நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உள்ளாட் சித் தேர்தலை நடத்த வேண்டிய சூழல்களை ஆராய்ந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைக் கேள்விப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தி.மு.க. நிர்வாகிகளிடமும் டென்சன் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் தி.மு.க.வினர்.

அதேசமயம், முதல்வர் ஸ்டாலினின் இந்த ஆலோசனையை உற்றுக் கவனித்துவரும் எதிர்க்கட்சிகள், சில முடிவுகளை ஸ்டாலின் எடுத்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளன.

ss

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கும் கடந்த 2019, டிசம்பரில் ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தல் நடந்தது. வார்டு மறுசீரமைப்பு முடிக்கப் படாததால் குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும், தனது தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

Advertisment

இந்த நிலையில், 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இந்தாண்டு டிசம்பர் மாதம் முடிவடைகிறது. அதனால் டிசம்பருக்குள் அந்த 27 மாவட்டங்களுக்கான ஊராக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டிய சூழல். அதற்கு குறைவான மாதங்களே இருப்பதால் அந்த தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு இப்போது உயரதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூத்த தலைவர்களுடன் விவாதித்துள்ளார் ஸ்டாலின். இது தொடர்பாக வெவ்வேறு கோணங்களுடன் பல தகவல்கள் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில எதிர்ப்புகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.

அதாவது, 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். 2021 செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்தவேண்டும். 2026 செப்டம்பர் என்பது சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வருவது. 2026 சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் இருக்கலாம் அல்லது பாதகமாகவும் இருக்கலாம். அந்த சூழல்களை அப்போதுதான் கணிக்கமுடியும்.

st

Advertisment

அதனால், 27 மாவட்டங்களுக்கும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்போது மற்ற 9 மாவட்டங்களுக்குமான தேர்தலையும் சேர்த்து நடத்தலாம். அதற்கேற்ப, அந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிடலாம். அதனால், ஜூன் மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலைத்தலுக்குரிய சட்ட மசோதாவை நிறைவேற்றலாம் என்று அதிகாரிகள் தரப்பில் ஒரு ஆலோசனை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனை அவர் ஆமோதித்ததாகவும் தெரிகிறது.

அதேசமயம், இதுகுறித்து மூத்த தலைவர் களுடன் ஸ்டாலின் ஆலோசித்தபோது, ”உள்ளாட்சி பிரதிநிதிகளான மேயர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் களின் நடவடிக்கைகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி அது நமக்கு எதிராக அமைந்துவிட்டால், நம் ஆட்சி மீதுதான் எதிர்மறை விமர்சனம் விழும்.

அதுமட்டுமல்ல; நாடாளுமன்ற தேர்தல் களைப்பே இன்னும் நம் கட்சியினருக்கு (தி.மு.க.) தீராமல் இருக்கும் நிலையில், குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு தேர்தலை நடத்தினால் அவர்களால் சமாளிக்க முடியுமாங்கிறதுதான். இது, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது. அதனால், 2026-ல் பதவிக்காலம் முடியும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் காலத்திலேயே தற்போதைய 27 மாவட்டங்களுக் கான தேர்தலையும் நடத்துவோம் அல்லது 2026 சட்டமன்ற தேர்தலோடு அனைத்து மாவட்டங் களுக்கும் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம். அதற்கேற்ப, 27 மாவட்டங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரியை நியமித்து நிர்வகிக்கலாம்”என்று விவரித்திருக் கிறார்கள்.

இதனையறிந்துள்ள 27 மாவட்டங்களின் தி.மு.க.வின் உள்ளாட்சி பிரதிநிதிகளோ, பதவிக் காலம் முடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும். மக்களிடம் நல் மதிப்பை நாங்கள் பெற்றி ருக்கிறோம். தலை வரின் ஆட்சியின் சாதனைகள் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என்று ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்தபடி இருக்கின்றனர்.

ss

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் சூழல்களை ஸ்டாலின் ஆராய்ந்து வருவது அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர் களுக்கும், 2026-ல் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவிருக்கும் 9 மாவட்டங்களின் தி.மு.க.வின் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் தெரிய வந்திருக் கிறது. அதன்படி தி.மு.க. பிரதிநிதிகள், "நாங்கள் பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. எங்களின் பதவிக் காலமான 5 ஆண்டு களை முழுமையாக முடிக்க அனுமதிக்க வேண்டும். இடையில் கலைத்து விடாதீர்கள்' என தி.மு.க. தலைமைக்கு தெரியப்படுத்தியபடி இருக்கின்றனர்.

மீண்டும் தங்களுக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற சந்தேகத்தில் தான் "முழுமையாக 5 ஆண்டுகள் எங்களை இருக்க விடுங்கள்' என தி.மு.க. பிரதிநிதிகள் வலியுறுத்துவதன் பின்னணியாக இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தி.மு.க.விலேயே இப்படி மாறுபட்ட கருத்துக்கள் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், அதிகாரிகள் தரப்பில் சொன்ன ஆலோசனையின்படி தேர் தலை நடத்தும் முடிவில் உறுதியாக இருப்பதாக ஊரக உள்ளாட்சித்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. மேலும், தனது முடிவை சீனியர் அமைச்சர்களிடம் அழுத்தமாக ஸ்டாலின் தெரிவித்துவிட்டார் என்றும் அறிவாலய வட்டாரங்கள் சொல் கின்றன.

மேலும், உள்ளாட் சித் தேர்தலை சக்சஸ் ஃபுல்லாக நடத்துவதற் காக கட்சி அதிகாரத்தை பரவலாக்கவும் ஆலோ சிக்கிறார் ஸ்டாலின். அதாவது, 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற ரீதியில் தி.மு.க. மாவட்ட அமைப்பில் மாறுதல்களை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறாராம் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த மாறுதல்கள் வேகமெடுக்கும் என்கிறார்கள்.

அதன்படி "சென்னையிலுள்ள துறைமுகம், ராயபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு; பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதிகளுக்கு ஆர்.டி.சேகர்; அண்ணா நகர், கொளத்தூர் தொகுதிகளுக்கு ஐ.சி.எஃப் முரளி; எழும்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு பரந்தாமன்; சைதாப்பேட்டை, வேளச்சேரி தொகுதிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்; ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகளுக்கு சிற்றரசு; விருகம்பாக்கம், தி.நகர் தொகுதிகளுக்கு கே.கே.நகர் தனசேகரன்; மயிலாப்பூர் தொகுதிக்கு மயிலை வேலு; சோழிங்கநல்லூர் தொகுதிக்கு அரவிந்த் ரமேஷ் ஆகியோர் மா.செ.க்களாக நியமிக்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது' என்கின்றனர் உடன்பிறப்புகள்.

அதேபோல காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், "திருப்போரூர், செங்கல்பட்டு தொகுதிகளுக்கு இமயவரம்பன்; பல்லாவரம், ஆலந்தூர் தொகுதி களுக்கு கருணாநிதி; தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன்; காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு சுந்தர்' என நியமிக்கலாம் எனவும் ஸ்டாலின் முடிவு செய் திருப்பதாக சொல்லப்படு கிறது. இதில், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி களில் ஸ்ரீபெரும்புதூருக்கு பதிலாக செங்கல்பட்டு தொகுதி தா.மோ. அன்பரச னுக்கு ஒதுக்கப்படலாம் என்றும், அதேசமயம், தாம்பரம், செங்கல்பட்டிற்கு மா.செ.வாக தாம்பரம் ராஜா முயற்சிப்ப தாகவும் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க.வில் பரவிக்கிடக்கிறது.

இப்படி 2 சட்டமன்றத் தொகுதி களுக்கு ஒரு மா.செ. என்கிற அளவு கோலின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க. அமைப்பில் மாறுதல் செய்யப்பட விருப்பது பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில், இதனை தி.மு.க.வினர் வரவேற்கவே செய்கின்றனர். ஆக, "உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மையப்படுத்தி, மா.செ.க்களின் எண்ணிக்கையை அதிகரித்து கட்சியின் அதிகாரத்தைப் பரவலாக்கினால், அது சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் பணிகளை வலிமையாக மா.செ.க்கள் முன்னெடுப் பதற்கு உதவும்' என்று உதயநிதியிடமும் சொல் லப்பட்டுள்ளது என்கிறார்கள் இளைஞரணியினர்.

தி.மு.க. தலைமையில் ஆலோசனைகள் இப்படியிருக்கும் நிலையில், இந்தாண்டு 2024, டிசம்பரில் நடத்தவேண்டிய தேர்தலை முதல்வர் ஸ்டாலின் தள்ளிப்போட்டாலோ அல்லது 2026 செப்டம்பரில் முறைப்படி நடக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை 2024 டிசம்பரிலேயே நடத்தும்வகையில் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்தாலோ அதனை எதிர்த்து அ.தி.மு.க. கவுன் சிலர்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். அப்படி அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தால் அதே பாணியில், தாங்களும் வழக்குத் தொடர மற்ற எதிர்க்கட்சிகளும் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன. ஆக, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு தேர்தல் களத்தை சந்திக்க தயாராகிறது தமிழ்நாடு.