ற திருநங்கை நம்மை அழைக்க… "வெரி சாரி' என்று சொல்லிவிட்டு நாம் எஸ்கேப் ஆனோம்.
இரண்டரை மணிக்கு தனியாக நிற்கும் இளைஞர்களை குறிவைத்து அழைக்கிறார்கள் சேலம் திருநங்கைகள். அந்த நேரத்தில் ஆக்டிங்காகக்கூட போலீஸ் விரட்டுவதில்லை. திருநங்கைகளுக்கு சளைத்தவர்களல்ல பெண்கள். சபலிஸ்டு ஆண்கள் யாராவது கிடைப்பார்களா? என்று இரவுநேரங்களில் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு உலாவுவதால்தான் புரோக்கர்களும் இவர்களை பின்தொடர்ந்து வந்து ‘அழைக்கிறார்கள். இதனால், வறுமையில் வாடும் பெண்களும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களும் இத்தொழிலுக்குள் வந்துவிடுகிறார்கள். இதில், அப்பெண்களை மட்டுமே குறைகூற முடியாது. அவர்களைத் தேடிச்செல்லும் ஆண்கள்தான் முதல் குற்றவாளிகள் என்று நம் எண்ணம் அட்வைஸ் செய்தது.
வீடற்ற விளிம்புநிலை மக்களுக்கு வானமே கூரை. பேருந்துநிலைய ப்ளாட்ஃபார்ம்தான் பெட்ரூம். கொசுக்கடியிலும் புழுக்கத்திலும் புழுதியிலும் படுத்து உறங்குகிறார்கள். பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. கொஞ்சநேரம்கூட அந்த கொசுக்கடியில் நிற்கமுடியவில்லை. ஆனால், காலங்காலமாக அந்த நாற்றத்தில் எப்படித்தான் படுத்துக்கிடக்கிறார்களோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் அப்படி உறங்குவது இதயத்துக்குள் ஈட்டி பாய்வதுபோல் உள்ளது. அப்படியே… சூரமங்கலம் ரயில்வே ஜங்ஷனுக்கு சென்றோம்.
சர்வசாதாரணமாக கஞ்சா பிசினஸ் நடக்கிறது. கஞ்சா வாங்கும் முகங்களை விற்பவர்களும், கஞ்சா விற்கும் முகங்களை வாங்குபவர்களும் எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ? ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. போதை தடுப்பு போலீஸுக்கு தகவல் கொடுத்தாலே ஒழுங்காக நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். இதில், அவர்களாகவா கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். இரவு முழுக்க கண்விழித்து அலைந்த நமது முகமே கஞ்சா குடித்ததுபோல் இருக்க, ஒரு தேநீரை குடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தோம்.…
(பயணிப்போம்)
-ரவுண்ட் அப்: இளையராஜா
தொகுப்பு: மனோ