2007ஆம் ஆண்டு அருப்புக்கோட் டைக்கு பக்கத்தில் விவசாய நிலத்தில் சிவன், பார்வதி மற்றும் சிவகாமி என மூன்று சிலைகள் அந்த நிலத்தின் உரிமையாளர்களால் கண்டெ டுக்கப்படுகின்றன. அவர்கள் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால், அந்த சிலைகளை ஒரு போட்டோகிராபர் கொண்டு படமெடுத்துவிட்டு தங்கள் ஷெட்டிலேயே வைத்து விடுகின்றனர்.
2008ஆம் ஆண்டு இந்த மூன்று சிலை களையும் விலை கொடுத்து வாங்கு கிறோம் என்ற பெயரில் அவற்றை மீட்க ரகசியமாக சென்ற டி.எஸ்.பி. காதர்பாட்சா தலைமையிலான போலீசார், சிலைகளை கண்டெடுத்த நிலத்தின் உரிமையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவற்றை கொள்ளையடித்துவிட்டதாக வழக்கு. இதுவரை பொன்.மாணிக்கவேல் சொல்வது ஓரளவு நம்பும்படியாக இருக்கும். அடுத்து அவர் எழுதிய திரைக்கதைதான் டிவிஸ்ட்...
இந்த மூன்று சிலைகளையும் கடத்திய டி.எஸ்.பி. காதர்பாட்சா அவற்றை சிலை கடத்தல் தலைவன் தீனதயாளனிடம் 15 லட்சத்துக்கு விற்றுவிட்டாராம். அதுவும் தீனதயாளன் அவற்றை வாங்க மறுத்தபோதும், வலுக்கட்டாயமாக அவரது காரில் காதர்பாட்சா வைத்துவிட்டுச் சென்றாராம். அந்த சிலைகளில் இரண்டை டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் 20 லட்சத்துக்கு விற்றுவிட்டார் தீனதயாளன்.
சரி, இவ்வளவு பயங்கரமான குற்றச் சம்பவம் எப்படி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தெரிய வந்தது?
2016ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவருக்கு வந்த அனாமதேய மர்ம கடிதத்தில்தான் இந்த குற்றச்சாட்டுகள் சொல்லப் பட்டிருந்தது. அதுவும் 2008ஆம் ஆண்டு கடிதம் எழுதிய நபர், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணி புரிந்ததாகவும் கடிதத்தில் சொல்கிறார்.
அடடா இப்படி ஒரு ‘தெளிவான,’விரிவான’ மர்ம கடிதத்தை நாம் எங்கேயாவது பார்த்திருப்போமா?
இந்த ஜோடிக்கப்பட்ட வழக்குகளில்தான் டி.எஸ்.பி. காதர்பாட்சாவை அடுத்தடுத்து கைது செய்து 90 நாட்கள் பிணையை மறுத்து சிறையில் அடைத்தார் பொன்.மாணிக்கவேல்.
சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த சுபாஷ்கபூரை தாம்தான் ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவந்தேன் என்று ஊடகங்களிடம் புலிகேசி மீசையை தடவியபடி பெருமை பேசுவார் பொன்.மாணிக்க வேல். ஆனால் உண்மையில் நடந்தது என்ன வென்றால் தீனதயாளனை அப்ரூவர் என்று சொல்லி தப்பிக்கவிட்டதைப்போல, சுபாஷ் கபூரிடமும் கூட்டு சேர்ந்து அவர் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றார் பொன்.மாணிக்க வேல்.
பல்வேறு கடத்தல் வழக்குகளில் தொடர்பு டைய சுபாஷ்கபூரை 2012-ல் இந்தியாவுக்கு கொண்டுவந்தது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு. ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டதால், சுபாஷ்கபூரை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ எந்த தடையும் இல்லை. ஆனால் வழக்கு விசாரணைக்கு மட்டும் ஜெர்மன் அரசின் அனுமதி வேண்டும். அதனால் அவன் மீது குற்றப்பத்திரிகை மட்டும் இப்போதைக்கு தாக்கல் செய்யலாம் என்று 2017ஆம் ஆண்டு பழவூர் வழக் கில் கூடுதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார் பொன்.மாணிக்கவேல். இதனை அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை பெற்று தாக்கல் செய்வதாக நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் அந்தர்பல்டி அடித்தார் பொன்.மாணிக்கவேல். அதாவது சுபாஷ்கபூர் மீதான வழக்குகளை காரணம் காட்டி ஜெர்மன் அரசு இந்திய அரசுடனான மற்ற நாடு கடத்தல் விவகாரங்களில் பிரச்சினையை உருவாக்குவதாகவும், இதனால் இரு நாடுகளுக் கிடையிலான உறவில் சிக்கல் எழுவதாகவும், அதன் காரணமாக தமிழ்நாடு அரசு இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுபாஷ்கபூர் மீதான பழவூர் மற்றும் விக்ரமங்கலம் வழக்குகளை திரும்பப் பெறுவதாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார்'.
மற்ற கடத்தல் வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ்கபூர் 2022ஆம் ஆண்டே தண்டனைக் காலம் முடிந்து இன்னும் சிறையில் உள்ளார். அவரை தங்கள் நாடுகளில் உள்ள வழக்குகளுக்கு நாடு கடத்தவேண்டும் என்று கோரிவருகிறது அமெரிக்காவும், ஜெர்மனி யும். தண்டனையின் ஒரு பகுதியான அபராதத் தொகையை கட்டாமல் இந்திய சிறையிலேயே காலம்கடத்தி வருகிறார். 600 கோடி அளவுக்கு சிலைகளைக் கடத்தியதாக சுபாஷ்கபூர் மீது பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் யோக்கியசிகாமணி பொன்.மானிக்க வேலுவின் அதிரடியால் வெறும் 10 ஆண்டு சிறைத் தண்டனையோடு தப்பவிடப்பட்டார்.
சிலைக் கடத்தல் கும்பல் தலைவர் தீன தயாளனுடன் கூட்டு சேர்ந்து, அவனை தப்பிக்க வைத்ததுடன், அவனிடமிருந்தே வாக்குமூலம் பெற்று பொன்.மாணிக்கவேல் தமக்கு இழைத்த கொடுமைகளை பட்டியலிட்டு, 2019ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கக் கோரினார் காதர்பாட்சா. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போன்ற தமிழ்நாடு காவல்துறையின் தனிப்பிரிவு ஏதேனும் விசாரிக்க உத்தரவிடக்கோரி காதர்பாட்சா தொடுத்த வழக்கில் 2022ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காதர்பாட்சா சி.பி.சி.ஐ.டி. விசாரணைதான் கோரினார், ஆனால் வழக்கை விசாரித்த நீதியரசர் ஜெயச்சந்திரன் தனது 76 பக்க தீர்ப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் காதர்பாட்சா அளித்த புகார் மனுவை விசாரிப்பது மட்டுமல்லாமல், 2005ஆம் ஆண்டு பழவூர் வழக்கிலும் ஏதேனும் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அதிலும் தனியே சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
நான் மேலே விவரித்த தகவல்கள் அனைத் தும் நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் தீர்ப்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் யோக்கியசிகாமணி பொன்.மாணிக்கவேல் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துள்ளார் நீதிபதி. அது எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பில் தம்மைப் பற்றி கூறப்பட்டுள்ளவற்றை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றம் சென்றார் பொன்.மாணிக்கவேல். உச்ச நீதிமன்றமோ அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து, சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தி யது. மேலும், தன் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கேட்ட மனுவையும் தள்ளுபடி செய்து நீதியரசர் ஜெயச்சந்திரனின் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பல தடைகளைத் தாண்டி காதர்பாட்சாவின் புகாரை விசாரித்த சி.பி.ஐ., கடந்த ஆண்டுஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பொன்.மாணிக்கவேல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதில் பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிரான காதர்பாட்சாவின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாகவும், பொய்யான கிரிமினல் வழக்கை டி.எஸ்.பி. காதர்பாட்சா மீது பதிவு செய்து, சட்டவிரோதமாக அவரை கைது செய்ததாகவும், பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்க... போலி ஆவணங்களை தயாரித்ததாகவும் மொத்தம் 13 பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும், அவரது இல்லத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பொன்.மாணிக்கவேலுவை கைது செய்வதற்கு சி.பி.ஐ. முனைப்பு காட்டியபோது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்பிணை பெற்றுத் தப்பித்தார். முன்பிணை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, பொன்.மாணிக்க வேல் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன். மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான், அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரியவரும். எனவே முன்பிணை வழங்கக்கூடாது’ என்றும், ’உயர் நீதிமன்ற உத்தரவுபடியே பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.
சி.பி.ஐ.யின் பிடி இறுகிவந்த நிலையில்... மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த விசாரணை நகலைக் கேட்டு தாக்கல் செய்தார் பொன்.மாணிக்கவேல். மற்ற ஆவணங்கள் தந்தால் விசாரணை பாதிக்கப்படும், முதல் தகவல் அறிக்கை மட்டுமே பகிர முடியும் என்று நீதிபதி உத்தரவிட, அதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். நீதிபதி பி.புகழேந்தி வழக்கை விசாரித்து வந்தார்.
நிபந்தனை பிணையில் உள்ள பொன். மாணிக்கவேல், சாட்சிகளை மிரட்டிவருகிறார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன் பிணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது சிபிஐ. மேலும், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாலேயே வழக்கு பதிந்ததாக வும், கடத்தல்காரன் சுபாஷ்கபூரை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளார்’என்றும் வாதிட்டது.
நீதிமன்றத்தால் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீது எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தீர்கள்? பொன்.மாணிக்கவேல் போன்ற ஓய்வுபெற்ற காவல் துறை உயர்அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து விசாரிப்பது சரியா? குற்றம் சாட்டப்பட்ட நபரின் பேச்சைக் கேட்டு, இவ்வாறு வழக்குப் பதிவு செய்தால், முக்கிய வழக்குகளை விசாரிக்க, காவல்துறை உயர் அதிகாரிகள் எவ்வாறு முன்வருவர்? என பல அதிரடி கேள்விகளை எழுப்பிய நீதிபதி, ’"முறையாகப் பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க வேண்டும். முறையான விவரங்கள் இன்றி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல''’என்று கடந்த 13-3-25ல் சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்துள்ளார்.
டி.எஸ்.பி. காதர்பாட்சாவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அடியாள் பொன்.மாணிக்கவேல் இன்னும் எவ்வளவு காலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பார் என்று நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்!