மக்கள் வசதிக்கு என்று சொல்லி தெருக்களுக்கு சிமெண்ட் போட்டு மழைத் தண்ணீர் மண்ணில் இறங்காமல் செய்த அரசியல்வாதிகள், இப்போது அதை நீர்த்தேக்கத்துக்கும், வாய்க்கால்களுக்கும் விரிவுபடுத்தியதுடன் அதை வைத்து அரசியல் ஆதாயமும் தேடப் பார்க்கிறார்கள்.
ஐ.பி. தொகுதியான ஆத்தூர் தொகுதியிலுள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு மேல் இருக்கும் பெரிய கன்னிமார்கோவில் நீர்வரத்து வாய்க்காலுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்தும் பருவமழையின்போது தண்ணீர் வருவது வழக்கம். இப்படி வரக்கூடிய தண்ணீர்; நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கும் ஆத்தூர் நீர்த்தேக்கத் துக்கும் சென்று அதன்வழியாக கொடகனாற்றுக்குச் செல்லும்.
அதற்காக பாறைக்கற்களை வைத்து தடுப்பணை போன்ற ஒரு அமைப்பை முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்தனர். ஆத்தூர் தொகுதியிலுள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் விவசாயிகள், ஆத்தூர்பகுதி விவசாயிகள், கொடகனாறு விவசாயிகள் என மூன்று தரப்பு விவசாயிகளும் பொதுமக்களும் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் இந்த தண்ணீரைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களாக மூன்று தரப்பு விவசாயிகளுக்கிடையே தண்ணீர் பகிர்ந்துகொள்வதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது பாறைக்கற்களாலான தடுப்பணைமீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கான்கிரீட்டால் சிமெண்ட் தளம் போட்டு அடைத்ததால் ஆத்தூர் நீர்த்தேக்கத்திற்கும், கொடகனாற்றுக்கும் தண்ணீர் செல்வதில்லை.
""2014ல் அ.தி.மு.க. ஆட்சியில் நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு சிமெண்ட் வாய்க்கால் கட்டும்போது அதை மூடி கான்கிரீட் தளமாகப் போடும்போதே போடக்கூடாது என்று கூறினோம். வேண்டுமென்றால் சிமெண்ட் வாய்க்கால் பகுதியிலிருந்து 20 சதவீதம் தண்ணீர் தரத் தயாராக இருக்கிறோம். போட்ட சிமெண்ட் தளத்தை உடைக்க நினைத்தால் உயிர்ப்பலிதான் எற்படும். இது முழுக்க முழுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தவறே தவிர ஐ.பி.க்கு எந்த சம்மந்தமும் இல்லை''’என்றார் சித்தயன்கோட்டை நஞ்சை, புஞ்சை பட்டாதாரிகளின் சங்க செயலாளரான செல்லமரக்காயர்.
ஆத்தூர்பகுதி பட்டதாரி சங்க விவசாயியான சேசுராஜோ ""பாறைக்கற்களால் கட்டப்பட்ட அந்த தடுப்பணை மூலம் எங்களுக்கு 40 சதவீதம் தண்ணீர் வந்தது. அதை அடைத்ததின் மூலம் 3ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாக உள்ளது. அதனால்தான் போட்ட கான்கிரீட் தளத்தை உடைத்து வழக்கம்போல் தண்ணீர் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்''’என்கிறார்.
""என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த வாய்க்கால் சிக்கலை ஏற்படுத்திவிட்டனர். அதை தீர்த்து வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் மூன்று தரப்பு விவசாயிகளை அழைத்துச் சென்று பலமுறை கலெக்டரை சந்தித்துப் பேசினேன். அதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொடுங்கள் என வலியுறுத்தியதன் பேரில்தான் வல்லுநர் குழுவை அமைத்து அந்தக் குழு ஆய்வு செய்துவருகிறது. எனக்கு அந்த மூன்று பகுதியிலுமே ஒரு சென்ட் நிலம்கூட இல்லை. அந்த தண்ணீரை எனது நிலத்திற்குப் பயன்படுத்தி வருவதை யாராவது ஒருவர் நிரூபித்தாலும் அரசியலை விட்டே விலகத் தயார்''’என்றார் ஐ.பெரியசாமி.
இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியிடம் கேட்டபோது, ""இந்த பிரச்சனை சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயலாளருக்கு தெரியப்படுத்தியதன் பேரில் வல்லுநர் குழுவை அமைத்தனர். அதனுடைய அறிக்கை இன்னும் ஒருவாரத்தில் வந்துவிடும். அதன்பிறகு இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்''’ என்றார் உறுதியாக.
-சக்தி