"ஹலோ தலைவரே, தி.மு.க. தலைவரா பொறுப்பேற்றுக்கிட்ட மு.க.ஸ்டாலின், "இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்'னு பேசினார். அதனால், அவரது அணுகுமுறைகளில் அதற்கான அறிகுறி தெரியுதான்னு அரசியல் வட்டாரமே உற்றுப்பார்க்க ஆரம்பிச்சிருக்கு.''’

""முல்லைவேந்தன், கருப்பசாமிப் பாண்டியன் போன்றோரை மறுபடியும் ஸ்டாலின் தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டதைப் பார்த்தால், அதற்கான அறிகுறி போலத்தானே இருக்கு.''’

alagiri""ஆமாங்க தலைவரே, லோக்கல் உள்கட்சிப் பிரச்சினைகளில் முன்பெல்லாம் ஸ்டாலின் ஒன்சைடை சப்போர்ட் பண்ணுறாருன்னு கட்சி வட்டாரத்தில் பேச்சு இருந்தது. தி.மு.க.வில் ஸ்டாலினின் ஆதரவு இல்லாததால் தே.மு.தி.க.வுக்குப் போன முல்லைவேந்தன், அண்மைக்காலமா தி.மு.க. தரப்போடு டச்சில் இருந்தாரு. கலைஞர் காவேரி மருத்துவமனையில் அட்மிட்டாவதற்கு முன்னாடியே, கோபாலபுரம் வந்து ஸ்டாலினிடம் நலன் விசாரிச்சாரு. அதன்பிறகும் தொடர்ந்த உறவால், முல்லைவேந்தன் மறுபடியும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டிருக்காரு. இதனால தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல கட்சிக்கு செல்வாக்கு கூடலாம்னு தி.மு.க. தரப்பில் நினைக்கிறாங்க.''’

""நெல்லை மாவட்டப் புள்ளியான கருப்பசாமிப் பாண்டியனும் தி.மு.க.வுக்கு திரும்பி வந்திருக்காரே!''’

Advertisment

""கானா, தி.மு.க.வில் இருக்கும்போது, அவர்மேல் பல்வேறு புகார்களும் சர்ச்சைகளும் இருந்துச்சு. அப்புறம் அ.தி.மு.க.வுக்குப் போய், ஜெ. கையாலேயே உறுப்பினர் கார்டையும் வாங்கிக்கிட்டார். ஆனால் அங்கும் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கலை. சமீபகாலமா, தி.மு.க. தலைமைக்கு கானா தூதுவிட, ஒருகட்டத்தில் துரைமுருகன் பேசி, சிக்னல் தந்தாரு. ஸ்டாலின் தலைவரானதும் கட்சியிலே சேர்க்கப்பட்டிருக்காரு..''’

""பழைய உடன்பிறப்புகள் எல்லாம் தி.மு.க.வில் சேரும்போது, ஸ்டாலினின் உடன்பிறந்தவரான மு.க.அழகிரிக்கு மட்டும் அறிவாலயக் கதவு திறக்க மாட்டேங்குதே?'’

""கலைஞராலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அரசியலில் தனி ஆவர்த்தனம் பண்ணிக்கிட்டிருக்கும் அழகிரி, கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலினுக்கு எதிரா கருத்து தெரிவிச்சி, 5-ந் தேதி பேரணின்னு அறிவிச்சதும் ஸ்டாலின் தரப்பு டென்ஷனாயிடிச்சி. தி.மு.க.வை அழகிரி உடைப்பாராங்கிற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் பரபரப்பாயிடிச்சி. ஆனா, பேரணி ஏற்பாடுகளுக்கு கட்சி நிர்வாகிகளிடமிருந்து ஆதரவு இல்லைன்னதும், தன்னைக் கட்சியில் சேர்த்துக்கிட்டா ஸ்டாலினைத் தலைவரா ஏத்துக்கத் தயாருன்னும் சொன்னார். அறிவாலயத்தின் சிக்னலை எதிர்பார்த்து காத்திருந்தாரு. ஸ்டாலினிடமிருந்து எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லை. தன் தயவு இல்லாமல் ஸ்டாலினால் ஜெயிக்க முடியாதுங்கிறது அழகிரியோட குரலா இருக்கு. அதனால் ஸ்டாலின் தரப்போ, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அழகிரி இல்லாமல் தி.மு.க.வின் பலத்தைக் காட்டிட்டு, அதன்பிறகு பார்த்துக்குவோம். இப்போதைக்கு அழகிரி விஷயத்தில் எதுவும் பேச வேண்டாம்னு கதவடைத்துவிட்டது அறிவாலயம். ஸ்டாலினோ முக்கொம்பு அணை, கடைமடைப்பகுதி, திருக்குவளைன்னு வரிசையா மக்களை சந்திக்க கிளம்பிட்டாரு. அழகிரியோ 5-ந் தேதி பேரணியில் பலம் காட்டுவது எப்படின்னு 3-ந் தேதி நைட்டு வரை வியூகம் வகுத்தாரு.''’

Advertisment

""இடைத்தேர்தல் நடக்குமா?''’

stalin""அதுக்கு முன்னாடி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி கண்டிக்கும் உயர்நீதிமன்றத்திடம் இனியும், கால நீட்டிப்பை வாங்கமுடியாதுன்னு எடப்பாடி புரிஞ்சிக்கிட்டார். தமிழகத் தேர்தல் ஆணையமும், வார்டுகளின் மறு சீரமைப்பை முடிச்சி அரசுக்கு ரிப்போர்ட்டை அனுப்பிவச்சிடுச்சி. அதனால் இது தொடர்பா சீனியர் அமைச்சர்களுடன் 1-ந் தேதி ஆலோசிச்ச முதல்வர் எடப்பாடி, மா.செ.க்களிடம் பூத் கமிட்டிகளை அமைக்கச் சொல்லி, தேர்தலுக்கு நாம ரெடியாகணும்னு சொல்லியிருக்கார். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எந்த நேரமும் வரலாம் என்பதால் அது தொடர்பான உளைச்சலிலும் இருக்கிறார் எடப்பாடி.''

""முதல்வருக்கும் அமைச்சர்களுக்குமே முட்டல் மோதல்கள் இருக்குதாமே?''’

""தேர்தலுக்கு நிதிவேணும்ன்னு அமைச்சர்களிடம் முதல்வர் எடப்பாடி கேட்டப்ப, பலரும் எரிச்சலானாங்க. இவர்களில் அமைச்சர் சி.வி.சண்முகம், "வசதி கொழுத்த வருவாய்த் துறையையும் பொதுப்பணித் துறையையும் கைல வச்சிக்கிட்டு, எங்ககிட்ட எதுக்குக் கை ஏந்தறீங்க'ன்னு கேட்டு சண்டை போட்டதையும், அமைச்சரவையில் நீங்க இருக்க மாட்டீங்கன்னு எடப்பாடி சொல்ல, "அப்படியொரு நிலைவந்தா அதுக்கு முன்னாடியே நீங்க முதல்வர் நாற்காலியில் இருக்கமாட்டீங்க'ன்னு சி.வி.சண்முகம் பதிலுக்கு எகிறியதையும் நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்கு தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்குவது தொடர்பான சில வேலைகளை, சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்திருந்தாராம் எடப்பாடி. ராதாகிருஷ்ணனோ, இதைச்செய்யாமல் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு மத்த டீலிங்குகளில் மும்முரமாக இருக்கிறாராம். இது தொடர்பாகவும் எடப்பாடிக்கும் அமைச்சருக்கும் இடையில் அண்மையில் உரசல் ஏற்பட்டதாம்.''’

sophiya

"துணை முதல்வர் ஓ.பி.எஸ். பக்கமும் பரபரப்பு தெரியுதே?''’

"ஓ.பி.எஸ்.சிடம் 28 வருடமாக தனி உதவியாளராக இருந்து வந்தவர் ரமேஷ். அலுவலகக் குளறுபடியைக் காரணம் காட்டி இவரை, ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத், திடீர்ன்னு வேலையில் இருந்து நீக்கிவிட்டார்ஓ.பி.எஸ். பொதுப்பணித்துறை அமைச்சராக ஆனதில் இருந்து, அவரை ஜெ. முதல்வராக உட்கார வைத்தது வரையில் அவரோடு நெருங்கி இருந்தவர் ரமேஷ். ஜெ. காலத்திற்குப் பின்னரும் ஓ.பி.எஸ்.சின் நிழலாகவே இருந்துவந்தவர். ஓ.பி.,எஸ்.சிடம் வந்த அத்தனை ஃபைல்களின் பின்னணியையும் அறிந்தவர் ரமேஷ். கார்டனுடனான டீலிங் விபரமும் இவருக்கு அத்துப்படியாம். அப்படிப்பட்டவர் வெளியே அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியா பார்க்கப்படுது''’

"பா.ஜ.க. தரப்பை சீண்டும் வகையிலும் எடப்பாடி அரசு நடக்குதுன்னு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகுதே?''’

"அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தாலும் இல்லாவிட்டாலும் அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள டெல்லி நினைக்குது. அதுக்காக, எடப்பாடி. ஓ.பி.எஸ். தரப்புகளின் ரெய்டு விபரங்களைக் கூட்டணிக்கான தூண்டிலா பயன்படுத்திக்க நினைக்கிது மோடி அரசு. இதைத் தெரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் சிலர் சொத்துக்களைக் குவிச்சது தொடர்பான ஆவணங்களை சேகரிச்சிக்கிட்டு இருக்கார். ரெய்டை வச்சி பா.ஜ.க. மிரட்டினால், அதைத் தகுந்தபடி எதிர்கொள்ளத்தான் இந்த நடவடிக்கையாம்.''’

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கும் மிரட்டல் வந்திருக்கே?''’

sankar

"பா.ஜ.க. ஆட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கிற பலரும் பல வகையிலும் ஒடுக்கப்படுகிறார்கள். தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். உச்சகட்டமா தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷுன்னு குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள். இவர்களில் கௌரி லங்கேஷ் படுகொலையை விசாரிக்கும் கர்நாடக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, கொலை தொடர்பா அமோல் காலே என்கிற இந்துத்துவா தீவிரவாதியைக் கைது பண்ணியிருக்கு. காலேவின் நாட்குறிப்பில் கொல்லப்பட வேண்டியவர்கள்ன்னு 34 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்காம். அதில் ரவிக்குமாரின் பெயரும் இருந்திருக்கு. இந்தத் தகவல் கிடைத்ததால்தான் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு கேட்டு, திருமாவும் ரவிக்குமாரும் எடப்பாடியைப் பார்த்திருக்காங்க. ஆனால் பாதுகாப்புதான் இன்னும் கிடைக்கலை.''’

“நான் ஒரு தகவல் சொல்றேன்.. ஷங்கர் இயக்கிய "எந்திரன்' படத்தின் கதை அந்தப் படம் வெளியாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம்' இதழில் கவிஞரும் தலைமைத் துணை ஆசிரியருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய சிறுகதையை அப்படியே வரிக்கு வரி காப்பி அடிச்சிருந்ததால், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்.''

___________________________________

மணப்பெண் கொடுத்த ஷாக்! அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விரக்தி!

ரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஈஸ்வரன், mla-sathyaஅவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கருப்புச்சாமி மூலம் 2011-ல் பனையம்பள்ளி சிற்றூராட்சித் தலைவரானார். 2016 சட்டமன்றத் தேர்தலில் பவானிசாகர்(தனி) தொகுதியின் எம்.எல்.ஏ.வானார். 43 வயதாகியும் திருமணம் நடக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ஈஸ்வரனுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் மூலம், அவரது வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் வேன் டிரைவராக இருக்கும் ரத்னசாமிக்கு திருமண வயதில் மகள் இருக்கும் தகவல் கிடைத்தது.

வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடத்த முடிவாகி, இரு மாதங்களுக்கு முன்பு ரத்னசாமியின் 23 வயது மகள் சந்தியாவுக்கும் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தனது உறவினரான சபாநாயகர் தனபால் மூலமாக தனது திருமணத்திற்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் வருகையையும் உறுதிப்படுத்தினார் ஈஸ்வரன். பத்திரிகை அச்சடித்து உறவினர்கள், கட்சிக்காரர்கள் ஆகியோருக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் ஒரு நாள், ""வயது வித்தியாசம் அதிகம் இருப்பதால் எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை. வேறு பெண்ணைப் பார்த்துக்கங்க'' என்ற எஸ்.எம்.எஸ்.சை ஈஸ்வரனுக்கு அனுப்பியுள்ளார் சந்தியா. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ஈஸ்வரன் இருந்த நிலையில்தான், யாரிடமும் சொல்லாமல் கடந்த 01-ஆம் தேதி வீட்டைவிட்டுக் கிளம்பி பெங்களூருக்குப் பறந்துவிட்டார் சந்தியா. "அவளது காதலனுடன் ஓடியிருக்கலாம்' என சந்தியாவின் தாயாரே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

"எம்.எல்.ஏ. ஈஸ்வரன் விரக்தியடைந்திருந்தாலும் நிச்சயிக்கப்பட்ட தேதியில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தே தீரும்' என்கிறார்கள் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள்.

-ஜீவா தங்கவேல்

இறுதிச்சுற்று!

அரசியலுக்கு வரும் விஜயகாந்த் வாரிசு!

vijayprabhakar

அமெரிக்காவிலிருந்து சிகிச்சைபெற்றுத் திரும்பிய விஜயகாந்த், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சென்னை- மியாட் மருத்துவமனையில் அட்மிட்டானார்.

விஜயகாந்த் சிகிச்சையிலிருந்தபோது, வதந்திகள் பரவிய நிலையில் அவரது மகன் விஜய் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ""விஜயகாந்த் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல்கள் பரவியிருக்கின்றன. அப்படி இருந்தால் அவரைவிட்டு நான் நெல்லூர் வந்திருப்பேனா?…அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மைதான். அவர் விரைவில் குணமடைந்து வருவார். ஒவ்வொருவருக்கும் வேலை, கடமை இருக்கிறது. அதனைப் பாருங்கள்'' என்று கூறினார். விஜயகாந்த்தும் வீடு திரும்பினார்.

இந்நிலையில் தே.மு.தி.க.வில் உள்ள பழைய நிர்வாகிகள் கட்சிக்கு இளரத்தம் பாய்ச்ச, விஜய்பிரபாகரனை கட்சிக்குள் கொண்டுவரும்படி விஜயகாந்த்திடமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள். "அடுத்த சில மாதங்களில் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக விஜய்பிரபாகரனை அறிவித்து, இளைஞரணி மாநில மாநாடு அறிவிப்பு வரும்' என்கிறார்கள் கட்சியின் மேல்மட்டத்துக்கு நெருக்கமானவர்கள்.

-ஜெ.டி.ஆர்.

இறுகும் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு விவகாரத்தில் பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவக்குமாரை லஞ்ச ஒழிப்புத் துறை ஒருவார காலத்துக்கு விசாரணையில் கொண்டு வந்துள்ளது. 600 கேள்விகளை கொண்டு விசாரணை நடத்தி இருக்கிறது. அதில் குறிப்பாக விடைத்தாள் திருத்தியவர்களிடமே (முதலில் 7 மதிப்பெண்) எப்படி மறு மதிப்பீடுக்கு (பின்னர் 55 மதிப்பெண்) கொடுக்கப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த விசாரணை நடந்து முடிந்த பின்னர் முன்னாள் தேர்வுக் கட்டுபாட்டாளர் உமா விசாரிக்கப்படுவார். அதன் பின்னர் அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. முன்னாள் பதிவாளர் கணேசனையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக சொல்கிறார்கள்.

-ஜீவாபாரதி