Skip to main content

அழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி! -தி.மு.க.வுக்கு குடைச்சல்!

பெரியளவில் தி.மு.க. நிர்வாகிகளின் ஆதரவு இல்லாத நிலையிலும், செப்டம்பர் 05-ஆம் தேதி கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணியை நடத்தியே தீர்வதில் உறுதியாக இருக்கிறார் மு.க.அழகிரி. சென்னையிலிருந்து 21-ஆம் தேதி வந்த அழகிரி, மதுரையில் இருக்கும் தமது ஆதரவாளர்களான மன்னன், முபாரக் மந்திரி, கோபிநாதன் ஆகியோருக்கு சில இன்ஸ்ட்ரக்ஷன்களைக் கொடுத்தார். இப்போதிருக்கும் தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தோரையும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தோரையும் தொடர்புகொண்டது அழகிரியின் மூவர் அணி. பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டவர்கள், உடனடியாக எந்த உத்தரவாதக் குரலையும் வெளிப்படுத்தவில்லை.
alagiri
ஏற்பாடுகள் எல்லாம் முடிந்தபின், தனக்குச் சொந்தமான தயா மண்டபத்தில் 24-ஆம் தேதி தமது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அழகிரி. காலை 8 மணிவரை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஆதரவாளர்கள் ஆஜராகியிருந்ததால், சத்யசாய் நகரில் இருக்கும் தனது வீட்டின் முன்பாக சாமியானா பந்தல் போடச் சொல்லிவிட்டார். சாமியானாவுக்குள் 150-க்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. தேனி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து சிலர் வந்திருந்தனர். கொஞ்சம் அப்செட் மூடிலேயே காலை 10:10-க்கு ஆதரவாளர்கள் முன்பு வந்து அமர்ந்தார் அழகிரி.

முதல் வரிசையில் காவித்துண்டுடன் நின்று கொண்டிருந்த மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிராமன் மற்றும் ஒரு சிலரைப் பார்த்ததும், “""ஏம்பா ஏற்கனவே என்னை பி.ஜே.பி.தான் ஆபரேட் பண்ணுதுன்னு பேச்சு ஓடிக்கிட்டிருக்கு. அத கன்ஃபார்ம் பண்ற மாதிரியே மொத வரிசையில நிக்கிறியேப்பா''’ என சசிராமனைப் பார்த்து அழகிரி கேட்டதும், “""அது வந்துண்ணே வாஜ்பாய் அஸ்தி வரும் போது மரியாதை செலுத்த கூப்பிடத்தான் வந்தோம்''’என்றார் சசிராமன். உடனே அழகிரியின் உடனிருந்தவர்கள், ‘""ஏன்யா மொதமொத கூட்டம் போட்டிருக்கோம், இப்ப வந்து அஸ்தி, குஸ்தின்னு அபசகுனமாக பேசிக்கிட்டிருக்கியே, போய்யா அங்கிட்டு''’என எரிச்சலானார்கள்.

அனைவரையும் ஆசுவாசப்படுத்திவிட்டு, "என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம்னு ஒங்க கருத்துகளை சொல்லுங்கப்பா'’என லீடு கொடுத்தார் அழகிரி. மதுரை தம்பி பாலன், முபாரக் மந்திரி, கோபிநாதன், எம்.எல்.ராஜ், உதயகுமார், பூக்கடை ராமச்சந்திரன், திருப்பூர் முத்தையா என மொத்தமாக எழுந்து, ""அண்ணே தி.மு.க.ங்குறது நம்ம ரத்தத்துல ஊறுனது. நம்மள கட்சியில சேர்த்தாலும் சரி சேர்க்கலைன்னாலும் சரி, எக்காரணத்தைக் கொண்டும் கட்சியைவிட்டுப் போகக்கூடாது. என்றைக்கும் நாங்க ஒங்க பின்னால இருப்போம். அதுக்காக வேற கட்சிக்குப் போகவும் வேண்டாம், புதுசா கட்சி எதுவும் ஆரம்பிக்கவும் வேண்டாம்ணே''’என ரொம்பவே உருக்கமாக பேசினார்கள்.

alagiriஅனைவரின் பேச்சுகளையும் கேட்டு கலங்கிய அழகிரி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். “""என்னோடு தோள் கொடுத்து நிற்கும் உங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிடுறேன். உங்களைவிட்டு மட்டுமல்ல, தி.மு.க.வை விட்டும் நான் எங்கும் போகமாட்டேன். நான் ரஜினிகிட்ட போகப்போறேன், எனக்கு பின்னால பி.ஜே.பி. இருக்கு அப்படி இப்படின்னு பத்திரிகைகளிலும் டி.வி.க்களிலும் என்னென்னமோ எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். எங்க அப்பா வளர்த்த கட்சியைவிட்டு நான் ஏன் போக வேண்டும்.

என் ரத்தத்தில் கலந்த உடன்பிறப்புகளும் உதயசூரியனும் இருக்கும்வரை தி.மு.க.வை விட்டு நான் போகவேமாட்டேன். தலைவரின் இறுதிச் சடங்கில்கூட, முறைப்பிரகாரம் என்னிடம்தான் தேசியக்கொடியைக் கொடுத்தார்கள். நான்தான் தம்பியிடம் கொடுக்கச் சொன்னேன். நான் என்ன பதவியா கேக்குறேன், கட்சிக்காக உழைக்க வேண்டும் என்று தானே சொல்கிறேன். இருந்தாலும் நமது பலத்தை காட்ட லட்சம் பேரைத் திரட்டி தலைவர் சமாதி நோக்கி, கட்சிக் கொடியுடன், எந்த கோஷமுமின்றி பேரணியாகப் போவோம், நியாயத்தின் கதவுகளைத் தட்டுவோம்''’என பதிலுக்கு உருக்கம் காட்டினார் அழகிரி.

அழகிரி பேசி முடித்தபின், மன்னனும் முபாரக் மந்திரியும் சிலரைத் தொடர்புகொண்டு, “""ஏப்பா ஒங்க டிஸ்ட்ரிக்ட்ல இருந்து எத்தனை வண்டி வருது, எம்புட்டுப் பேரு வருவாக''’என கணக்கெடுக்கத் தொடங்கினர். “""இப்ப நம்ம வீட்டுக்கு முன்னால இருக்குற கூட்டத்தை எனக்கு வாட்ஸ்-அப்ல அனுப்புங்க, என்னோட ஃபேஸ்புக்ல அப்டேட் பண்ணணும்''’என துரை தயாநிதி கேட்டாராம். ""இந்தக் கூட்டத்தை எப்படிங்க அனுப்புறது''’என்றார் ஒரு ஆதரவாளர்.

alagiriவந்திருந்த ஆதரவாளர்கள் சிலரிடம் ""பேரணிக்கான ஏற்பாடுகள் எப்படி இருக்கு?'' என்றோம். “""வந்திருவோம்ணே, விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது அதிருப்தியா இருக்கிற கட்சிக்காரங்க போல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் சேர்ப்போம். தென்மாவட்டம் மட்டுமல்ல, வடமாவட்டம், கொங்கு மண்டல மாவட்டங்கள்ல இருந்து ஏகப்பட்ட பேர் வருவாக. முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்கிட்ட பேசியிருக்கோம். குறிப்பா நடிகர்கள் நெப்போலியன், மாஜி எம்.பி., ரித்தீஷ் என குமியப் போகுது கூட்டம். ஆனா ஒண்ணுண்ணே தி.மு.க.வை விட்டு மட்டும் போகவேமாட்டோம்ணே''’’ என்பதை மறுபடியும் அழுத்திச் சொன்னார்கள்.

24-ஆம் தேதி மட்டுமல்ல, அதற்கடுத்தடுத்த நாட்களிலும் மதுரையைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் இருந்து அழகிரியைப் பார்ப்பதற்காக வேன்களில் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏற்பாடுகளும் எண்ணிக்கையும் சுமாராக இருந்தன. பல மாவட்டங்களில் மாஜி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒன்றிய அளவில் பதவி கிடைக்காத அதிருப்தியாளர்களை அழகிரி தீவிரமாக தொடர்புகொண்டு வந்தாலும், வருங்கால பலாபலனை நினைத்து தயங்குகிறார்கள் அதிருப்தியாளர்கள். அசராத அழகிரி தரப்போ, தென்மாவட்டங்களில் இருக்கும் பல தனியார் கல்லூரிகளைத் தொடர்பு கொண்டு, பேரணிக்கு மாணவர்களை அனுப்புமாறும், தேவையான அனைத்தும் தங்கள் தரப்பிலிருந்து செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி கொடுக்கிறது. மதுரையில் பல பகுதிகளிலும் அழகிரி, துரை தயாநிதியுடன் இருக்கும் போட்டோவுடன் அமைதிப் பேரணிக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

செப். 05-ஆம் தேதி, தான் நடத்தும் பேரணிக்குப் பிறகு தி.மு.க. உடையும் எனச் சொல்லும் அழகிரி, ""கலைஞர் இருக்கும்போதே தன்னை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கு சிலர் தடுத்ததாகவும், இப்போது தி.மு.க.வில் நான் சேருவதில் என்ன தப்பு?’’ என்றும் குழப்பியடிக்கிறார். அழகிரியைப் பொறுத்தவரை, தனக்கான செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதேநேரத்தில், தி.மு.க.வில் தனக்கான மரியாதை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் காய் நகர்த்தி வருகிறார். அதற்கேற்ப நாள்தோறும் ஆதரவாளர்கள் சந்திப்பு நடக்கிறது. 27-ந் தேதி பேட்டி தரும்போது, "தன்னை சேர்க்காவிட்டால் தி.மு.க. அதற்கான விளைவுகளைச் சந்திக்கும்' என்றார்.

எப்படியாவது தி.மு.க.வில் சலசலப்பையும் கலகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், உளவுத்துறை மூலம் தொடர்ந்து தன் கைங்கர்யத்தை செய்துவருகிறது எடப்பாடி தலைமையிலான ஆளுங்கட்சி. அழகிரி தரப்பின் நிஜமான செல்வாக்கு, அதன் நோக்கம் குறித்த ரிப்போர்ட்டுகளை எடப்பாடிக்கு உளவுத்துறை அனுப்பியுள்ள நிலையில்... கொங்குமண்டலத்திலிருந்து செப்டம்பர் 5 பேரணிக்கு ஆள் அனுப்பும் அசைன்மென்ட் காவல்துறை அதிகாரிகள் வசம் தரப்பட்டுள்ளது. அதுபோலவே, தென்மாவட்டங்களிலும் ஆளுந்தரப்பின் மறைமுக ஒத்துழைப்புக் கிடைக்கிறது. தனியார் கல்லூரிகளை அழகிரி தரப்பு அணுகியிருப்பதை அறிந்து, அந்த விஷயத்திலும் அனுசரணை காட்டுகிறது எடப்பாடி அரசு. அழகிரியின் பேரணிக்கு ஆள் திரட்டும் வேலையில் ஆளும்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

-அண்ணல்

 

kavithai
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்