ஈரோடு மாவட்டத்தில் சமூக வலைத் தளங்களான முகநூல், இன்ஸ்டா கிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்திவருபவர்களைக் குறிவைத்து இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பியும், ஆபாச வீடியோ காட்சிகளைக் காண்பித்தும் சல்லாப வலையில் விழவைத்து பணம் பறிக்கும் கும்பலின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
குடும்பப் பெண்கள், இளம்பெண்கள் தங்களது புகைப்படத்தை வாட்ஸ்ஆப் டி.பி. யாக, முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவிடும்போது டவுன்லோடு செய்யும் மோசடிக் கும்பல், அதனை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றி இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க அணுகவும் என செல் போன் எண்ணைப் பதிவிடுகின்றனர். இந்த புகைப்படங்களைப் பார்த்து உண்மை என நம்பும் நபர்கள் தொலைபேசியில் அழைக்கும் போது அருகாமையிலுள்ள விடுதிக்கு வரவேண் டும், சேவைக் கட்டணம், அறைக் கட்டணம், ரிட்டர்னிங் ஜார்ஜ் என ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் குறிப் பிட்ட வங்கிக்கணக் குக்கு பணம் அனுப்பச் சொல்வர். அனுப்பி விட்டு அந்த விடுதிக்கு வந்து பார்க்கும்போது அங்கு யாரையும் காணாமல் ஏமாந்துபோவர்.
இதேபோல வீடியோகால் சர்வீஸ் என்ற பெயரில் ஆபாச வீடியோ நேரடி சேவை எனக் கூறி வாட்ஸ்ஆப் வீடியோ காலில் வரும்போது சம்பந்தப்பட்ட பெண்ணுடன் இணைத்து வீடியோவை தொழில்நுட்ப உதவியுடன் பதிந்துகொள்வர். இதனை குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், சமூக வலைத்தளத்தில் உள்ள உங்களது நட்பு வட்டத்தினருக்கும் அனுப்பிவிடுவேன் என மிரட்டி இந்த மோசடிக் கும்பல் பணம் பறித்துவருகிறது.
பாதிக்கப்படும் இளைஞர்கள், நபர்கள் தான் ஏமாற்றப்பட்டதை காவல்துறையிடம் தெரிவிக்கவும் முடியாமல் இதனை வெளியே தெரிவித்தால் அவமானம் ஏற்படும் என நினைத்து மோசடிக் கும்பல் கேட்கும் பணத்தை கொடுத்துவிடுகின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இணையதள மோசடிக் கும்பல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தினருக்கும் வலைவிரித்து வருகின்றனர்.
இந்த இணையதள மோசடிக் கும்பலின் மோசமான செயல் ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பாதிக் கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. வடமாநிலத்திலிருந்து காவல் உயரதிகாரிகள் பேசுவதாகக் காட்டிக்கொண்டு, பேசும்போது பின்புலத்தில் காவல் நிலையத்தில் உள்ளதுபோல வாக்கி டாக்கியின் சப்தம் ஒலிக்கவிட்டபடி பேசி, பேசுபவரின் குடும்பத்திலுள்ள நபர்களின் பெயரைக் கூறி விபச்சார வழக்கு, போதைப் பொருள் வழக்கு, திருட்டு வழக்கு, கடத்தல் வழக்கு, கொலை வழக்கு, தேசத்துரோக வழக்கு என ஏதாவது ஒரு வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறிப் பேசும் நபர்களை பதற்றமடையச் செய்து அவர்களிடமிருந்து பணம் பறித்துவருகின்றனர்.
மேற்கு மண்டலமான ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் செல்வச் செழிப்புடன் இருக்கும் நபர் களை சமூக வலைத்தளங்கள் வழியாகவும், மற்ற வழிகளிலும் நோட்டமிடும் மோசடிக் கும்பல் இத்தகைய நபர்களை குறிவைத்துச் செயல்படுகிறது. சமூக வலைத் தளங்கள் மூலமாக ஒரு நபர் சில விஷயங்களில் பலவீன மானவர் என கண்டுகொண் டால், அவருக்கு சில வீடியோ துணுக்குகளை அனுப்பியோ, பெண்கள் எளிதாகக் கிடைப்பர் என்று ஆசையைத் தூண்டியோ தங்கள் வலையில் வீழ்த்துகின்றனர்.
இதில் இரண்டு வகை உண்டு. முதலில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட விடுதிகளுக்கு வரச்சொல்லி எதையுமே பதிலுக்குத் தராமல் ஏமாற்றும் மோசடிக் கும்பல் ஒருவகை. இவர்கள் 25,000, 30,000 என மிகக் குறைவான தொகையை மட்டுமே வசூலிப்பர். ஏமாந்தவரும் இந்தத் தொகைக்காக போலீஸிடம் போவதா எனத் தயங்கி தவிர்த்துவிடுவார்.
இன்னொரு வகையினர் டீன்ஏஜ் முதல் பல்வேறு வயது வரம்புகளில் ஒவ்வொரு பெண்ணுக்கு ஒரு விலை நிர்ணயித்து ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபடும் கும்பல். இந்த இரண்டாவது கும்பல், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வறட்சி ஏற்படும்வரை சேவையளித்துவிட்டு, அவரிடம் கையில் காசு இல்லையென்றதும் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடும். தவிரவும், இயல்பான பாலியல் தொழிலில் வசூலிக்கப்படும் தொகையைவிட மும்மடங்கு, நான்கு மடங்கு தொகையை வசூலித்துக் காசுபார்த்துவிடும். சமயங்களில் அந்தரங்கமான தருணங்களை பதிவுசெய்து கொண்டு மிரட்டியும் பிடுங்குவதுண்டு.
"இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கி காசு இழக்கும் நபர்கள் முதலில் பதற்றமடையாமல், இணையதளத்தில் நடைபெறும் குற்றம் தொடர்பான சைபர் க்ரைமின் புகார் எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள், ரகசியங்கள் யாருக்கும் வெளியிடப்படாமல் காக்கப்படும். பாதிக்கப்படும் நபர்களுக்கு கைகொடுக்க நாங்கள் இருக்கிறோம். பாதிக்கப்படும் நபர்களின் மான அவமானத்தையும், பயத்தையும் பதற்றத்தையும் மூலதனமாகக் கொண்டே இந்த மோசடிக் கும்பல் செயல்படுகிறது. நீங்கள் தைரியமாக முன்வந்து தெரிவிக்கும் புகார்தான் மோசடிக் கும்பலை பிடித்து தக்க தண்டனை வழங்க உதவும்''’என ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி தெரிவிக்கிறார்.