"தமிழகத்தின் தேர்தல் களம் இந்தியாவின் வைர மார்க்கெட்டை அசைத்துப் பார்த்துள்ளது' என்கிறார்கள் வைர வியாபாரிகள்.

Advertisment

வைரத்தில் பலவகை உண்டு. இதில் "ப்ளஸ் பதினொன்று, மைனஸ் 15' வகை வைரக் கற்கள். வெறும் 5.2 கிராம் ஒரு கேரட் என வைர வியாபாரிகளால் அழைக்கப்படுகிறது. ஒரு கேரட் ப்ளஸ் பதினொன்று மைனஸ் பதினைந்து வகை நல்ல வைரத்தின் விலை இரண்டு லட்ச ரூபாய். அதாவது நமது அன்றாட சமையல் அறையில் பயன்படுத்தும் உப்புக்கல் அளவு வைரத்தின் விலை இரண்டு லட்ச ரூபாய்.

diamond-sasi

இந்தியாவின் வைர மார்க்கெட்டின் தலைநகரான குஜராத் மாநிலம் சூரத் நகரில் திடீரென ப்ளஸ் பதினொன்று ரக வைரம் அதிகமாக இறங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் திடீரென இந்த வைரம் அதிக அளவில் விற்கப்படுகிறது. சூரத் நகரில் சட்ட விரோதமாக கணக்கு இல்லாமல் வியாபாரம் செய்யும் தரகர்களால் இந்த வைரம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வைர மார்க்கெட்டையே சீர்குலைத்துள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்களால் சர்வதேச அளவில் விலைகுறைந்து வந்த வைர வியாபாரம் தமிழக அரசியல்வாதிகளின் அதிக அளவு விற்பனையால் முப்பது சதவிகிதம் வரை விலை குறைந்துவிட்டது என வைர மார்க்கெட் நிலவரங்களை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள் வியாபாரிகள்.

sasi

இதுபற்றி நம்மிடம் பேசிய அகில இந்திய வைர வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் தினேஷ்பாய், ""வைரம் என்பது மிக விலை உயர்ந்த பொருள். அதை எளிதில் பணமாக்கலாம். அதை பாதுகாப்பதற்கு சிறிய இடம் போதும் என்பதால் அரசியல்வாதிகள் தங்களது கறுப்புப் பணத்தை வைரமாக மாற்றி வைத்திருப்பது வழக்கம். மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பல அரசியல்வாதிகள் தங்கள் கறுப்புப் பணத்தை வைரமாக்கினர். அதுபோல வாங்கிக் குவித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது சட்டவிரோதமாக விற்க முன் வந்துள்ளனர் என தரகர்கள் சொன்னதாக செய்திகள் வருகின்றன'' என்கிறார்.

Advertisment

தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றால் யார் என வைர மார்க்கெட்டில் கேட்டோம். ""எல்லாம் சசிகலாதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சென்னையில் உள்ள பிரபல வைர வியாபாரி ஒருவர் மூலமாக சசிகலா வைரத்தை வாங்கினார். (இதுபற்றி நக்கீரன் வைர வியாபாரியின் பெயருடன் செய்தி வெளியிட்டது). அந்த வைர வியாபாரிக்கும் சசிகலாவுக்கும் உள்ள தொடர்பை அறிந்த வருமானவரித்துறை அவரது ஆழ்வார்பேட்டை கடையில் ரெய்டு நடத்தியது. அவர் மூலம் வாங்கிய வைரத்தை மட்டுமல்லாது ஏற்கனவே வாங்கிக் குவித்த வைரங்களையும் சசிகலா தரப்பு தற்போது தேர்தல் நேரத்தில் விற்க முன்வந்துள்ளது'' என்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி கொண்டு வரும்போது ஜெ. உடல் நலமில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் போயஸ் கார்டனின் கறுப்புப் பணத்தை வைரமாக்கினார் சசிகலா. அப்படி வாங் கிய வைரத்தை இப்போது ஏன் விற்க வேண்டும் என சசிகலா வகையறாக்களை கேட்டோம்.

ttv

""தமிழக அரசியலில் சசிகலாவுக்கு எதிர்காலம் வேண்டுமென்றால் எடப்பாடி தோற்க வேண்டும். 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. கட்சி ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் தான் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி தினகரனை தேடி ஓடிவருவார். அப்படி ஒரு நிலை வந்தால்தான் சசிகலா மறுபடியும் பொதுச் செயலாளராக வருவார். அ.தி.மு.க. அணிகள் ஒன்றுபடும் என சசிகலாவின் உறவினர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். அதனால் இதுவரை காட்டி வந்த கெடுபிடியைத் தளர்த்திய சசிகலா, தினகரனுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க முடிவு செய்துள்ளார். சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் செலவு செய்ய எடப்பாடி தயாராகியுள்ளார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.ம.மு.க.வும் 18 தொகுதிகளில் செலவு செய்து ஜெயிக்க வேண்டும் என்பதுதான் சசி வியூகம்'' என்கிறார்கள் மன்னார்குடி சொந்தங்கள்.

Advertisment

சசிகலாவின் கணவர் நடராஜன் உலகம் முழுவதும் நண்பர்களை திரட்டி வைத்துவிட்டுத் தான் இறந்திருக்கிறார். சசிகலாவும் வைகுண்ட ராஜன் போன்ற பிரபலங்களிடமும் பெயர் தெரியாத பல தொழிலதிபர்களிடமும் நூற்றுக் கணக்கான கோடிகளை கொடுத்து வைத்திருக் கிறார். சமீபத்தில் வைகுண்டராஜனின் கார்னெட் மணல் பிஸினசுக்கு ஒரு அரசு உத்தரவு மூலம் மூடுவிழா நடத்திவிட்டது மத்திய அரசு. புதுக்கோட்டை ரத்தினசபாபதி போன்ற சிறிய ஆட்களைக் கூட சசிகலா ஆதரவுக்கு எதிர்ப்பு என வருமான வரித்துறை மூலம் நசுக்குகிறது.

இந்த தாக்குதலை முறியடிக்க மோடியின் சொந்த ஊரான குஜராத்திலேயே பணம் திரட்ட சசிகலா முடிவு செய்தார். பல்வேறு நபர்களிடம் இருந்து திரட்டப்பட்ட ப்ளஸ் 11 வகை வைரங்களை குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தரகர்கள் மூலமாக விற்றார். அந்தத் தொகையில் மூவா யிரம் கோடி ரூபாயை தினகரனுக்கு வழங்கியுள்ளார் சசிகலா. இந்த விற்பனையில் ஆழ்வார்பேட்டை வைர வியாபாரி புரோக்கராக பல நூறு கோடிகளை கமிஷனாக பார்த்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நட வடிக்கையின் போது வைரமாக மாறிய நோட்டுகள் மறுபடியும் வைரத்திலிருந்து நோட்டுகளாக அவதாரம் எடுத்துள்ளன. தமிழகம் முழுவதும் முதல் ரவுண்ட் பிரச்சாரம் முடித்துள்ள தினகரன். இரண்டாவது ரவுண்ட் போகும்போது பண விநியோகம் தொடங்கும் என்கிறார்கள் சசிகலா உறவினர்கள். இந்தத் தகவல்களை அகில இந்திய வைர வியாபாரிகள் சங்க தலைவர் பாபுபாய் குஜராத்தி மறுக்கிறார். வைர வியாபாரமே ரகசியம் நிறைந்தது. எந்த வைர வியாபாரி இதை ஒத்துக் கொள்வார் என நம்மை கேட்கிறார்கள் வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவர்கள். தேர்தல் நேர அரசியல் வியாபாரத்தில் எதுவும் சாத்தியம்தான் என்பதே யதார்த்த நிலவரம்.

-தாமோதரன் பிரகாஷ்