புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்து இருக்கிறது கள்ளப்பிராண் ஊராட்சி. இதற்கு உட்பட்ட அத்திமானம் என்ற கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இருளர் வகுப்பைச் சேர்ந்த கண்ணன், அமரன் என்ற இளைஞர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வேதகிரி முதலியாரிடம் வேலை செய்துவந்தனர்.

hh

பழங்குடியினராகிய இந்த இளைஞர்களின் அறியா மையைப் பயன்படுத்தி, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகையை பயன்படுத்திக் கொள்ள சென்னையில் உள்ள தனது மைத்துனர் சங்கரநாராயணனிடம் அனுப்பியிருக்கிறார் வேதகிரி முதலியார். "இருளர்களுக்கு "பாரத் பெட்ரோலியம்', "ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' போன்ற நிறுவனங்களில் சலுகை இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உங்களுக்கு நல்ல வாழ்க்கையை சங்கரநாராயணன் அமைத்துக் கொடுப்பார்' என்று அந்த இளைஞர்களுக்கு ஆசைகாட்டி அனுப்பியிருக்கிறார்.

இது நடந்து ஆறு ஆண்டுகள் ஆயிற்று. அப்போது கண்ணன் மற்றும் அமரனிடம் சங்கரநாராயணனும் நம்பிக்கையூட்டும் வகையில் பேசியிருக்கிறார். பின்னர், இவர்களிடம் சில ஆவணங்களிலும், வெற்றுத் தாள்களிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டார். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களையும் வாங்கிக்கொண்டார். அதன்பின்னர், செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். பலமுறை சென்னைக்கு சென்று சங்கரநாராயணனிடம் வேலை குறித்து கேட்டபோது, அப்போதைக்கு செலவுக்கு இரண்டு அல்லது மூன்றாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

Advertisment

hh

அவர்களை எதிர்த்து வாழமுடியாது என்பதாலும், வேத கிரியிடம்தான் வேலை செய்ய வேண்டும் என்ப தாலும் அவர்கள் எதுவுமே பேசாமல் காலத்தை கடத்தி யிருக்கிறார்கள். இந்நிலையில்தான் சங்கரநாராயணன் தனது மேனேஜர் வேலுமணி, மாமா வேதகிரி ஆகியோ ருடன் கண்ணன் மற்றும் அமரனிடம் வந்திருக்கிறார். தங்களுடைய டேங்கர் லாரி பிரச்சனையில் மாட்டிக்கொண்டதாகக் கூறி, நூறு ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் மற்றும் கிரீன் பேப்பர்களில் தனித்தனியாக கையெழுத்து வாங்கிக்கொண்டு போனார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து, அவர்கள் இருவரையும் கரூருக்கு உடனே வரும்படி போன் செய்திருக்கிறார் சங்கரநாராயணன். அவர்களுடைய பயணத்துக்காக டிசம்பர் 4 ஆம் தேதி, நாலாயிரம் ரூபாய் பணம் போட்டிருக்கிறார். இனி கண்ணன் சொல்வதைக் கேட்போம்…

Advertisment

""கரூருக்கு போனவுடனே சங்கரநாராயணனின் மேனேஜர் வேலுமணி வந்தார். அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கவைத்தார். சங்கரநாராயணன் அன்று மாலைவரை வராததால் நானும் அமரனும் ஊருக்குப் போவதாக வேலுமணியிடம் கூறினோம். உடனே, அவரே எங்களை அழைத்துப் போவதாக கூறி நாமக்கல்லுக்கு கூட்டிப்போனார். அங்கு எங்களைச் சந்தித்த சங்கரநாராயணன் எங்கள் போனைப் பிடுங்கி கீழேபோட்டு உடைத்தார்.

பிறகு எங்களை வாணியம்பாடி தாண்டி ஒரு காட்டுக்குள் கொண்டுபோய் நிறுத்தி திடீரென்று எங்கள் இருவர் கழுத்தையும் கயிறால் இறுக்கிக் கொலைசெய்ய பார்த்தார்கள். ஒருவழியாக அவர்களை தள்ளிவிட்டு தப்பினோம். இதோ கழுத்தில் அந்த வடுகூட இருக்கு. தப்பி வரும்போது ஆம்பூர் போலீஸார் எங்களை ஸ்டேஷன் கூட்டிப்போய் விசாரித்து ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஊருக்கு வந்து மக்கள்கிட்ட சொன்னோம். தகவல் தெரிந்த தொண்டு நிறுவன தலைவர் சேம் தங்கவேல் நக்கீரனுக்கு தகவல் சொன்னார்'' என்றனர்.

நடந்தது பற்றி சேம் தங்கவேல் கூறியது,…""இவர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி, பலகோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் கூரை வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய ஆண்டு வருமானம் பல கோடிக்கணக்கில் காட்டப்பட்டு பல லட்சம் ரூபாய் வரியாகவே செலுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு மோசடியும் செய்துவிட்டு இவர்களை கொலையும் செய்யப் பார்த்திருக்கிறார்கள். இதுகுறித்து படாளம் போலீஸிடம் டிசம்பர் 7-ஆம் தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆகியோரும் கண்டுகொள்ளவில்லை. பத்தாயிரம் லோன் கேட்டால் பத்து உத்தரவாதம் கேட்கிறார்கள். கூரை வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு எப்படி பலகோடி ரூபாய் கடன் கொடுத்தார்கள். இருளர்கள் பெயரில் தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து வங்கிகளில் விசாரித்தாலே பல மோசடிகள் வெளிவரும்'' என்றார்.

இதுகுறித்து படாளம் காவல் ஆய்வாளர் பால சுப்பிரமணியனை நேரில் சந்தித்து, ""புகார் கொடுத்து 15 நாட்களாகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று கேட்டோம். அவரோ, ""எனக்கு எப்போது தோணுதோ அப்போ விசாரிப்பேன்'' என்று அலட்சியமாக பதிலளித்தார். மாவட்ட எஸ்.பி.யோ போனை எடுக்கவில்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, “"மேடம் ரொம்ப பிசி' என்று எதிர்முனை நபர் இணைப்பைத் துண்டித்தார்.

இருளர் மீதான ஒடுக்குமுறை எல்லா மட்டத் திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

-அரவிந்த்

படங்கள் : எஸ்.பி.சுந்தர்