கொடநாடு மறுவிசாரணையால் பதறிய எடப்பாடி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வேலுமணி சகிதம் ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். அப்போது, தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னரிடம் கதறியிருக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
அந்த சந்திப்பு பற்றி விசாரித்தபோது, ”கவர்னரிடம் அழாத குறையாகப் பேசிய எடப்பாடி, ’அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் கொடநாடு கொலை வழக்கை மறு விசாரணைக்கு எடுக்கிறது தி.மு.க.. ட்ரையல் முடியப்போகும் நிலையில், மறு விசாரணைங்கிற பேரில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து ரகசிய வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த வழக்கில் என்னை சிக்கவைக்க சதி நடக்கிறது. கவர்னர் என்ற முறையில் நீங்கள்தான் தடுத்து நிறுத்த வேண் டும்’ என சொல்லியிருக்கிறார்.
அதற்கு கவர்னரோ, "போலீசாரின் கடமையில் குறுக்கிட எனக்கு அதிகாரம் கிடையாது. எதை வைத்து உங்களுக்கு எதிராக சதி நடப்பதாகச் சொல்கிறீர்கள்?'' என கேள்வி எழுப்ப, "ஜாமீனில் வெளிவந்த நபருக்கு சம்மன் அனுப்பி மீண்டும் வாக்குமூலம் வாங்கியுள்ள னர். இப்படி வாக்குமூலம் வாங்க சட்டத்தில் இட மில்லை. அதனால்தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது'' என்றிருக்கிறார்கள் ஓ.பி.எஸ்.சும், கே.பி.முனுசாமியும்.
அப்போது பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், "ஜாமீனில் வெளியே வந்த சயான் என்பவனை போலீஸ் தூண்டிவிட்டு நீதி மன்றத்தில் மறு விசாரணை கோர வைத்துள்ளனர். வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே தி.மு.க. வழக்கறிஞர்கள்தான் ஆஜராகி யிருந்தனர். அ.தி.மு.க. தலைவர்களுக்கு எதிராக நடக்கும் அரசியல் சதியை உங்க ளால்தான் தடுக்க முடியும்'' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் சி.வி.சண்முகம்.
ஆனால், "கோர்ட் உத்தரவுபடிதான் போலீஸ் இயங்குகிறது; உங்களுக்கு எதிராக ஏதேனும் நடந்தால் அதனை சட்டப்படி அணுகுங்கள்'' என அட்வைஸ் செய்து அ.தி.மு.க. தலைவர்களை அனுப்பி வைத்துவிட்டார் கவர்னர் என்று சந்திப்பில் நடந்ததை கூறுகின்றனர் அ.தி.மு.க. சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள்.
கவர்னரிடம் அ.தி.மு.க. தலைவர்கள் முன்னிறுத்துவது போல, ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது வழக்கில் அதுவரை இணைக்கப்படாதவர்களை திடீரென இணைக்க முடியுமா? சட்டம் அதற்கு அனுமதிக்கிறதா? என்று குற்றவியல் வழக்கறிஞர் இளவரசு தர்மலிங்கத்திடம் நாம் பேசினோம்.
நம்மிடம் பேசிய அவர், "மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி.க்காக ஒதுக்கப்படவிருந்த அரசின் நிலக்கரிச் சுரங்கத்தை, பிர்லா குழுமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஹிந்தால் கோவிற்கு ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பான வழக்கிலும், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மகள் ஆருஷியும், அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் மர்மமான முறையில் இறந்த வழக்கிலும் மறுவிசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஆருஷி வழக்கில் அவரது தந்தை ராஜேஷ் தல்வார் தண்டிக்கப்பட்டார். என்.எல்.சி. வழக்கில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை விசாரிக்க உத்தர விட்டார் நீதிபதி. அந்த வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 மிகவும் வலிமையானது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒரு ஆதாரம் அல்லது வாக்குமூலம் ஏதேனும் ஒன்று கிடைத்தால், அதுவரையில் வழக்கில் சேர்க்கப்படாத வெளி நபர் எவராக இருந்தாலும் 319-பிரிவின்படி அவரை வழக்கில் சேர்க்க முடியும். ஆனால், அதற்கான அனுமதியை கொடுக்கும் சட்ட அதிகாரம் விசாரணை நீதிமன்றத் திற்குத்தான் இருக்கிறது.
சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இருக்க முடியாது என்பதால், எடப்பாடியும் அதற்கு விதிவிலக்கல்ல. அதே நேரத்தில், தி.மு.க. அரசு எந்த மாதிரியான வலுவான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே எடப்பாடி சிக்குகிறாரா? தப்பிக்கிறாரா? என்பது தெரிய வரும்'' என்கிறார் இளவரசு தர்மலிங்கம்.
மறு விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறை சயானிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது. அது குறித்து உள்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, கொடநாடு சம்பவத்தின்போது ஆவணங்களையும் வைரங்களையும் எடுத்து வருவதுதான் சயான் தரப்புக்கு கொடுக்கப்பட்ட அசைண்மெண்ட். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ், எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப்பன் ஆகிய ஐவர் அணி இருந்தது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவர்கள் சேர்த்த சொத்துக்களின் கணக்குகளை அன்றைக்கு உளவுத் துறையில் இருந்த ராமானுஜம், ஜெயலலிதாவிடம் கொடுத்திருந்தார். அதன்படி, ஐவர் அணியை அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜெயலலிதா அவர்களிடமிருந்து அசையும் அசையா சொத்துக்களை கைப்பற்றினார். அந்த டாகுமெண்டுகளெல்லாம் கொடநாடு எஸ்டேட்டில்தான் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த ஆவணங்களை கொள்ளையடித்ததை போலீசிடம் விவரித்துள்ள சயான், இந்த அசைன்மெண்ட்டை தனக்கு கொடுத்த சஜீவனிடம் ஆவணங்களை கொடுத்ததாகவும், அதனை கனகராஜ் வாங்கிக் கொண்டு சேலத்துக்கு சென்றார் எனவும், முதலமைச்சராக இருந்த எடப்பாடிக் காகத்தான் இதனை செய்வதாக சஜீவனும் கனகராஜும் தன்னிடம் சொன்னதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கனகராஜிடமிருந்து சேலம் இளங்கோவனிடம் சென்ற ஆவணங்கள், ஒரு வக்கீல் மூலமாக எடப்பாடியிடம் சேர்க்கப்பட்டுள்ளது’ என்று விவரிக்கிறார்கள்.