மக்கள் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்குப் போராட்டம் நடத்த தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கிறது அரசு நிர்வாகம். ஆனால், மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் பள்ளியில் பகல் நேரத்தில் இந்துத்வா பயிற்சியும், இரவு நேரத்தில் தாக்குதல் பயிற்சியும் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை குரு ஞானசம்பந்தம் ஆங்கிலவழிப் பள்ளியில்தான் இந்த பயிற்சிகள் ரகசியமாக நடப்பதாக மாணவர்களின் பெற்றோ ரும், அரசியல் கட்சியினரும் கொந்தளிக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கு பணம் செலுத்தவும், சான்றிதழ்களைப் பெறவும் பள்ளிக்கு வரும் பெற்றோரை பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸாரும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் சோதனை நடத்தி எரிச்சலடைய வைக்கிறார்கள் என்று பெற்றோர் கூறுகிறார்கள்.
இந்த பயிற்சி குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தனது குமுறலை தெரிவித்துவிட்டு, ஆர்.டி.ஓ. விடமும் முறையிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ள, மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் காளிதாசன் நக்கீரனிடம் பேசினார்.…""கடந்த சில ஆண்டுகளாகவே மயிலாடு துறையை மையமாக வைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயிற்சி வகுப்புகள், அணிவகுப்புகள், ஆயுதப் பயிற்சிகள் என்று நடத்திவருகிறார்கள். ஏற்கெனவே இந்தப் பகுதியில் சாதி மற்றும் மதப்பிரச்சினைகள் கவலை அளிக்கும் வகையில் இருக்கின்றன. இப்படியிருக்கும் போது, அரசு உதவிபெறும் பள்ளியின் நிர்வாக இயக்குநர் பாஸ்கரன் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்?
அந்தப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த சென்றால்கூட உள்ளே நுழையும்போதும், வெளியே வரும்போதும் கையெழுத்து வாங்கிக்கொண்டே போலீஸார் அனுமதிக்கிறார்கள். பள்ளியில் நாங்கள் என்ன குண்டுவைக்கவா போகிறோம்? இத்தகைய கெடுபிடிகள்தான் உள்ளே ஏதோ ரகசியமாக நடக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இரவில் ஆயுதம் ஏந்தி எப்படித் தாக்குவது? தாக்குதலை எப்படி சமாளிப்பது? கல்லெறிகளை எப்படி சமாளிப்பது என்பது உள்ளிட்ட பயிற்சி களை அளிக்கிறார்கள். இத்தகைய போக்கு மயிலாடுதுறைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே ஆபத்து''’என்று கவலையைத் தெரிவித்தார்.
காளிதாசன் சொல்வது உண்மையா என்று அறிய இரவு 8 மணிவாக்கில் அரசு உதவிபெறும் அந்தப் பள்ளிக்கே சென்றோம். வாசலில் 4 போலீஸார் நின்றிருந்தனர். அவர்களுக்கு சற்று தள்ளி தடியைச் சுழற்றியபடி ஒரு இளைஞர் நின்றார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரே கொடுத்த வாக்குமூலம்தான் இது :…""நான் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை வழியில் நானும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருக்கிறேன். இந்தியாவை பாரத இந்துநாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இங்கு நடைபெறும் பயிற்சி. இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் பயிற்சி எடுக்கிறார்கள். மயிலாடுதுறையில் 248 பேர் பயிற்சி எடுக்கிறார்கள். சிலம்பம், கபடி, களரி போன்ற ஆயுதப் பயிற்சிகளை அரசுகள் தடை செய்து விட்டன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 8 முறை தடை செய்யப்பட்டும் இன்னும் உயிரோடு இருப்பதற்கு இத்தகைய பயிற்சிதான் காரணம்.
18 வயது முதல் 75 வயதுவரை இந்தப் பயிற்சியில் இருக்கிறார்கள். காலை 4 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து, சரியாக 5:55 மணிக்கு இந்தியா முழுவதும் எல்லா முகாம்களிலும் பயிற்சி தொடங்கிவிடும். சிறுவர்களுக்கு ராமநாதபுரத் திலும், இளைஞர்களுக்கு கன்னியாகுமரி யிலும், திருமணம் ஆகாதவர்களுக்கு கோவில்பட்டியிலும் பயிற்சி நடக்கிறது. மயிலாடுதுறையில் இளைஞர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் 26-ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி, மே 16-ஆம் தேதியுடன் முடிகிறது. ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் அனைத்தும் அந்தந்த வயதுக்கு தகுந்தபடி நடைபெறும். சிறுவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றபடி நடத்தப்படும். மயிலாடுதுறை யில் பயிற்சி அளிப்பவர் மத்தியஅரசுப் பணியில் இருப்பவர். தனது காலில் அடிபட்டுவிட்டதாக கூறி மருத்துவ விடுப்பில் வந்து பயிற்சி கொடுக்கிறார். நீதித்துறை, காவல்துறை, பொதுத்துறை என்று எல்லா அரசுத் துறைகளிலும் இத்தகைய ஆர்.எஸ்.எஸ். பயிற்சியாளர்கள் இருக்கிறார் கள். அவர்களுடைய பயிற்சிகள் அந்தந்த துறைகளில் ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளை செயல்படுத்த உதவியாக இருக்கும். விரைவில் மாற்றம் நிச்சயம்''’என்றார் அந்த இளைஞர்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய செயல் திட்டத்திற்கு ரெடியாகிறது ஆர்.எஸ்.எஸ்! அதற்கு மாநில அரசு தனது உதவியில் நடக்கும் பள்ளிகளைப் பயிற்சிக் களமாக அளிக்கிறது.
-க.செல்வகுமார்