சிங்கப்பூர் தொழிலதிபர் ஷேக் சிராஜுதீன் மனைவியின் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஸ்ரீவித்யாசுமதி, வழக்கறிஞர் நாகராஜ் டீம் தனக்குத் தெரிந்த தஞ்சை மைய மாவட்ட ஜெ. பேரவை தலைவர் கேபிள் செந்தில் (எ) செந்தில்குமாருடன் கூட்டு சேர்ந்து மோசடியாக தனது உறவினர்கள் பெயருக்கு சொத்துகளை மாற்றி விற்பனைசெய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisment

இதுகுறித்து முகமதா பேகம் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கேபிள் செந்தில் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Advertisment

இந்த சம்பவம் குறித்து ஷேக் சிராஜுதீன் தம்பி மகன் ஷேக் இலியாஸ் நம்மிடம், "எங்க பெரியப்பா ஷேக் சிராஜுதீன் சின்ன வயதிலேயே சிங்கப்பூர் போனவர், அங்கேயே எங்க பெரியம்மா முகமதாபேகத்தை திருமணம் செய்துக்கிட்டார். அவங்களுக்கு ஷேக்ஹைசர் என்ற மகனும், பர்வீன் என்ற மகளும் இருக்காங்க. எங்கள் குடும்பச் சொத்தில் அவருக்காக ஒதுக்கிய இடத்தில் 40 சதுரத்தில் சிங்கப்பூர் மாடலில் பெரியப்பா பெரிய பங்களா கட்டியிருந்தார்.

சிங்கப்பூரில் தொழில் செய்தவர் ஊருக்கு வரும்போது இங்கேயும் சொத்துகளை வாங்கினார். நாஞ்சிக்கோட்டை ரோடு சிராஜ்பூர் நகரில் 15 ஏக்கர், கந்தர்வக்கோட்டை தாலுகாவில் வடுக்கம்பட்டி, நொடியூர், மங்கனூர் உள்பட 4 கிராமங்களில் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கிப்பட்டியில் 41 ஏக்கர் என பல இடங்களிலும் நிலம் வாங்கியிருந்தார். 2006ல் பெரியம்மா கூட ஊருக்கு வந்து தங்கினார். சிங்கப்பூர் சிட்டிசன் என்பதால் இங்கே தங்க, ரெனீவல் பண்ணி யிருந்தாங்க. இங்கே இருந்த நேரத்தில் நாஞ்சிக்கோட்டை ரோட்ல ஒரு பெட்ரோல் பங்க், செங்கிப்பட்டியில் ஒரு பெட்ரோல் பங்க் தொடங்கியவர், லூப்ரிக்கேண்ட் ஆயில் டீலர்ஷிப் எடுத்து சென்னை, புதுச்சேரி உள்பட பல மாவட்டங்களுக்கும் சேல்ஸ் பண்ணினார். 

Advertisment

தொழில் நல்லா போனது. அந்த நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு 2015ல் இறந்துட்டார். எங்க மயானத்தில்தான் அடக்கம் செஞ்சோம். அந்த நேரத்தில் கொஞ்சம் கடனும் இருந்தது.

admkdistrickleader1

அதுக்கு பிறகு பெரியம்மா ஊர்லயே இருந்தாங்க. அப்ப அவங்களுக்கு பழக்கமானவங்க என்று சென்னை ஸ்ரீவித்யாசுமதி என்ற பெண் பெரியம்மாவுக்கு துணையாக  வந்து தங்கினாங்க. கொஞ்சநாள்லயே கொங்குவேல் செல்லப்பன், வழக்கறிஞர் நாகராஜன், வி.என்.பாஸ்கரன் என்று பலர் வரத்தொடங்கினாங்க. அப்ப எங்க பெரியம்மாவைப்  பார்க்க எங்களை உள்ளே விடல. வீட்டுச் சிறை மாதிரி வச்சிருந்தவங்க, கொஞ்ச நாள்லயே உங்க சொத்துகளை பாதுகாக்க வந்திருக்கிறோம் என்று சொல்லி மொத்த சொத்துகளையும் அவங்க பெயரில் பவர் மற்றும் சேல் அக்ரிமெண்ட் போட்டு தஞ்சாவூர், பூதலூர், கந்தர்வக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகங் களில் பதிவு செஞ்சிருக்காங்க.

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பெரியம்மா அவங்களை நம்பி நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டிருக்காங்க. பெரியம்மாகிட்ட எழுதி வாங்கிட்டு தஞ்சை அ.தி.மு.க. கேபிள் செந்தில் மூலம் சொத்துகளை விற்பனை செய்யத் தொடங்கிட்டாங்க. பிறகுதான் எங்களுக்கு  தெரிந்து மறுபடி பெரியம்மாவைப் பார்க்கப் போனால் விடல. சிங்கப்பூரிலுள்ள எங்க பெரியப்பா மகனுக்கு தகவல் சொல்லி சொத்துக்கள் எல்லாம் எதுவுமே இல்லாமப் போகுதுன்னு சொன்ன பிறகு, அவங்க அம்மாகிட்ட கேட்டிருக் கார். பாதுகாக்க பவர் கொடுத்தேன்னு சொல்லியிருக்காங்க. 2023-ல் ஊருக்கு வந்து சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்துகள் பற்றிய ஆவணங்களை நகல் எடுக்கும்போதுதான் மோசடியாக பத்திரப் பதிவு நடந்திருப்பது தெரிந்தது. அதில் மகன், மகளின் ஹிபா டாக்குமெண்ட்கூட போலி என்று தெரிந்தது. 

மொத்த சொத்துக்களும் பறிபோய்விட்டதை உணர்ந்தவர், உடனே எம்பஸி மூலம் புகார் கொடுத்துள்ளார். தஞ்சாவூர் குற்றப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாருக்குத்தான் தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவில் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்காங்க. முதல்கட்டமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய இருக்காங்க. ஆனால் அதற்குள் பிளாட்களை விற்று பலரும் வீடு கட்டியிருக்காங்க. எங்க குடும்பச் சொத்தில் போட்ட பிளாட்டில், எங்களுக்கான இடத்தைக்கூட வித்துட்டாங்க இந்த கும்பல்.

சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான நிலமோசடி நடந்திருப்பது பற்றி நான் இங்கு ஆவணங்கள் எடுத்துக் கொடுத்து சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்ததால் என் மீது கேபிள் செந்திலுக்கு கோபம். அதனால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகி யுள்ளது''’என்றார்.

இந்த மோசடிப் புகாரில் சிக்கியுள்ள தஞ்சை அ.தி.மு.க மத்திய மாவட்ட ஜெ. பேரவைத் தலைவர் கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் நம்மிடம், “"நாங்கள் யாரும் அந்தம்மா வை ஏமாற்றி சொத்துக்களை வாங்க வில்லை. அதாவது ஷேக்சிராஜுதீன் சிங்கப்பூரிலிருந்து சம்பாதித்து தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட் டத்தில் சொத்துக்கள் வாங்கி யிருக்கிறார். பிறகு அவர் தொழில் செய்தார். 2015-ல் அவர் இறந்தபிறகு பல சொத்துகள் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு ரூ.9 கோடி கடனில் இருந்தது. அவர் இறந்தபிறகு அந்த கடனை அடைக்கணும், சொத்துகளை விற்கணும் என்று சொன்னபோது ஸ்ரீவித்யாசுமதி லீகல் அட்வைசர், 

admkdistrickleader2

சீனியர் வழக்கறிஞர் நாகராஜனைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவருடன் வழக்கறிஞர்கள் டீம் தஞ்சைக்கு வந்து சொத்து ஆவணங்களைப் பார்த்த பிறகு வங்கிக் கடன் பற்றி அறிந்து அதனை மீட்க நீதிமன்றம் மூலம் உத்தரவுபெற்று வங்கியிலிருந்து சொத்துகளை மீட்டுள்ளனர்.

அதன்பிறகு அந்த சிராஜ்பூர் பிளாட்டுகள், மற்றுமுள்ள சொத்துகளை விற்க அந்தம்மா சொன்ன பிறகு முறைப்படி பவர் வாங்கியும், விற்பனை ஒப்பந்தம் போட்டும்தான் சொத்துக்களை விற்பனை செய்தாங்க. சொத்துகளை விற்பனை செய்ய உள்ளூரில் ஆள்வேண்டும் என்பதால் என்னை அணுகினார்கள். நான் எனக்கு குறிப்பிட்ட தொகை கமிசன் வேண்டும் என்று சொன்னேன். அதுபடி சொத்துகளை விற்பனை செய்யும்போது எனக்கான கமிசனை வங்கி மூலம் கொடுத்தார்கள். அதற்காக நான் டேக்ஸ் கட்டியிருக்கிறேன். அந்த பணத்தில் நானும் சில சொத்துக்களை வாங்கியிருக்கிறேன்.

 300 பத்திரங்களுக்கு மேல அந்தம்மா முகமதா பேகமே நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் வந்து சார்பதிவாளர் முன்னிலையில் பணம் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லித் தான் கையெழுத்து போட்டிருக்காங்க. அவங்களுக்கு ஆங்கிலம் தெரியு மென்பதால் சார்பதிவாளர் ஆங்கிலத்தில் கேட்பார். அந்தம்மா ஆமா பணம் வாங்கிட்டேன் என்று சொல்வார்கள். அதன் பிறகுதான் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது.

சொத்துக்களை விற்கும்போது அதற்கான பணத்தை அந்தம்மா வாங்கிட்டு சிங்கப்பூர் போய் சிங்கப்பூர் டாலராக மாற்றியிருக்கிறார். ஒருமுறை மணி டிரான்ஸ்பர் சிக்கலில் அவங்களுக்கு 3 மாதம் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருந்தார்கள். அவங்க வந்துபோன காலகட்டங்களில் அவங்க பணத்துடன்தான் போவாங்க. அதை வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்தே தெரிஞ்சுக்கலாம்.

இந்த நிலையில்தான் ஷேக்இலியாஸ் அந்தம்மாவை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்க முயன்றார், முடியவில்லை. வழக்கு போட்டார்... வெற்றிபெற முடியவில்லை. அதன் பிறகுதான் 2023ல் அந்தம்மா மகன் வந்து ரூ.15 கோடி சொத்துகளை மோசடி செய்துவிட்டதாக புகார் கொடுத்தார். நாங்கள் ஆவணங்களைக் காண்பித்தோம், போய்விட்டார். ஒவ்வொரு பிளாட்டுக்கும் வங்கி கடன் கொடுத்திருக்கிறது. சரியான ஆவணங்கள் இல்லாமல் வங்கி கடன் கொடுக்குமா?

"உங்கள் மகன் எங்களிடம் வந்து சொத்துக்களைக் கொடுங்கள் என்று கேட்கிறார்' என்று அந்தம்மாவிடம் பேசினேன். அவங்க வந்து சரி செய்வதாகச் சொன்னாங்க, வரல. அதனால் சொத்துக்களை விற்றுவிட்டு மீண்டும் மோசடிசெய்யப் பார்க்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் அந்தம்மா உள்பட அவங்க மகன் என 4 பேர் மீது வழக்கு போட்டிருக்கிறேன். இப்ப சொத்துகள் அதிக விலை போகிறது என்று இலியாஸ் கிளப்பிவிட்டு பிரச்சனை பண்றாங்க. தற்போது எங்கள் மீது வழக்கு போட்டிருப்பதாக செய்திகளில் பார்த்தோம். போலீசார் இதுவரை எங்களுக்கு சம்மன் தரவில்லை. சம்மன் வந்தால் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம்''’என்றார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரோ, "வந்த புகாருக்கு வழக்கு பதிவு செய் திருக்கிறோம். இனிமேல் ஒவ் வொருவருக்கும் சம்மன் அனுப்பி அழைத்து விசாரித்து ஆவணங்கள் சரி பார்ப்போம். முறைகேடு, மோசடி நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்'' என்றனர்.