அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல்கள், அரசியல் படுகொலைகள், தொழிலதிபர்களின் மோசடிகள் என முக்கிய வழக்குகளை விசாரிக்கும் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யிலேயே லஞ்சம் புரையோடியிருப்பது அதிகார கட்டமைப்பையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.
""பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நேர்மையைத் தவறவிடாமல் தனித்து இயங்கிய சி.பி.ஐ.யில் அரசியல் தலையீடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துப்போனதால், அதன் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. தற்போது லஞ்சமும் அங்கு தலைவிரித்தாடுவது... அதன் நேர்மையையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது'' என்கிறார் மூத்த வழக்கறிஞர் சி.ராஜசேகரன்.
சி.பி.ஐ.யில் நடக்கும் அக்கப்போர்கள் குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும் நெருக்கமானவர் அலோக்வர்மா. அவரது ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் சிறப்பு இயக்குநராக, கடந்த 2017-ல் பிரதமர் மோடியால் சி.பி.ஐ.க்குள் கொண்டுவரப்பட்டவர் ராகேஸ்அஸ்தானா. இவர், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பர்; மோடியின் விசுவாசி.
குஜராத் கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் (2002) காரணமாக இருந்தது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த அஸ்தானா, "மதக் கலவரங்களுக்கும் மோடியின் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என அறிக்கை கொடுத்தவர். அவரை சி.பி.ஐ.யின். சிறப்பு இயக்குநராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அலோக்வர்மா, குஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி
வழக்கில் 3 கோடியே 80 லட்ச ரூபாயை அஸ்தானா லஞ்சமாக பெற்றிருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். பொதுநல அமைப்பான காமன் காஸ் என்கிற நிறுவனமும் அஸ்தானா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அஸ்தானாவுக்காக வாதாடிய மத்திய மோடி அரசு, அப்பழுக்கற்றவர் என சான்றிதழ் தந்தது. இதனால் அஸ்தானாவின் நியமனம் சரிதான் என தீர்ப்பளித்து காமன் காஸின் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அந்த அஸ்தானாதான் தற்போது லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பதவியை இழந்திருக்கிறார்''‘என்கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக அஸ்தானா நியமிக்கப்பட்டதிலிருந்தே அலோக் வர்மாவுக்கும் அஸ்தானாவுக்கும் ஒத்துப்போகவில்லை. தன்னை உளவு பார்ப்பதாக அஸ்தானா மீது குற்றம்சாட்டினார் அலோக்வர்மா. உளவு பார்ப்பதற்காகவே அஸ்தானா கேட்கும் அதிகாரிகளை சி.பி.ஐ.க்குள் நுழைத்த மோடி அரசு, அலோக்வர்மா கேட்கும் அதிகாரிகளை தர மறுத்தது.
சி.பி.ஐ.யில் அதிகாரிகளின் நியமனங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி.) பரிந்துரையின்படியே நடக்கும். அதற்காக நடக்கும் கூட்டங்களில் சி.பி.ஐ.யின் இயக்குநர் கலந்துகொள்வார். கடந்த ஜூலை மாதம் வெளிநாட்டிற்கு சென்றிருந்தார் அலோக்வர்மா. அதனைப் பயன்படுத்தி, அஸ்தானாவை கூட்டத்திற்கு அழைத்து சில நியமனங்களை செய்ய திட்டமிட்டனர். அதற்காக, நியமன கமிட்டி கூட்டம் நடந்தபோது, அதன் சூட்சுமத்தை அறிந்த அலோக்வர்மா, தனது நண்பரான சி.பி.ஐ.யின் இணை இயக்குநர் சர்மாவை வைத்து இரண்டு கடிதங்களை சி.வி.சி.க்கு எழுத வைத்தார்.
அதில், "குறிப்பிட்ட சில வழக்குகளில் அஸ்தானா மீது சி.பி.ஐ.யின் சந்தேகப் பார்வை இருக்கிறது. அதேபோல, சி.பி.ஐ. பணிகளுக்கு கமிட்டி பரிந்துரைக்கவிருக்கும் நபர்கள் பலரும் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிறார்கள். அதனால் அஸ்தானாவை வைத்து புது நியமனங்களைப் பரிசீலிக்கக்கூடாது; பரிந்துரைக்கவும் கூடாது' என குறிப்பிட்டிருந்தார் சர்மா. ஆனாலும், சர்மாவின் கடிதங்களை அலட்சியப்படுத்தியது சி.வி.சி.
இப்படிப்பட்ட சூழலில்தான், இறைச்சி ஏற்றுமதியாளர் மொய்தீன்குரோசி மீதான வழக்கு வில்லங்கங்கள், அலோக்வர்மாவையும் அஸ்தானாவையும் காவு வாங்கியதுடன் சி.பி.ஐ.யின் நேர்மையையும் கண்ணியத்தையும் கப்பலேற்றியிருக்கிறது.
மொய்தீன்குரோசி மீதான வழக்கின் போக்கினை கண்காணித்துவரும் உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ""உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி வியாபாரியான குரோசி, மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் உதவியால் இறைச்சி ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரின் தேர்தல் செலவுகளையும் தனிப்பட்ட செலவுகளையும் பார்த்துக்கொண்டவர் குரோசி. அவருடைய செல்வாக்கும் அவரை சோனியா குடும்பம் பாதுகாப்பதும் அந்தத் தேர்தலில் வெளிப்படையாகவே எதிரொலித்தது.
பிரதமர் மோடியின் ஆட்சியில் குரோசியின் பிஸினெஸ் மீது கண்வைத்த அமலாக்கத்துறை, அவரது வியாபார ஸ்தலங்களை குறிவைத்து ரெய்டு நடத்தியது. இறைச்சி ஏற்றுமதி என்ற பெயரில் கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டதில் 200 கோடி மோசடி நடந்திருப்பதை கண்டறிந்து மத்திய அரசுக்கு ஃபைல் அனுப்பியது அமலாக்கத்துறை. அதன்படி குரோசி மீது வழக்குப்பதிவு செய்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு பிரதமர் அலுவலக உத்தரவின்பேரிலேயே அஸ்தானாவிடம் தரப்பட்டது. குரோசியின் வழக்கை பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமான அஸ்தானாவிடம் தரப்பட்டதன் நோக்கத்தை காங்கிரஸின் நண்பரான அலோக்வர்மா அறிந்திருந்தார்.
இந்தச் சூழலில்தான், வழக்கில் தொடர்புடைய ஹைதராபாத்தை சேர்ந்த சதீஷ்பாபு சனா என்கிற வியாபாரி புரோக்கராக செயல்படுகிறார் என்கிற ரகசிய தகவல் அலோக்வர்மாவுக்கு கிடைக்கிறது. சி.பி.ஐ.யில் தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் சிலரின் உதவியோடு சமீபத்தில் சதீஷ்பாபு சனாவை மடக்கிப் பிடித்தார் அலோக்வர்மா. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கிலிருந்து குரோசியை விடுவிக்க அஸ்தானாவின் துபாய் நண்பர்கள் மனோஜ்பிரசாத், சோமேஸ்பிரசாத் இருவர்மூலம் என்னிடம் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது. குரோசியிடம் பேசி 3 கோடி ரூபாயை ஏற்பாடு செய்து கொடுத்தேன்'' என வாக்குமூலம் தந்த சதீஷ்பாபு சனா, அதற்கு ஆதாரமாக, சில வீடியோக்களையும் காட்டியிருக்கிறார். இதையெல்லாம் பதிவுசெய்த அலொக்வர்மாவின் ஆதரவு சி.பி.ஐ. அதிகாரிகள், அஸ்தானா மற்றும் அவருக்கு உதவிய டி.எஸ்.பி. தேவேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பிரச்சினையை அம்பலப்படுத்திவிட்டனர். இந்த விவகாரத்தில் அஸ்தானாவுக்காக "ரா' அமைப்பின் உயரதிகாரி ஒருவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஏனோ, அவரது பெயரை எஃப்.ஐ.ஆரில் தவிர்த்துள்ளது சி.பி.ஐ.
மோடி அரசின் ரஃபேல் விமான ஆயுத பேர ஊழலை அலோக்வர்மா விசாரித்து வரும் நிலையில், அந்த ஊழலை மறைக்க, குரோசியின் கறுப்புப்பண பரிமாற்ற வழக்கில் சோனியா குடும்பத்தையும் காங்கிரஸ் தலைவர்களையும் சிக்கவைத்து தேர்தல் நெருக்கத்தில் அஸ்தானா மூலம் அம்பலப்படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தியிருந்தது மோடி அரசு. ஆனால், அதற்கு முன்னதாகவே மோடிக்கு நெருக்கமான அஸ்தானாவின் லஞ்ச முகமூடியை கிழித்தெறிந்துவிட்டார் அலோக்வர்மா''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
அஸ்தானா மீதான லஞ்ச குற்றச்சாட்டும் அவர் மீதான சி.பி.ஐ. வழக்குப் பதிவும் பிரதமர் மோடியை அதிர்ச்சியடைய வைத்தது. உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. அப்போது, ’அஸ்தானாவை பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். அவரை மட்டும் விடுவித்தால் அலோக்வர்மாவின் அதிகாரம் எல்லையற்றுப் போகும். அதனால் அவரையும் விடுவிக்க வேண்டும் என விவாதித்தனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு அலோக்வர்மாவையும் அஸ்தானாவையும் பிரதமர் அலுவலகத்துக்கு வரவழைத்த மோடியின் உயரதிகாரிகள், கட்டாய விடுப்பில் செல்ல இருவருக்கும் உத்தரவிட்டனர். இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் அலோக்வர்மா. ஆனாலும் ஏற்றுக்கொள்ளாமல் கட்டாய விடுப்பில் இருவரையும் அனுப்பிவைத்த பிரதமர் அலுவலகம், உடனடியாக சி.பி.ஐ.யின் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவை தற்காலிக இயக்குநராக நியமித்தது. இவர் மீதும் பல்வேறு எதிர்மறை குற்றச்சாட்டுகள் இருக்கின்றன .
நள்ளிரவு அதிரடியில் மாற்றப்பட்ட 14 அதிகாரிகளில் அலோக்வர்மாவுக்கு நெருக்கமான டி.எஸ்.பி. பாஸ்சி, டி.ஐ.ஜி.க்கள் தருண்கவ்பா, அனில்குமார், அனிஸ்பிரசாத், ஜஸ்பீர்சிங், சவுராசியா உள்ளிட்டோர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு 3-வது பிரிவின் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டிருப்பதும் அலோக்வர்மா, அஸ்தானாவின் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதில், குட்கா ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரிகளும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். "அலோக்வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது சட்டவிரோதம்'‘என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.
இந்த நிலையில், இயக்குநராக அலோக்வர்மாவும் சிறப்பு இயக்குநராக அஸ்தானாவும் நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சி.பி.ஐ. அதிகாரி மீதே சி.பி.ஐ. விசாரணை, சி.பி.ஐ நடத்திய சோதனை, "ரா' அதிகாரிகள் மூலம் உளவு பார்த்தல், வீட்டைச் சுற்றிய உளவாளிகளை மடக்கிப் பிடித்தல் என இந்தியாவின் முக்கியமான விசாரணை அமைப்பை படுகேவலப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு என்பதே டெல்லி டாக்.
-இரா.இளையசெல்வன்