"ஹலோ தலைவரே, இந்தியா முழுக்க கடும் விமர்சனங்களைச் சந்தித்துவரும் பா.ஜ.க. மீது, ஆர்.எஸ்.எஸ். தரப்பும் அதிருப்தியில் இருக்கிறது.''”
"ஆமாம்பா.. மோடி பதவியிலிருந்து விலகவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அழுத்தமாக வலியுறுத்தி வருகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, மோடிக்கு வயது ஆவதால், பா.ஜ.க.வின் சீனியர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போல் அவர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் வலுத்துவருகிறது. மேலும் அவர் இந்திய மண்மீது காட்டும் அக்கறையைவிட வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அது கருதுகிறதாம். இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக அரியானாவின் முன்னாள் முதல்வரும், மோடிக்கு மிக நெருக்கமான வருமான கட்டார் வரக்கூடாது என்கிற குரலும் ஆர்.எஸ். எஸ்.சில் எழுந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்து அப் செட்டாகி இருக்கிறாராம் மோடி. எனவே, ஆர்.எஸ்.எஸ். ஸின் நாக்பூர் தலைமை அலுவலகத்துக்கு இதுவரை சென்றிராத அவர், விரைவில் அங்கு செல்லத் திட்டமிட்டி ருக்கிறாராம். இதன்மூலம் தனக்கு எதிராகக் கொடிபிடிக் கும் ஆர்.எஸ்.எஸ்.ஸை சமாதானப் படுத்துவதோடு, பா.ஜ.க. சீனியர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக் கும் இடையில் நிலவும் கோபதாபங்களைக் களையவும், தனது இந்த விசிட் உதவும் என்று நம்புகிறாராம் மோடி. இதற்கிடையே கேரள பா.ஜ.க. தலைவராக ராஜீவ் சந்திர சேகர் நியமிக்கப்படவிருக்கிறார். ஆனால் தமிழக பா.ஜ.க. தலை வரை நியமிக்கும் விசயத்தில்தான் இன்னும் குழப்பம் நீடிக்கிறதாம்.''
"தமிழகத்தை கிண்டல் செய்யும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி கொடுத்திருக்கிறாரே?''”
"தமிழகத்திற்கான நிதி உரிமையை மத்திய அரசு பறித்துக்கொள்வதாகவும், நிதியை ஒதுக்காமல் வஞ்சித்துவருவதாகவும் மோடி அரசு மீது, தமிழக அரசு தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அதிக நிதிகொடுக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப் படுவதில்லை என்கிற வாதமே தவறு. இதை எந்த கால்குலேசனை வைத்து சொல்கிறார்கள்? நீங்கள் உங்கள் மாவட் டங்களுக்கு இப்படிச் செய்கிறீர்களா?'’என்கிற ரீதியில் ஏகத்துக்கும் நையாண்டி செய்து பேசினார். இதைக் கடுமையாகக் கண்டித் துள்ள தி.மு.க.வின் துணைப் பொதுச்செய லாளரும் எம்.பி.யுமான கனிமொழி, ’"தமிழுக்காகவும், மாநில உரிமைக்காகவும் போராடுவது தமிழ்நாட்டில் பிறந்த உங்களுக்கு ஏளனமாகத் தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'’என்று ஆவேசமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அவரது இந்தக் கண்டனத்துக்கு ஆதரவு பெருகிவருகிறது.''”
"ஒரு பா.ஜ.க. நிர்வாகியின் முன்னுக்குப் பின்னான ஆடியோக்களைக் கேட்டு, சென்னை தாமரைக் கட்சியினரே கிண்டலடித்துச் சிரிக்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னையில் உள்ள பொதுக்கழிப்பிட கட்டிடங்களில், தி.மு.க. அரசின் ஊழல் பற்றி போஸ்டர் அடித்து ஒட்டவேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவரான கரு.நாகராஜன், சென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கு வீராவேசமாக உத்தரவிட்டாராம். இதன்படி போஸ்டர்களும் தயார் செய்யப்பட்டிருக் கின்றன. இது காவல்துறை யின் கவனத்துக்குச் செல்ல, சென்னை கமிஷனர் அலுவலக அதிகாரி ஒருவர், கரு.நாகராஜனை தொடர்புகொண்டு, "உங்களுக்கு நேரம் சரியில்லையா? போஸ்டர் ஒட்டினால் உடனடியாகக் கைது செய்யப்படுவீர்கள்'’ என்றாராம். இதைக்கேட்டு மிரண்டுபோன நாகராஜன், மாவட்டத் தலைவர்களை அவசரமாக ஃபோனில் பிடித்து, ’அடித்த போஸ்டரை ஒட்டவேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டாராம். அவர் இப்படி "போஸ்டர் ஒட்டச் சொன்ன ஆடியோவும், ஒட்டவேண்டாம் என்று சொன்ன ஆடியோவும்' இப்போது ஒரே நேரத்தில் பா.ஜ.க.வினர் மத்தியில் வலம் வர, கமலாலயத் தரப்பினரே "நம்ம நாகராசுக்கு போலீஸுன்னா அம்புட்டு பயம்யா'’என கிண்டலடித்துச் சிரிக்கிறார்களாம்.''”
"அ.தி.மு.க.வை இப்போதே தன் ரிமோட் கண்ட்ரோலில் பா.ஜ.க. கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டது என்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. நடத்திய இப்தார் நோன்பில், வழக்கமாக அழைக்கும் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழக ஹைதர்அலியை இந்தமுறை அழைக்க வில்லை. காரணம், இவர் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், அண்மைக்காலமாக ஒன்றிய அரசையும் கவர்னர் ரவியையும் கடுமையாக விமர்சித்து வந்தாராம். எனவே இவரை அழைக் கக்கூடாது என்று பா.ஜ.க. உத்தரவு போட்டதாம். இதனால் டென்ஷ னான ஹைதர்அலி, இதுகுறித்து எடப் பாடியிடமே கேட்க முயன்றிருக் கிறார். அப்போது அவரது லைனுக்குச் சென்ற அ.தி.மு.க. அவைத்தலைவரான தமிழ்மகன் உசேன், "வருந்தவேண்டாம். உங்களை அழைக்கக் கூடாது என்று பா.ஜ.க. சொல்லிவிட்டது. அதை மீறமுடியாது'’என்றாராம். ஹைதர்அலியோ, "இன்னும் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லையே?' என்று சொல்ல, "அதெல்லாம் அப்படிதான்'’என்று சிரித்து மழுப்பினாராம் உசேன். இதையறிந்த அ.தி.மு.க.வின் ஏனைய நிர்வாகிகள், "நம்ம குடுமி சிக்கிடிச்சே' என்று புலம்பத் தொடங்கிவிட்டார்களாம்.'' ”
"காங்கிரஸின் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையை ராகுல் முடுக்கியிருக்கிறாரே?''”
"இந்தியா முழுக்க மாநிலந்தோறும் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றன. இவை பல்வேறு நபர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன என்றும், அதற்கு வாடகை கூட தராமல் மோசடி நடப்பதாகவும் ராகுல்காந்திக்குப் புகார்கள் பரவலாக சென்றதாம். இதுகுறித்து அண்மையில் கட்சியின் தேசிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸின் சொத்துக்களைக் கணக்கெடுப்பதோடு, அவற்றை மீட்டு, கட்சியின் அறக்கட்டளையில் உடனடியாக இணையுங்கள் என்று, சொத்துப் பாதுகாப்புக் குழுவினருக்கு உத்தரவிட்டாராம். இது காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர், இங்குள்ள முக்கிய நிர்வாகிகளிடன் ஆலோசனை நடத்தி யிருக்கிறார். அப்போது அவர், "கட்சியின் சொத்துக் களை மீட்பதில் ராகுல் தீவிரம் காட்டுகிறார். எனவே, நம் கட்சியின் சொத்துக்களை யாரெல்லாம் ஆக்ரமித்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிய ரிப்போர்ட்டை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டாராம்.''”
"கட்சி நிர்வாகிகளுக்கு சங்கடமாச்சே!''”
"ஆமாங்க தலைவரே, தமிழகம் வந்த கிரிஸ் டோங்கரை, தமிழக காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர்களும் மூத்த நிர்வாகிகளும் தனித் தனியாகச் சந்தித்தனர். சந்தித்து, தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்சியின் சொத்துக்கள் எல்லாம் காங்கிரஸ் அறக்கட்டளையின் கீழ்தான் வருகின்றன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரின் ஆக்ர மிப்பில்தான் அவற்றில் பெரும்பாலான சொத்துக்கள் இருக்கின்றன. அவர்கள்தான் உள் வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். கட்சிக்கு கொடுக்க வேண்டிய வாடகைத் தொகையையும் இவர்கள் தருவதில்லை. இப்படிப்பட்டவர்களின் ஆக்ரமிப்பில் இருக்கும் சொத்துக்களை உங்களால் எப்படி மீட்க முடியும்? இது குறித்தும் ராகுலிடம் பேசுங்கள். அப்போதுதான் உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும். உதாரணமாக, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தை ஒட்டியுள்ள காங்கிரஸ் திடலில் உள்ள சொத்துக்களை யார் யார் அனுபவித்து வருகிறார்கள் என்பதையும் விசாரித்தால் நீங்களே அதிர்ச்சியடைந்து விடுவீர்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இந்த விவகாரம் டெல்லிவரை சென்றிருக்கிறதாம்.''”
"தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தி.மு.க.வுடன் முரண்பட்டு வருகிறாரே?''”
"இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இடையில் எழும் பிரச்சினைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார்கள் பலரும். நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய வெற்றிச்செல்வன் என்பவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைகிறார். இவர் கொடைக்கானலில் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்திவந்தார். இதில் சீமானும் பார்ட்னராக இருந்தாராம். அதில் ஏற்பட்ட பிசினஸ் பிரச்சினைகளால் தான் வெற்றிச்செல்வன் சீமானை விட்டு விலகினாராம். தென்மாவட்டங்களில் வேல்முருகனின் வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆள் இல்லை என்பதால், அதைத் தான் கவனித்துக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டுதான் வெற்றிச்செல்வன் அவருடன் இணைகிறாராம். சென்னயில் வேல்முருகன் கட்சி நிர்வாகி, நிறைய சட்டச் சிக்கலில் உள்ள நில விவகாரங்களை நிர்வகித்து வருகிறாராம். இதேபோல் தி.மு.க.வுடன் வேல்முருகன் உரசினாலும், தி.மு.க. பிரமுகர்களுடன் அவர் வைத்திருக்கும் தொழில் தொடர்பு பாதிக்காது. எனவே, அரசியல் பிரமுகர்களுக்கு இடையில் எழும் பிரச்சினைகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்கிறார்கள் விபர மறிந்தவர்கள்''”
"சிவகங்கை மாவட் டத்தில் க்ரைம் ரேட் அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்களே?''”
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் க்ரைம் ரேட் அதிகரித்து வருவதாகவும் மாவட்ட எஸ்.பி. அதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் ஆட்சித் தலைமைக்குப் புகார்கள் பறந்துள்ளன. குறிப்பாக அங்கே கந்துவட்டிக் கொடுமை, கட்டப்பஞ்சாயத்து விவகாரம் உட்பட பலவும் பெருகிவருகிறதாம்.போலீசுக் கும், கிரிமினல்களுக்கும் இடையே அங்கே நட்புறவு அதிகரித்திருப்பதால், லோக்கல் ஸ்டேஷனில் புகார் கொடுக்கவே ஏரியா வாசிகள் பயப்படுகிறார் களாம். சிவகங்கையில் அசம்பா விதம் ஏதும் நடப்பதற்குள் மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.''”
"நானும் காவல்துறை தொடர்பான ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன்.. வரும் ஜூன் மாதம் தமிழக டி.ஜி.பி.யின் பதவிக்காலம் முடிகிறது. எனவே உடனடியாக அவர் இருந்த இடத்தில் யாரை அமர்த்துவது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் நியமிக்கப்படலாம் என்கிற டாக் கோட்டை வட்டாரத்தில் அடிபடுகிறது.''”