உலகப் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க. ஆதரவு மாணவ அமைப்பால் இந்த ஆண்டும் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் முன்னாள் பிரதமர் நேரு பெயரில் 1966-ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் (ஜெ.என்.யு) தொடங்கப்பட்டது. நாட்டிலுள்ள பல்வேறு இடங்களிலிருந்து மாணவர்கள் அங்கு தரமான கல்வி பயின்று அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்கள். ஜே.என்.யு.வில் கல்வியைக் கடந்து மாணவர் தேர்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும்.
இடதுசாரி கருத்தியல் சார்ந்த நபர்களை உருவாக்குவதில் ஜே.என்.யு. மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற மாணவர்சங்க தேர்தல் முடிவுகளும் அதையே பிரதிபலித்திருக்கிறது. எஸ்.எஃப்.ஐ., ஏ.ஐ.எஸ்.ஏ., ஏ.ஐ.எஸ்.எஃப்., டி.எஸ்.எஃப். ஆகிய இடதுசாரி மாணவ அமைப்புகள் ஒன்றிணைந்து போட்டியிட்டன. ஏ.பி.வி.பி., என்.எஸ்.யு.ஏ., பப்சா ஆகிய அமைப்புகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. தேர்தல் கடந்த செப் 14-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை 67.8% வாக்குகள் பதிவாயின.
ஐயாயிரம் நபர் களுக்குமேல் வாக்களித்த நிலையில் 16-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருந்தன. அதற்கு முன் தினம் பா.ஜ.க.- ஆர். எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஏ.பி.வி.பி. மாண வர்கள் வாக்கு எண் ணிக்கை நடைபெறும் இடத்திற்குச் சென்று தேர்தல் அதிகாரிகளை தாக்கவும், சீலிடப்பட்ட வாக்குப் பெட்டிகளைத் தூக்கிச்செல்லவும் முயற்சி செய்யவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்புடன் நடத்தப் பட்ட வாக்கு எண்ணிக்கை யில் தொடக்கம் முதலே இடதுசாரி கூட்டணி முன்னிலையில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடி வில் தலைவராக சாய் பாலாஜி, துணைத்தலைவ ராக சரிகா சௌதாரி, பொதுச்செயலாளராக அயேஜாஸ் அஹமது ரத்தார், இணைச் செயலாள ராக அமுதா ஜெயதீப் வெற்றி பெற்றனர்.
2017 தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி 39%, ஏ.பி.வி.பி. 21.5%, பப்சா 19.3% வாக்குகள் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது நடந்த தேர்தல் முடிவில் இடதுசாரி கூட்டணி 44.5%, ஏ.பி.வி.பி 21.7%, பப்சா 13.7% பெற்றிருக்கின்றன. இடதுசாரி கூட்டணிக்கு தற்சமயம் 5% வாக்குகள் அதிகரித்திருக்கின்றன. மூன்றாண்டு தேர்தல் களில் தொடர்ச்சியாக இடதுசாரி கூட்டணியே தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய முக்கிய நான்கு பதவிகளில் வெற்றிபெற்று வந்திருக்கிறது. 2015-ல் முன்னாள் தலைவர் கன்னைய குமார் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது முதல் தொடர்ச்சியாக இடதுசாரி அமைப்புகள் வெற்றிபெற்று வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
உலகப் புகழ்பெற்ற இந்த பல்கலைக் கழகத்தில் இடதுசாரி மாணவ அமைப்புகளின் வெற்றி குறித்து முன்னாள் மாணவரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான இளங்கோவிடம் கேட்டோம். ""ஜே.என்.யு. பல்கலைக்கழகம் தொடங்கியது முதல் இடதுசாரி பார்வையுடைய மாணவர்களை அதிகம் கொண்டதாக திகழ்ந்துவருகிறது. 1990-களில் மண்டல் கமிஷனுக்கு எதிர்ப்பு இருந்த சமயத்தில்தான் ஜே.என்.யு.க்குள் வலதுசாரி அமைப்புகள் வந்தன. அதற்குமுன்னர் சுகந்திரச் சிந்தனையாளர்கள் என்கிற பெயரில் வலதுசாரி அமைப்பாக இருந்தார்கள். இப்போதைய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த அமைப்பில் இருந்தார். வலதுசாரி அமைப்பைச் சார்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளவே அச்சப்பட்ட நிலை இருந்தது. ஆனால் 1991-க்குப் பிறகு நிலைமை மாறியது.
தற்போது இடதுசாரிகள் கூட்டணி சேர காரணம் அரசியல் முதிர்ச்சிதான். அவர்கள் எதிர்ப்பது ஏ.பி.வி.பி.யை மட்டுமல்ல, மத்திய அரசையும் அதன் துணைகொண்ட நிர்வாகத் தையும்தான். ஐந்து அமைப்புகள் சேர்ந்ததால்தான் அவர்களைத் தோற்கடிக்க முடிகிறது என்பது பிரச்சனையல்ல. இதுபோன்ற பல்கலைக் கழகத் தேர்தலின் மூலம் நமக்கு சொல்லப்படுவது பாசிச சக்திகளை எதிர்க்க இடதுசாரி, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டுமென்பதைத்தான். மத்திய-மாநில தேர்தல்களில் அவர்களை ஒழிக்க இதுவே சிறந்த வழி. அதை வெளியில் இருக்கக்கூடிய இடதுசாரிக் கட்சிகள் உணர வேண்டும்.
இந்த முறை அனைத்து சமூக, பொருளா தாரப் பிரிவுகளைத் தாண்டி அனைத்துப் பிரிவு மாணவர்கள் மத்தியிலும் இடதுசாரி மாணவர் களுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தைவிட பல்கலைக்கழக தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. மாண வர்கள்மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்ட போது, ஆசிரியர்கள் களத்திலிறங்கி மாணவர்களு டன் நின்றனர். இதுதான் மற்ற பல்கலைக்கழகங் களுக்கும் ஜே.என்.யு.வுக்கும் உள்ள வித்தியாசம். மத்திய அரசின் கொள்கைகள், ஜே.என்.யு.-வை முடக்க நிர்வாகம் செய்யும் செயல்களை மாணவர்கள் விரும்பாததன் விளைவே இந்தத் தேர்தல் வெற்றி'' என்கிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்துக்கான மாணவர் சங்க தேர்தலில், வாக்கு எந்திரத்தில் மோசடி செய்து ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு வெற்றிபெற்ற நிலையிலும், ஒற்றுமையால் சாதித்திருக்கிறார்கள் ஜே.என்.யு. மாணவர்கள்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பது நமது பள்ளிப்பருவ பாடம். ஜே.என்.யு. மாணவர்கள் தமது ஒற்றுமையின்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அதைத் தான் பாடம் நடத்தியிருக் கின்றனர் என்றே இதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஜனநாயக- இடதுசாரி சக்திகள் ஒன்றுபட்டால் மதவெறி சக்தியை ஓட ஓட விரட்டலாம்.
-சி.ஜீவாபாரதி