FOLLOW-UP

(சென்ற இதழ் தொடர்ச்சி...)

Advertisment

சிறைத்துறையின் ஊழலைத் தோண்டி யெடுத்து புலனாய்வுக் கட்டுரைகளை நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டுவரும் நிலையில், அந்த நேர்மையான அதிகாரி நம்மிடம், “"சிறைத்துறை ஐ.ஜி.க்கு சம்பளம் ரூ.1,70,000, டி.ஐ.ஜி.க்கு ரூ.1,40,000, எஸ்.பி.க்கு ரூ.1,15,000 ஏ.டி.எஸ்.பி-க்கு ரூ.1 லட்சம், ஜெயிலருக்கு ரூ.60 ஆயிரம்’ எனப் பட்டியலிட்டு  “வாங்குற சம்பளத்துக்கு எல்லா அதிகாரிகளும் கடமை உணர்வோடு நல்லபடியா வேலை செய்யுறாங்களா? சம்பளம் கொடுக்கிற அரசாங்கத் துக்கு விசுவாசமா நடந்துக்கிறாங்களா?”என்று கேட்டுவிட்டு  “சம்பளம் ஒருபக்கம், ஊழல் பணம் மறுபக்கம், அதுமட்டுமில்லாம, அரசாங்கத்துக்கு வருவாய் வர்ற வழி எல்லாத்தையும் அடைச்சிட் டாங்க.  சிறை மற்றும் சீர்திருத்தத்துறைன்னு பெயர் வச்சு என்ன பிரயோஜனம்? அதிகாரிகளே திருந்தாதப்ப, குற்றம் பண்ணிட்டு கைதிகளா சிறைக்கு வர்றவங்கள எப்படி திருத்த முடியும்? சிறைத்துறைல அப்படியென்ன சீர்திருத்தத்த கொண்டுவந்திருக்காங்க?''” என்று உணர்ச்சிவசப் பட்டார்.  

கடந்த அத்தியாயத்தில், சிறைச்சாலை உணவுக்கூடத்தில்  சாம்பாருக்காகப் பயன்படுத்தப் படும் துவரம் பருப்பு, 10 கைதிகளுக்கு 1.5 கிலோ என்பது  முரணான நிர்ணயம் என்றும், மளிகைப் பொருள்கள்,  எரிவாயு சிலிண்டர்கள் எல்லாம் தரவு அட்டவணையில் தாறுமாறான அளவுகளில் இடம்பெற்றுள்ளது எனவும் விவரித்திருந்தோம். 

உள்துறை மற்றும் நிதித்துறையைச் சேர்ந்த துணைச் செயலாளர்கள், சிறை அதிகாரிகள், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையின் ஊட்டச்சத்து நிபுணர் என அரசால் அமைக்கப்பட்ட குழுவானது, தமிழகச் சிறை வாசிகளின் உணவு முறையினை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலுள்ள சிறைவாசிகளுடைய உணவு முறைகளுடன் ஒப்பிட்டு கணக்கீடு செய்து, அதன்படி தரவுகள் அட்டவணையை உருவாக்கி, சிறைத்துறை டி.ஜி.பி.க்கு  பரிந்துரை செய்து, அதன் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. 

Advertisment

jail1

சமையல்துறையில் நிபுணத்துவம் பெற்ற கலைஞர்களின் முன்னிலையில் ஒரு முறையேனும் சமைத்துப் பார்த்திருந்தாலோ, 1000 பேருக்கு சமைப்பதற்கு எவ்வளவு பொருள்கள் தேவைப்படும் என்பதை அந்நிபுணரிடம் பெற்ற தரவுப் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தாலோ, இதில்  தேவைக்கு அதிகமாக எவ்வளவு உணவுப் பொருள்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்பதையும், எவ்வளவு பொருள்கள் வீணாகிறது என்பதையும் கண்டறிந்திருக்க முடியும். ஊழலுக்கு வழிவகுக்கும் தரவுப் பட்டியலில் மாற்றமும் கொண்டு வந்திருக்கலாம்.  

தமிழகச் சிறைகளின் விவசாயம், நிலம் சார்ந்து இரண்டுவிதமான ஊழல்கள் நடக்கின்றன. ஒன்று, உற்பத்தி எதுவும் மேற்கொள்ளப்படாமல், காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்குவது. மற்றொன்று, உற்பத்தியான பொருள்களை சிறைப் பதிவேடுகளில் வரவு வைக்காமல், வெளிச்சந்தையில் விற்றுவிடுவது. 

தமிழ்நாடு சிறை விதிகளின் ஈட்ஹல்ற்ங்ழ் 35-ல் பழைய விதி 776 -792, புதிய விதி 772 -788-ன் பிரகாரம்,  ‘ஒவ்வொரு மத்திய சிறையும்,  அதனைச் சுற்றியுள்ள 5 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரையிலான நிலங்களில் விவசாயம் செய்து, அதைக்கொண்டே மத்திய சிறையின் காய்கறித் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.’ என்கிறது.  

நன்னடத்தையின் அடிப்படையில் சில சிறை வாசிகள் சிறைக்கு வெளியே உள்ள தோட்டங் களில் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு செல்லும்போது கைதிகள் தப்பித்து ஓடுவது அவ்வப்போது நடக்கும். தோட்டங்களில் வேலை செய்யும் கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.300 வழங்கப்படுகிறது. கூடுதலாக துணிகளும் வழங்கப்படும்.   இவர்களைப் பாது காப்பாக சிறைக்கு வெளியே அழைத்துச்சென்று,  மீண்டும் சிறைக்குள் அழைத்துவர காவலர் ஒருவர் பணியமர்த்தப்படுவார். சிறை விதி: 36(4)/1983, 45(4)/2024-ன்படி, சிறைத் தோட்டத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து, அதனைச் சிறைக்குள் வழங்கி, உரிய பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்வதும், மேற்பார்வையிடுவதும் சிறை அலுவலரின் பணியாகும். 

ஒவ்வொரு மத்திய சிறையிலும் உள்ள நிலங் களின் விவசாயப் பணிகளுக்கு  தண்ணீர் தேவை என்பது நிரந்தரமானது. அதனைப் பூர்த்தி செய் வதற்காக, சேலம் மற்றும் மதுரை மத்திய சிறை களுக்கு தலா ரூ.1 கோடியிலும், வேலூர் மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைகளுக்கு  ரூ.4.94 கோடியிலும், தமிழ்நாடு காவல் வீட்டுவசதிக் கழகம் மூலம் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், கோயம் புத்தூர், திருச்சி மற்றும் கடலூர் மத்திய சிறைகளுக்கு ரூ.3.80 கோடியில் இந்த ஆலை நிறுவும் பணிகள் நடைபெறுகின்றன. 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே உள்ள மதுரை மத்திய சிறைக்கும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்ததுதான். அந்த 1 ஏக்கர் நிலத்தில் அச்சிறை எப்போது விவசா யம் செய்து, எப்போது அதிகப் பொருள்களை உற்பத்தி செய்து, சுத்திகரிப்பு நிலையத்துக்காக செல வழித்த பணத்தை ஈட்டப்போகிறது? சிறைத்துறை யின் எந்தவொரு திட்டமிடலும் இதுபோல் ஏனோதானோ ரகம்தான்.  இல்லையென்றால், தனியாக ஒரு வெப்சைட் முகவரிகூட இல்லாத தமிழ்நாடு மாநில பனைவெல்லம் (ம) தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற ஷெல் நிறுவனத்திடம்போய் நூற்றுக்கணக்கான கோடிகளில் சிறைகளுக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வார்களா?

கோயம்புத்தூர் மத்திய சிறையின் கட்டுப் பாட்டிலுள்ள சிங்காநல்லூர் திறந்தவெளி சிறைச்சாலை 30 ஏக்கரிலும், மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலை 84.37  ஏக்கரிலும், சேலத்தில் ஐந்தாம் தோட்டம் 47 ஏக்கரிலும் அமைந்துள்ளது. இதோடு தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் புதிதாக ஒரு திறந்தவெளி சிறையும் அமைக்கப் போகிறார்களாம். இங்கு குறிப்பிட்டுள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளுக் காக, ஆழ்துளைக் கிணறுகள், மோட்டார்கள், பம்பு செட்டுகள் போன்றவற்றுக்கு பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான மின்கட்டணம், காவலருக்கும், சிறைவாசிக்கும் வழங்கப்படும் சம்பளம் ஒருபுறம் இருக்கட்டும். மறுபுறம், இவர்களால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் மதிப்பைக் கணக்கிட்டு ஒப்பீடு செய்து பார்த்தால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசமானது மலைக்கும் மடுவுக்குமான அளவில் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகளையும் சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டு காய்கறிகளின் உற்பத்தியைப் பெருக்குவதற்காகவே, ஒவ்வொரு மத்திய சிறையிலும் சிறிய அளவிலான திறந்தவெளி சிறை அமைக்க வேண்டும் என 2019-ல் அரசாணை (எண்:2367) பிறப்பித்து ஆண்டுகள் பல கடந்தும், இன்றுவரை யிலும் அது முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. இந்தத் திறந்தவெளிச் சிறைகளில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு,  ஒருநாள் வேலை செய்தால் ஒருநாள் தண்டனைக் குறைப்பு வழங்கப் படும். சிம்பிளாகச் சொல்லவேண்டுமென்றால், 5 வருடத் தண்டனை நிலுவையிலுள்ள ஒரு கைதி திறந்தவெளி சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர் இரண்டரை வருடங்களிலேயே விடுதலை செய்யப் படுவார். மேலும், மத்திய சிறையிலுள்ள கைதி களைக் காட்டிலும் கூடுதலான உணவு, துணிகள் மற்றும் இதர சலுகைகள் இவர்களுக்குக் கிடைக்கும். சிறைச்சாலைகளைச் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் திறந்தவெளிச் சிறைகளில்,  இத்தனை வசதிகளைக்கொண்டு முறையாகக் காய்கறிகளை உற்பத்தி செய்திருந்தாலே தமிழ்நாட்டில் உள்ள 142 சிறைகளுக்கும் காய்கறிகள் சப்ளை செய்து உபரியாக உள்ளதை வெளிச்சந்தைகளில் விற்பனை செய்து அரசுக்கு லாபத்தை ஈட்டித் தந்திருக்கமுடியும்.  

ஒருசில நேர்வுகளில் உற்பத்தியைப் பெருக்கி, அதைச் சிறைப் பதிவேடுகளில் கணக்கில் கொண்டு வரும்போது, கான்ட்ராக்டர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும். சிறைக் கண்காணிப்பாளர்களுடன் கான்ட்ராக்டர்கள் சண்டையிடுவார்கள். ‘இத்தனை கோடி கான்ட்ராக்ட் எடுத்தது நஷ்டப்படவா?’ என்று மேல்மட்டத்தில் முறையிடுவார்கள். பிறகென்ன? கடுமையான அழுத்தம் தரப்பட்டு, காய்கறிகளை உற்பத்தி செய்வது செயற்கையாகக் குறைக்கப்படும்  கொடுமைகள் அரங்கேறும். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகளும் முக்கிய நகரங்களின் மையப் பகுதியி லேயே அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்களை வேண்டுமென்றே விவசாயம் செய்யாமல் வெற்றிடமாகவே வைத்திருப்பதற்குப் பதிலாக, தமிழ்நாடு வருவாய் நிலையாணை 24ஆ-ன்படி, விவசாயம் அல்லாத பணிகளுக்கு ஒத்திக்குவிட்டிருந்தாலே, பல கோடிகள் வருவாயாக அரசுக்குக் கிடைத்திருக்கும்.  

மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் செயல் படும் வேளாண்மைத்துறை நிபுணர்களைக்கொண்டு சிறை நிலங்களை மதிப்பீடு செய்து, குறைந்தபட்ச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்படவேண்டும்.  இல்லையென்றால், பனைவெல்லம் சொசைட்டியின் பின்னணியில் இருந்துகொண்டு கான்ட்ராக்டர்கள் போர்வையில் செயல்படும் மாபியாக்களுடன் கூட்டணி வைத்துள்ள சுயநலச் சிறை அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள் பெருத்த லாபம் பார்க்க வேண்டுமென்பதற்காக, மிக அதிக விலைகொடுத்து தரமற்ற காய்கறிகளை வாங்கியும், சிறை நிலங்களில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கு கணக்கு காட்டாமலும், மிகக்குறைந்த அளவே உற்பத்தி நடந்ததாகக் கூறியும், அரசாங்கத்துக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த மோசடிகளில் தொடர்ந்து ஈடுபடவே செய்வார்கள். 


(ஊழல் தொடர்ந்து கசியும்...)