ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடியை நியமித்திருப்பதை, "ஜெய் நாதுராம் யூனிவர்சிட்டி யாக மாற்றும் முயற்சி' என கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ்.
பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தது முதலே கல்வியை தன்வசப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. பள்ளிக்கல்வியை தன் வசப்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கையை வகுத்து செயற்படுத்திவரும் மத்திய அரசு, உயர் கல்வி நிறுவனங் களையும் விட்டு வைக்கவில்லை.
எத்தனையோ பல்கலைக் கழகங்கள் இருந்தபோதும், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பெயரில் அமைந்ததும், கருத்தியல் மற்றும் கல்விச் செயல்பாடுகளில் சர்வதேச புகழ் பெற்றதுமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மோடி அரசுக்கு, நீண்டகால சவாலாகவே இருந்துவருகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், வலதுசாரி கருத்துக்கு எதிராக இருப்பதனா லும் அதன் மாணவர் அமைப்பு களில் வலதுசாரி கூட்டமைப்பு களின் தாக்கம் பெரிய அளவில் வெற்றிபெறாததாலும், முன்பே பா.ஜ.க. அரசின் கோபம் இருந்து வந்தது.
இந்நிலையில்தான் பிப்ரவரி 7-ஆம் தேதி, ஜே.என்.யூ.வின் துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என ஒரு பக்கம் பாராட்டுகள் எழுந்தாலும் சாந்திஸ்ரீ ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவாளர் என்பதும் இடது சாரிகளை முன்பு ட்விட்டரில் "ஜிஹாதிகள்' என விமர்சனம் செய்ததையும், இந்திய முஸ் லிம்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என கமெண்டு கள் பதிவிட்டதையும் குறிப்பிட்டு, தவறான தேர்வென எதிர்ப்பு எழுந்துள்ளது. கோட்சேவுக்கு ஆதரவாக காந்தி கொலையை நியாயப்படுத்தி அவர் பதிவிட்ட ட்விட்டும் அவருக்கு சறுக்கலாக அமைந்துள்ளது.
புனே பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற மாணவர்களுக்கு அனுமதி வழங்கி சேர்க்கையில் முறைகேடு செய்ததாகவும் சாந்திஸ்ரீ மீது புகார்கள் உண்டு. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப் பட்டதையொட்டி அவர் வெளியிட்ட ஊடகக் குறிப்பி லுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி, "இத்தனை அற்பமான துணைவேந்தரை நியமிப்பது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பு உண்டாக்கும்' என பா.ஜ.க. எம்.பி.யான வருண் காந்தியே பதிவிட்டதும் பரபரப்பானது.
முந்தைய துணைவேந்தரான குமாரின் பதவிக்காலத்தில்தான், ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கன்னையாகுமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச் சார்யா போன்ற மாணவப் போராளிகள் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். தற்போது சாந்திஸ்ரீயை துணை வேந்தராக்கி, ஜே.என்.யூ. மாணவர்கள் மீது குண்டர்கள் நடத்திய தாக்குதலைவிட, மோச மான தாக்குதலை மோடி அரசாங்கம் நடத்தியிருக்கிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்!