சபரிமலை ஐயப்பன் சந்நிதி நடையை, பதட்டத்தோடு தான் திறக்க வேண்டும், பதட்டத்தோடுதான் சாத்தவேண்டும் என்ற நிலையை இரண்டு தரப்புகளும் போட்டி போட்டு செய்துகொண்டிருக்கின்றன.
சித்திரை திருநாள் பாலராம வர்மா மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஜா குடும்பத்தினர் வழிபடுவதற்காக நவம்பர் ஐந்தாம் தேதி காலையில் நடை திறந்து, மாலையில் நடை சாத்துவார்கள். இந்த வழக்கம் மகாராஜா உயிரோடு இருந்த காலத்தில் தொடங்கியது. எந்த ஆண்டும் இந்த நாளில் (05.11.18) விரதமிருக்கும் பக்தர்கள் வருவதில்லை. மகாராஜா குடும்ப வாரிசுகள் மட்டுமே வருவார்கள்.
ஆனால் இந்த ஐந்தாம் தேதி?
""இளம் பெண்களை சந்நிதிக்கு அனுப்புவதற்கு பினராயி விஜயன் அரசாங்கமும் முற்போக்காளர்கள் என்ற போர்வையில், இந்து மத எதிரிகளும் திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஐயப்ப சேவா கமிட்டியினர், அறுபது வயதைத் தாண்டிய ஐயப்ப பெண் பக்தர்களை திரட்டியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நூறு நூறு பெண்களாக சந்நிதி செல்வார்கள். போலீஸ் பாதுகாப்போடு வரும் இளம் பெண்களைத் தடுத்து திருப்பி அனுப்புவார்கள்'' என்கிறார்கள் ஐயப்ப சேவா கமிட்டியைச் சேர்ந்தவர்கள். இதற்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டம் முழுதும் நவம்பர் 5 அன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
""எந்தப் பெண் வந்தாலும் மேலே (சந்நிதிக்கு) அனுப்ப வேண்டும்'' என்று ஐ.ஜி. மனோஜ் ஆப்ரகாமிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். இந்த திட்டத்தை முறியடிப்பதற்காகத்தான் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நூறு முதிய பெண் பக்தர்களை சந்நிதிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ். தரப்பு.
ஐப்பசி முதல் வாரத்தில் நடந்த ஆறுநாள் தரிசனத்தின் போதும், பதட்டமும் மோதல் களும் நடந்ததால், 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அப்போது 3 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் களில் 250 பேர் ரிமாண்ட் செய் யப்பட்டார்கள். மற்றவர்கள் ஜாமீனில் விடப்பட்டார்கள்.
ரிமாண்டான 250 பேரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இவர்கள் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சேதப்படுத்தியதாக ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
சேதப்படுத்திய சொத்தின் மதிப்பான ஒரு கோடியே 20 லட்சத்தை இவர்கள் செலுத்தியாக வேண்டும். இதுதான் ஆர்.எஸ்.எஸ். தரப்பிற்கு அதிர்ச்சியூட்டியிருக்கிறது.
தடையுத்தரவை மீறியதாக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட சபரிமலா இயக்கத் தலைவர் ராகுல் ஈஸ்வர், கொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ""சபரிமலை கோயிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என்பதில் நாங்கள் தீவிரமாக இருந்தோம். சந்நிதானத்தில் போலீசாரை நாங்கள் தாக்கினாலும் அவர்கள் எங்களைத் திருப்பித் தாக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதோடு சபரிமலை பாதுகாப்புச் சேனையில் நாங்கள் 20 பேர் ஒரு திட்டத்தோடு தயாராக இருந்தோம். எங்களை மீறி இளம்பெண்கள் படியேறினால் நாங்கள் இருபதுபேரும் பிளேடுகளால் எங்கள் கைகளைக் கீறிக் கொள்வதென்றும், பதினெட்டு படிகளிலும் எங்கள் ரத்தத்தை சிந்தி, பதினெட்டுப் படிகளின் புனிதத்தை கெடுத்து, அதன் காரணமாக கோயில் நடையை சாத்த வைத்து, இளம்பெண்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். ஆனால் அதற்கு அவசியம் இல்லாது போய்விட்டது'' என்றார் ராகுல் ஈஸ்வர். அதிரடிப் பேர்வழியான இந்த ராகுல் ஈஸ்வர், முன்பு சங் பரிவார் அமைப்பில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து பிரவீன் தொகாடியா வெளியேறியபோது இவரும் வெளியேறி தொகாடியா அமைப்பில் இருப்பவர். இவரது இந்தத் தீவிரத்தால் தந்திரி குடும்பத்தினர் தங்கள் குடும்பத்திலிருந்து இவரை நீக்கிவிட்டனர்.
சித்திரை திருநாள் பாலராமவர்மா மகாராஜாவின் பிறந்த நாள் வழிபாட்டுக்காக 05.11.18 அன்று திறக்கப்பட்ட ஒருநாள் வழிபாடும் கலவர மேகங்களை சபரிமலையில் உருவாக்கி விட்டிருக்கிறது.
-பரமசிவன்
-மணிகண்டன்