புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் மாட்டு வண்டி களிலும், அறந்தாங்கி, விராலிமலைப் பகுதிகளில் டாரஸ் லாரிகளிலும் மணல் திருடுவது மாமூலாக நடக்கிறது. மணல் மாட்டு வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரிகள், திருட்டு மணல் ஏற்றிச்செல்லும் டாரஸ் லாரிகளுக்கு ராயல் சல்யூட் அடித்து அனுப்பி வைப்பது வாடிக்கையாகிவிட்டது.

Advertisment

ss

கடந்த 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு, ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஒரு பொக்லைன் மூலம் 2 டாரஸ் லாரிகளில் மணல் திருடப்படுவதாக அறந்தாங்கி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் வர, சில போலீசாருடன் சென்று 3 வாகனங்களையும் கொத்தாக அள்ளினார். அந்த வாகனங்கள், அறந்தாங்கி பகுதி மணல் மாஃபியாவிற்கு சொந்தமானது என்பதும், இது வருவாய்த்துறை மூலம் கருப்பு மணலை வெள்ளையாக்கும் தொழில் என்பதும் தெரிய வந்தது. மணல் லாரிகள், பொக்லைனை காவல் நிலையம் கொண்டு வரும்போது, இடையே லோடு இல்லாத லாரியின் குறுக் கீடு, கிராம உதவியாளர் ஒருவர் லாரிகளை வழிமறித்தது என அனைத்துத் தடைகளையும் தகர்த்து எடுத்துச் சென்றபோதும், வெள்ளாற்றுப் பாலத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டன.

Advertisment

அங்குவந்த அறந்தாங்கி வட்டாட்சியர் கருப்பையா, "இந்த மணலுக்கு பர்மிட் இருக்கு வண்டியை விடுங்க'' என்று சொல்ல, பர்மிட்டே இல்லையென்று எஸ்.ஐ. சொல்ல, சீசிங் பர்மிட் போட்டிருக்கு எனக்கூறி, மிரட்டி உருட்டி லாரிகளை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்துவிட்டார் அந்த தாலுகா அதிகாரி.

அதன்பிறகு விடுமுறையிலுள்ள கோட்டாட்சியரின் பி.ஏ. மூலம் அவசரமாக பர்மிட் தயார் செய்ய முயன்ற னர். ஆனால் கோட்டாட்சியர் அனுமதியில்லாமல் பர்மிட் கொடுக்க முடியாதென்பதால் அந்த முயற்சியும் ஆகவில்லை. ஆனாலும் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த திருட்டு லாரி களை வருவாய்த்துறை யினர் வழக்கம்போல சல்யூட் அடித்து அனுப்பி வைத்தனர்!

Advertisment

என்ன நடந்ததென்று காவல்துறை வட்டாரத் தில் கேட்கும்போது, "இந்தப் பகுதியில் அடிக்கடி மணல் கொள்ளை நடக்கிறது. நாங்கள் விரட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்ப சமீபகாலமாக நேரடியாக ஆற்றுக்குள் மணல் அள்ளப் போகமுடி யாத மணல் மாஃபியாக்கள், வெள்ளாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் அள்ளிவரச் செய்து ஒரே இடத்தில் குவிக்க வைத்து மொத்தமாக லாரிகளில் அள்ளிப் போறாங்க. அந்த மணலை நாங்க பிடிக் கும்போது தான் வருவாய்த்துறையிலிருந்து சீசிங் பர்மிட் உள்ளதாகப் பேசி வண்டிகளை விடச் சொல்வாங்க. ஒரு லாரி மணலுக்கு மாட்டு வண்டிக் காரங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி, வெளியில் ரூ.65 ஆயிரத்துக்கு விற்கிறார்கள். இந்த நிலையில் தான் எஸ்.ஐ. சரவணன் பிடித்த லாரி களை தாலுகா ஆபீஸிலிருந்து சல்யூட் அடித்து அனுப்பிட்டாங்க!'' என்றனர்.

ss

கோட்டாட்சியர் விடுப்பில் செல்லும் காலங் களில் வட்டாட்சியர் அலுவலகம் இதுபோல செயல் படுகிறது. வெள்ளிக்கிழமை சம்பவமும் அப்படித் தான் நடந்திருக்கிறது என்று காதுகடித்தனர். வட் டாட்சியர் கருப்பையா நம்மிடம், "ஆளப்பிறந் தானில் அனாமத்தாக மணல் கிடப்பதாகத் தகவல் வந்ததையடுத்து ஆர்.ஐ. மூலம் மணலை பறிமுதல் செய்ய லாரிகள், பொக்லைன் போனது. ஆனால் அந்த மணலை லாரியில் திருடிட்டு போறதா போலீசார் பிடிச்சாங்க. அங்கே நின்ற வருவாய்த் துறையினர் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை. மேலும், நாங்கள் பறிமுதல் செய்த பிறகு கோட் டாட்சியருக்கு நோட் வைப்போம். அதன்பிறகே சீசிங் பர்மிட் கொடுப்பாங்க. இப்ப நாங்க பறிமுதல் தான் செய்தோம். சீசிங் பர்மிட் கொடுக்கல'' என்ற வரிடம், "திருட்டு மணல் பறிமுதலுக்கு மணல் மாஃபியா ரமேசின் வாகனங்கள் ஏன் பயன்படுத் தப்பட்டது?'' எனக் கேட்டதற்கு, "வேறு இடங்களில் லாரி, பொக்லைன் கிடைக்காததால் அவருடைய வாகனங்களை அழைத்துச்சென்றோம்'' என்றார்.

கனிமவள பாதுகாப்பு சமூக ஆர்வலர்களோ, "திருமயம், விராலிமலை பகுதியில் கற்கள் சூறை யாடப்படுவது போல அறந்தாங்கியில் மணல் சூறை யாடப்படுகிறது. இது காவல்துறை, வருவாய்த்துறை எல்லாருக்கும் தெரிந்தே தான் நடக்கிறது. கே.எஸ். ஆர்.ரமேஷ் லாரிகள் என்றால் எல்லாரும் பேசாமல் தான் இருப்பாங்க. சில போலீசார் மணல் லாரி களைப் பிடிக்கும்போது உயர் அலுவலர்கள் பேசி விடச் சொல்லுவாங்க. இப்படித்தான் சில மாதங்கள் முன்பு அறந்தாங்கியில் ஒரு மணல் லாரியை அப்போதைய எஸ்.ஐ. பிடித்துவிட, அடுத்த சில நிமிடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பேசி விட வச்சிருக்கார். இப்ப அந்த அலுவலரின் பெயர், திருமயம் ஜகபர் அலி சம்பவத்தில் அடிபட்ட நிலையில், அந்த பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ பதிவை விசாரணை அலுவலர் வாங்கியிருக்கிறார்'' என்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி, கனிம வளத்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்து ஒரு நாள் முடிவதற்குள் இப்படி பகிரங்கமாக மணல் திருட்டு நடந்திருக் கிறது. இப்படித்தான் அமைச்சரின் சொந்தத் தொகுதியான திருமயம் கனிமக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட ஜகபர் அலியை கனிமக் கொள் ளையர்கள் லாரி ஏற்றிக் கொன்றார்கள். இதையெல் லாம் புதிய அமைச்சர் எப்படித் தடுக்கப்போகி றாரோ என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.