"அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை நடத்துகிறார்கள். இது அரசு விதிமுறைக்கு எதிரானது. இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்' என்று, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் போராட்டம் நடத்தி, ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த செல்வா, "அரசு உதவி பெறும் மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த மூன்று வருடமாக "எம்.சி.ஸ்கூல்' அதிகாலை 6.00 மணி முதல் ஒன்பது மணி வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடும், கருத்துக்களும், அனைவரும் அறிந்ததே. மாணவ சமுதாயத்தை அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த அறநெறிப் பண்பாடுகளுடன் வளர்க்கவேண்டிய கல்வி வளாகத்தில், இது போன்ற நச்சுக் கருத்துக்களுக்கும், வாள் பயிற்சி போன்ற அபாயகரமான ஆயுதப் பயிற்சிகளுக்கும் அனுமதி வழங்கி செயல்பட்டு வருகிறது. இது, திராவிட மாடல் தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியாகும். எனவே அரசு உதவிபெறும் எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மதச்சார்பின்மையை உறுதி செய்யும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சியை தடைசெய்ய வேண்டும். இந்நிகழ்வு நடைபெறுவதற்கு உறுதுணை யாக இருந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசின் கல்வி அமைச்சர் அன்பில் பொய்யா மொழிக்கும் புகார் அனுப்பியுள்ளோம்.
இந்த பள்ளி, மதுரை கல்லூரிக்கு கட்டுப்பட்டதாகும். ஏற்கெனவே அந்த கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வருகைபுரிந்து அந்த இயக்கத்தின் கருத்தரங்கங்கள் அடிக்கடி நடைபெற்றுள்ளது. அதுகுறித் தும் பலமுறை புகார் தெரி வித்துள்ளோம். இதேபோல் மதுரையைச் சுற்றியுள்ள சேதுபதி அரசு பள்ளி, டி.வி.எஸ். பள்ளி, ஜீவானா பள்ளி, கேந்திரிய வித்யாலயா, ஜெயின் பள்ளி போன்ற தனியார் பள்ளிகளில், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு சரஸ்வதி பூஜை அன்று, விஸ்வ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த தலைவர்கள் தலைமையில் போதனைகள் என்ற பெயரில் மதவெறியை உண்டுபண்ணும் கருத்துக் களைப் பேசி, அங்கு படிக்கும் மாணவர்களின் மனதில் மதவெறி நஞ்சை விதைக்கிறார்கள். இவை யாவும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லை யென்றால் வரும் தலைமுறையை, மத வெறி யேற்றப்பட்ட மோசமான தலைமுறையாக உரு வாக்கி, தமிழ்நாட்டை வட மாநிலங்களைப்போல் கலவர பூமியாக மாற்றிவிடுவார்கள்'' என்றார்.
இதுகுறித்து எம்.சி. பள்ளி தலைமை ஆசிரி யரைச் சந்தித்து கேட்க அந்த பள்ளிக்கு சென் றோம். "சார் தலைமை ஆசிரியரைப் பார்க்கவேண் டும்'' என்றதும், அங்கிருந்த உதவி தலைமை ஆசிரியரான பாலாஜி நம்மிடம், "என்ன சார், எதற்காக வந்துள்ளீர்கள் என்று எனக்குத் தெரியும். பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்தது. அது பற்றித்தானே கேட்கப்போகிறீர்கள்? அது குறித்து என்றால் என்ன சொல்ல வேண்டுமென் றாலும் என்னிடம் கேளுங் கள். இங்கு நான்தான் எல்லாம். அவரு கொஞ்சம் வயசானவர். ரிட்டயர்டு ஆகப்போறார்'' என்று நம்மைத் தடுத்து நிறுத்தி னார். அந்த வேளையில் தலைமை ஆசிரியர் ரவியே வந்துவிட, "வாங்க தம்பி, இப்பதான் மாவட்ட கல்வி அதிகாரி இதுகுறித்து விளக்கம் கேட்டார் தம்பி. இது ரொம்ப காலமாக நடை பெறுகிறது. நான் வந்தபோது கேட்டேன். பள்ளி வளாகத்தில் காலை வேளையில் நடைப்பயிற்சி செய்துகொள்கிறோம், வேறு ஒன்றும் இல்லை என்றார்கள்.
சரி, என்று ஏற்கெனவே காலம்காலமாக உள்ளதுதானே என்று அனுமதி கொடுத்தேன். அது இந்த அளவுக்கு வரும் என்று நினைக்கவில்லை'' என்றார். நாம் குறுக்கிட்டு, "சார் அவர்கள் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் அணியும் அரை டவுசர் அணிந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு சாகா பயிற்சி கொடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு புகாராக கொடுத்துள் ளார்களே?'' என்றதும், "ஆமா, ஆமா. எங்களுக்கும் வாட்ஸப்பில் வந்தது. உடனே அவர்களை அழைத்து, இனி இதுபோன்று யாரும் பள்ளி வளாகத்தில் நடத்தக்கூடாது என்று சொல்லிவிட் டேன் தம்பி. இதைப் பெரிசா எடுத்துக்காதீங்க'' என்றவரிடம், "தனியார் அமைப்பு தங்களது சாகா பயிற்சியை அரசு உதவிபெறும் பள்ளியில் நடத்தலாமா?'' என்று கேட்டதும், "தம்பி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றெல்லாம் தெரியாது. இனி பள்ளி வளாகத்தில் நடத்தக்கூடாது என்று ஆணை போட்டுவிட்டேன்'' என்றார்.
இதுவரை தனியார் பள்ளிகளில் தங்களது சித்தாந்த போதனைகள் மற்றும் சாகா பயிற்சிகளை நடத்திவந்த நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாகா பயிற்சி நடை பெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..