ழக்கமாக ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது போலீஸின் வழக்கம். உ.பி.யில் நேர்மாறாக, போலீஸை என்கவுண்டரில் போட்டுத்தள்ளி இந்தியாவை அலற வைத்திருக்கிறான் ரவுடி விகாஷ் துபே.

ff

கிட்டத்தட்ட 60 வழக்குகள் விகாஷ் துபே மீது இருக்கின்றன. சமீபத்தில் உ.பி. யின் பிரபலமான தொழிலதிபர் ஒருவரிடம் பெருந்தொகையை மிரட்டிப் பறிக்க, இந்த விவகாரம் போலீஸிடம் வர, இது தொடர்பாக அவனை கைதுசெய்து விசாரிக்கப் போகையில் தான் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது என்கி றார்கள் ஒரு தரப்பினர்.

மற்றொரு தரப்பினர், ஜூன் 18-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பின்டு செங்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்ற கொலையாளிக்கும் விகாஷ் துபேக்கும் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணைக்கு வந்த போதுதான் என்கவுண்ட் டர் நடந்தது என்கிறார்கள்.

Advertisment

1990-ல் ஒரு கொலை விவகாரத்தில் அடிபட்ட விகாஷ் துபே, கொலை, கடத்தல், கலவரம், தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் கப்பம் வசூலித்தல் என விறுவிறுவென பெரிய ஆளாக மாறினான். ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறதோ…அவர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு தனக்கு நெருக்கடி வராமல் பார்த்துக்கொள்வதில் கில்லாடி. தற்சமயம் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. விலும் துபேவுக்கு தொடர்புகள் உண்டு என்கிறார்கள். 2001-ஆம் ஆண்டு போலீஸ் ஸ்டேஷனிலே வைத்து அப்போதைய பா.ஜ.க. அமைச்சரான சந்தோஷ் சுக்லா என்பவரை சுட்டுக் கொன்றவன். அதைவிட பயங்கரம்தான் தற்போது நடந்துள்ளது.

சாபேபூர் போலீஸ் நிலையத்திலிருந்து துபேயைக் கைதுசெய்ய பக்ரு கிராமத்திலுள்ள வீட்டுக்கு நான்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் போலீசாரை பிடித்து அவமானப்படுத்தி, நன்கு உதைத்து அனுப்பிவைத்தது தான் மிச்சம்.

poo

Advertisment

அடிபட்ட போலீஸ் குழுவுக்கு தலைமை வகித்த எஸ்.ஹெச்.ஓ. தனது தலைமை அதிகாரிக்கு என்ன நடந்தது என் பதை விவரிக்க, அருகிலுள்ள இன்னொரு காவல்நிலையத்தை அழைத்த அதிகாரி மற்றொரு எஸ்.ஹெச்.ஓ. தலைமையில் இன்னும் நான்கு போலீஸாரை அனுப்பிவைத்தார். துபேயின் கிராமத்துக்கு வந்த இந்த போலீஸ் குழுவுக்கும் முதல் குழுவுக்கு கிடைத்த அதே வரவேற்பையும் உபசரிப் பையும் துபேயின் அடியாட்கள் செய்தனர்.

இந்த தகவலும் போலீசாருக்குப் போனபின் உ.பி. போலீஸ் சுதாரித்தது. அப்பகுதியின் எஸ்.பி., தனக்குக் கீழுள்ள டெபுடி எஸ்.பி. தேவேந்திர மிஸ்ராவையும், அப்பகுதி சர்க்கிள் ஆபிசரையும் அழைத்து கிட்டத்தட்ட ஐம்பது போலீசார் அடங்கிய படையைத் தயார்செய்து உரிய கவனிப்புடன் துபேயை கைது செய்து வரும்படி ஆணையிட்டார். ஆனால், துபேயின் ஆட்பலம், ஆயுத பலம் உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிடுவதில் எஸ்.பி. கோட்டை விட்டிருந்தார்.

ஏற்கெனவே இருமுறை போலீஸ் வந்திருந்ததால் உஷாரான விகாஷ் துபே, போலீஸ் வாகனங்கள் தனது வீட்டுக்கு வராதபடிக்கு வழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றப் பயன்படுத்தும் எர்த்மூவரை நிறுத்தியிருந்தான். தெருவிளக்குகளையும் சேதப்படுத்தியிருந்தான். இதனால் அதிகாலையில் துபேயின் கிராமத்தை நெருங்கிய போலீசார் தங்கள் வாகனத்தை தொலைவிலேயே நிறுத்திவிட்டு கால்நடையாகவே துபே வீட்டை சுற்றிவளைக்க முயன்றிருக்கின்றனர்.

அதையும் தாண்டி வீட்டை நெருங்கிய போலீசாரை தனது வீட்டின் மாடியிலிருந்தபடியே ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர் துபேயின் ஆட்கள். முன்வரிசையில் வந்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் முதலிலியே துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினர். சற்றுநேரத்திலே துபே தரப்பின் கை ஓங்கியது. போலீசார் மறைவிடங்களைத் தேடி பதுங்கிக்கொண்டனர்.

துப்பாக்கியை மட்டுமின்றி சில போலீசாரை கோடாலி போன்றவற்றால் கழுத்தை வெட்டியும் கொன்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. விடிகாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போலீசாரை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ரத்தச் சகதியான தெருவுக்குள் இறங்கி, காயம்பட்ட போலீசாரை மீட்டுச் சென்றிருக்கிறது. விஷயம் கைமீறிப்போனதால் துபேவும் அவனது ஆட்களும் கிராமத்தைக் காலிசெய்து தலைமறைவாகிவிட்டனர்.

துபேவின் தாக்குதலில் டி.எஸ்.பி. மூன்று சப்-இன்ஸ்பெக் டர்கள் உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 போலீசார் காயம்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விகாஷ் துபே தரப்பில் இரண்டுபேர் பலியாகியுள்ளனர். அவனது கூட்டாளி அக்னிகோத்ரி என்பவன் கைதுசெய்யப் பட்டுள்ளான். விசாரணையில் காவல்நிலையத்திலிருந்து வினய் எனும் போலீஸ் அதிகாரி, போலீசார் கைதுசெய்ய வருவதை முன்கூட்டியே துபேவுக்கு கசியவிட்டது தெரிந்து அவரை சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர்.

மேலும் போலீசின் திட்டம் வெறுமனே கைதுசெய்வதாக இருந்திருக்காது. என்கவுண்டராகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் துபே துணிந்து தாக்குதலில் இறங்கியிருக்கிறான் என ஒருதரப்பினர் கூறுகின்றனர். விகாஷ் துபே பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் அவன் இன்னும் கைதுசெய்யப்படாததற்கு காரணம் என்னும் கருத்தும் சமூக ஊடகங்களில் அடிபட்டுவருகிறது. துபேவின் வீட்டைத் தரைமட்டமாக்கி முதல் கட்ட ஆத்திரத்தை தீர்த்துள்ளது உ.பி. போலீஸ்.

யோகி ஆதித்யநாத் உ.பி.யில் ரௌடிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து உத்தரப்பிரதேசத்தை ராமராஜ்யமாக மாற்றியதாக பெருமைபேசிய நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஆளும்கட்சியுடனான விகாஷ் துபேயின் தொடர்பு அவனைக் காப்பாற்றப்போகிறதா… இல்லை ஆட்சியின் பெயரைக் காப்பாற்ற விகாஷ் துபேயை ஆளும்கட்சி பலியிடப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-க.சுப்பிரமணியன்