தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. விஜயகுமார் வீட்டு வாசலில் வீசப்பட்ட அந்த மர்மப் பொருள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எம்.பி.யின் வீடு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் இருக்கிறது. கடந்த 24-ம் தேதி காலையில் அவர் வீட்டு வாசலில் கிடந்த அந்த உருண்டையான மர்மப் பொருளைப் பார்த்த, அவரது டிரைவர் ஷைஜீ, எம்.பி.யின் மனைவி மற்றும் மகனிடம் இதைத் தெரிவிக்க, பதட்டம் அடைந்த அவர்கள் டெல்லியில் இருந்த விஜயகுமாருக்குத் தகவலை பாஸ் செய்தார்கள். இதைத் தொடர்ந்து நேசமணி நகர் போலீஸுடன், உளவுத்துறையினர், க்யூ பிராஞ்சினர், வெடிகுண்டு நிபுணர்கள் என அனைவரும் மோப்ப நாய் சகிதம் ஸ்பாட்டில் குவிந்தனர். எம்.பி.யின் ஆதரவாளர்களும் அங்கே திரள, பதட்டம் எகிற ஆரம்பித்தது.
அதை சோதித்த வெடிகுண்டு நிபுணர்கள், உருண்டை வடிவிலான ஐஸ்கிரீம் டப்பாவில் வெறும் பட்டாசு மருந்தை நிரப்பி, வீசியிருப்பது தெரியவந்தது. அது வெடித்தாலும், பயங்கர சத்தம் இருக்குமே தவிர வேறு பாதிப்புகள் இருக்காது என்று தெரிந்த பிறகுதான் அனைவரும் நிம்மதியடைந்தனர். ஆனாலும், இந்த டுபாக்கூர் வெடிகுண்டை எதற்காக? யார் வீசினார்கள்? என்பதை அறிய அங்குள்ள சி.சி.டி.வி. பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
லோக்கல் அ.தி.மு.க.வினரோ ""இந்த விவகாரம் பற்றி ஆராய்வதற்குமுன் லோக்கல் பாலிடிக்ஸை நல்லா தெரிஞ்சிக்கனும். விஜயகுமார் சசிகலாவின் ஆதரவாளராக இருந்தவர். 2016-ல் இவரை மேல்சபை எம்.பி.யாக்கிய ஜெயலலிதா, அவரை ஒருங் கிணைந்த குமரியின் மா.செ.வாகவும் ஆக்கினார். இது கட்சியின் சீனியர் பிரமுகர்களான தளவாய்சுந்தரம், பச்சைமால், நாஞ்சில் முருகேசன் போன்றோருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் நினைத்த மாதிரியே விஜயகுமாரும் தனி கோஷ்டியை உருவாக்கிக் கிட்டு, அவர்களை ஓரம்கட்ட ஆரம்பிச்சார்.
ஜெ. மறைவுக்கு பிறகு இவர் எடப்பாடி அணிக்கு மாறினார். இருந்தும் கட்சியில் தளவாய் சுந்தரத்தின் கைதான் ஓங்கியது, விஜயகுமாரின் மா.செ. பதவியும் பறிக்கப் பட்டதோட, மாவட்டத்தை கிழக்கு மேற்குன்னு பிரித்து, தளவாயின் ஆதரவாளர்களை அவற்றின் மா.செ.க்களாக உட்கார வைத்துவிட்டார் எடப்பாடி.
இதனால் அப்செட்டான விஜயகுமார், கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிச்சார். இந்த நிலையில் எடப்பாடி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையிலேயே அவரை தளவாய் தரப்பு ஏறவிடவில்லை. இதனால், கடுப்பான விஜயகுமார், பா.ஜ.க.வில் சேரும் திட்டத்துடன், வசந்தகுமாரால் காலியான குமரி தொகுதியில் சீட் வாங்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதுக்கு பொன். ராதாகிருஷ்ணன் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதனால் அவரால் அங்கும் போகமுடியலை. இந்த நிலையில்தான் இப்படி''’என்றார்கள் விரிவாகவே.
விஜயகுமாரின் ஆதரவாளர்களோ, ""ஜெயலலிதாவின் அன்பையும் வாழ்த்தையும் பெற்றவர் எங்கள் எம்.பி., அவர் பா.ஜ.க.வுக்குப் போகப் போறதா சொல்லப்படுவது வெறும் வதந்தி. அவர் வளர்ச்சியை இங்க இருக்கும் சீனியர்களால் ஜீரணிக்க முடியலை. அதனால் அவருக்கு எதிராவே எதையாவது பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஏற்கனவே, கையில் கத்தியோடு ஒருவன் எம்.பி. வீட்டுக்குள் நுழைய முயல, அவனை போலீஸில் பிடித்துக் கொடுத்தோம். ஆனால் அவனை மனநிலை பாதித்தவன்னு சொல்லிவிட்டார்கள். இப்ப பட்டாசை வைத்து, எம்.பி.யை மிரட்டப் பார்த்திருக்கிறார்கள். போலீஸ் நேர்மையாக இதை விசாரிக்கணும்''’என்கிறார்கள் கொதிப்போடு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mp1_2.jpg)
எம்.பி.விஜயகுமாரோ, ""இப்ப நான் டெல்லியில் இருப்பதால், வீட்டு வாசலில் வீசப்பட்டது வெடிகுண்டா? பட்டாசா?ன்னு எனக்குத் தெரியாது. எனக்குத் தனிப்பட்ட முறையில் எவரோடும் எந்த விரோதமும் இல்லை. அரசியல் ரீதியான விரோதத்தில்தான் இது நடந்திருக்கணும்''’என்றார்.
உள்கட்சிப் பூசலால், எம்.பி. வீட்டு வாசலில் எதிர்க்கோஷ்டி தீபாவளி கொண் டாடியதா? அரசியல் லாபத்துக்காக ஆதர வாளர்களே வேட்டு வைக்க நினைத்தார்களா? என்பதுதான் குமரி மாவட்ட அ.தி.மு.க. பட்டிமன்றமாக உள்ள நிலையில், எடப்பாடி காது வரை இந்த ‘வெடி’ விவகாரம் போயிருக்கிறது.
-மணிகண்டன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/mp-t.jpg)