""ஹலோ தலைவரே, தே.மு.தி.க.வில் தலைமை மாற்றத்துக்கான அறிகுறி தெரியத் தொடங்கிடிச்சி.''’
""கட்சியின் பொருளாளர் பதவிக்கு விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா வந்ததை சொல்றியா?''’
""ஆமாங்க தலைவரே.. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, விஜயகாந்த்தை பழைய ஆக்டிவ்வான விஜயகாந்த்தா பார்க்கணும் என்பதுதான் அவர் குடும்பத்தினரின் விருப்பமாம். 40 நாள் அமெரிக்க சிகிச்சைக்குப்பிறகும் முழுமையான உடல்நலன் பெறலை. தே.மு.தி.க. வில் இளைஞரணிப் பொறுப்பை வகிக்கும் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷைவிட, பிரேமலதா கையில் கூடுதல் அதிகாரம் இருந்தால் தேர்தல் கூட்டணி உள்பட பல மூவ்களும் சரியா இருக் கும்னு குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளும் நினைச்சதாலதான் இந்த முடிவுன்னு சொல்றாங்க.. கட்சியின் சொத்துகளை நிர்வகிப்பதோட, வரவு செலவை கவனிக்க வசதியாவும் அவர் பொருளாளர் பதவியை எடுத்துக் கிட்டாராம். கலைஞர், எம்.ஜி. ஆர்., ஓ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின்னு பலரும் பொருளாளரா இருந்த தால் அந்த சென்ட்டி மெண்ட்டும் சேர்ந்திருக்கு. தீபாவளிக்குப் பிறகு மீண்டும் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் போகப்போறார். அதனால் பிரேமலதாதான் தே.மு.தி.க.வின் புது கேப்டன்னு சொல்றாங்க.''’
""நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் பட்டியலை தி.மு.க. அறிவிச்சிருக்கே?''’
""2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட தி.மு.க.வால் கைப்பற்ற முடி யலை. அதனால் இந்தமுறை கவனமா அடி யெடுத்து வச்சி, 2004-ல் நாற்பதுக்கு நாற்பதுன்னு ஜெயிச்ச மாதிரி இப்பவும் ரிசல்ட் வரணும்னு நினைக்கிறாரு ஸ்டாலின். அதாவது அடுத்த பிரதமர் பதவி யாருக்குன்னு தீர்மானிக்கும் இடத்தில் தி.மு.க. இருக்கணும்ங்கிறதுதான் அவரோட வியூகம். ராகுல் உள்பட யாரையும் பிரதமர் வேட்பாளரா கமிட் பண்ணாமல் காய் நகர்த்துறாரு. எதிர்பார்த்தபடி ஜெயிக்கணும்ங்கிற துக்காக 40 தொகுதிகளுக்கும் தலா 2 பேருன்னு 80 பொறுப்பாளர் களை நியமிச்சிருக்காரு. தி.மு.க.வில் பழைய முகங்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போன தொகுதி மக்களுக்குப் புதிய முகங்களை அறிமுகப்படுத்த னுங்கிற நோக்கத்தில், இந்த தேர்தல் பொறுப் புக் குழுவில் புதிய புதிய இளைஞர்களையும் போட்டிருக்கு தி.மு.க. இதில் தி.மு.க.வின் சீனியர்கள் முதல், கட்சி அணிகளின் நிர்வாகிகள்வரை இடம் பிடிச்சிருக்காங்க. இதே பாணியில் தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலிலும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்குமாம். தொகுதிக்கு சம்பந்தமில்லாதவங்க பொறுப் பாளரா நியமிக்கப்பட்டிருப்பது சீனியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், இரண்டு பொறுப்பாளர்களில் ஒருவர் அந்தந்த தொகுதியிலும் பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவரா நியமிக்கப்பட்டிருக்காரு.''’
""இருந்தாலும், பொறுப்பாளரா இருப்பவர்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலில் இடம் தரப்படுமா? தொகுதிகளின் வெற்றி தோல்விகளுக்கான பொறுப்பை, பொறுப்பாளர்களே சுமப்பார்களா? பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டிருக்கும் ஜூனியர்கள் சொல்வதை, தொகுதியில் இருக்கும் மா.செ.க்களும் முன்னாள் அமைச்சர்களும் கட்சியின் சீனியர்களும் கேட்பார்களா? என்பது போன்ற கேள்விகள் தி.மு.க.வினரிடம் இருக்கே?''’
""நியாயமான கேள்விகள்தாங்க தலைவரே.. இதையெல்லாம் தி.மு.க தலைமைதான் விளக்கணும். அதற்காகத்தான் ஸ்டாலின், 25-ந் தேதி தேர்தல் பொறுப்பாளர்கள், மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்துறாரு.''’
""தி.மு.க.வின் கூட்டணி நிலவரம் எப்படி இருக்கு?''’
""அண்மையில் கூடிய, தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் ஸ்டாலின் சொன்னபடி, ஏற்கனவே தி.மு.க., கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் கட்சிகளும், அவற்றோடு வைகோவின் ம.தி.மு.க.வும் மட்டுமே இடம்பெறும் என்பதுதான் இப்ப வரைக்கும் உள்ள நிலவரம். அதே நேரத்தில், காங்கிரஸ் தரப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலுடன் நெருக்கம் காட்டுறாங்க. அண்மைக் காலமா ராகுல்காந்தியும் கமலும் சந்தித்தோ போனிலோ பேசுறாங்க. தி.மு.க. கூட்டணியில் டபுள் டிஜிட்டில் காங்கிரசுக்கு சீட் கிடைப்பது கஷ்டம்னு சொன்ன கமல், நாம கூட்டணி அமைத்துப் போட்டிபோடலாம். தி.மு.க. இல்லைன்னாலும், பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டு காங்கிரசுக்குத்தான் விழும். எனக்குள்ள சினிமா இமேஜும் கூடுதல் பலமா சேரும்னு சொல்லி யிருக்காரு. இதை மௌனமாகக் கேட்டுக்கிட்ட ராகுல், கடந்த 20-ந் தேதி மாலை தன் கட்சி சீனியர்களான அகமது படேல், குலாம் நபி ஆசாத், கபில்சிபல், மோதிலால் ஓரா, ஜெய்ராம் ரமேஷ் போன்றோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி பேசியிருக்காரு.''’
""காங்கிரஸின் சீனியர்கள் என்ன சொன்னாங்களாம்?'' ’ ’‘
""தமிழக அரசியல் நிலவரத்தைக் கவனிக்கும் குலாம்நபி ஆசாத்தோ, "நாம் அவசரப்பட வேணாம். நாமாக தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகவும் கூடாது. தி.மு.க. நம்மைக் கழற்றிவிடு மானால் அதன்பின்னர் அது குறித்து யோசிக்க லாம். ஒருவேளை தி.மு.க. நமக்கு உரிய சீட்டு களை ஒதுக்கி நமக்கான மரியாதை தருமானால், அப்போது கமலையும் அந்தக் கூட்டணிக்குக் கொண்டுவர முயலலாம்'ன்னு சொன்னார். காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் வெற்றி பெற்றுவிடக் கூடாதுன்னு பா.ஜ.க. நினைக்கிது. குறிப்பா தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட அது கரையேறிவிடக் கூடாதுன்னு செயல்படுது. உ.பி, ம.பி. போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு சரியான கூட்டணி இல்லை. தமிழ்நாட்டில் இருக்கிற கூட் டணியை விட்டுடக்கூடாதுன்னு நினைக்குது. தமிழக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் தத்தும், கமலுக்காக தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வராதுன்னு தெரிவிச்சிருக்கார். காங்கிரசுடன் கமலையும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் நடக்குது..''’
""அ.தி.மு.க. சைடில் எம்.பி. தேர்தல் மூவ் எப்படி இருக்குது?''’’’
""அங்க இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். போட்டிதான் விறுவிறுப்பா நடக்குது. நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி, ஜெ.’வுக்கு நிகரா தன்னை வரவேற்கணும்னு சொன்னதால், "காவிரி நாயகனே வருக! வருக!'ன்னு அங்கங்கே கட் அவுட் வச்சி அவரைப் புல்லரிக்க வச்சிருக்காங்க. போதாக்குறைக்கு எல்லா இடங்கள்லயும் ஓ.பி.எஸ். படத்தை சின்னதாவும் எடப்பாடி படத்தைப் பெருசாவும் வச்சி, அவரை குஷிப்படுத்தியிருக்காங்க. டி.டி.வி.தினகரன் எங்கெங்கே கொடி ஏத்தினாரோ அங்கெல்லாம் எடப்பாடியும் கொடியேத்தி, கட்சியினர் மத்தியில் தன் கொடியைப் பறக்கவிட்டிருக்காரு. இப்படி அவர், அலப்பறை செய்தாலும், கொஞ்ச நாளில் கட்சியே சசிகலா தலைமையில்தான் இயங்கப் போவுதுனு எம்.எல்.ஏ.க்கள் சிலரே பகிரங்கமா சொல்றாங்க.''’
""எந்த அடிப்படையில் சொல்றாங்க?''’
""டாக்டர் வெங்கடேசின் மாமனாரான பண்ணைவயல் பாஸ்கரன் உடல் நலம் சரியில்லாமல் ஓய்வெடுத்துக்கிட்டிருக்கார். அவரை விசா ரிக்கப்போன பட்டுக்கோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேகரிடம், "நீங்க ஏன் தினகரன் பக்கம் வரக்கூடாது'ன்னு பாஸ்கரன் கேட்க, "அடப்போங்கண்ணே, தினகரனை ஓரங்கட்டிட்டு, சசிகலா தலை மையில் ஒட்டுமொத்தக் கட்சியும் அணிவகுக்கப் போகுது'ன்னு சொல்லியிருக்காரு. வெளியில் நடக்கும் ஒவ்வோர் அசைவையும் சிறையில் இருந்தபடியே சசிகலா, தனது கரைவேட்டி உளவுப்படை மூலம் கவனிச்சிக்கிட்டே இருக்காராம்.''’
""தமிழக உளவுப்படையும் பல தகவல்களை முதல்வருக்கு நோட் போட்டு அனுப்புதாமே?''’
""ஆமாங்க தலைவரே, நெல்லை- தாமிரபரணி புனித நீராட்டு விழாவில் ஓ.பி.எஸ்., பா.ஜ.க. தமிழிசைன்னு அரசியல் பிரமுகர்கள் பலரும் நீராடினாங்க, மணல் மாஃபியா என வர் ணிக்கப்படும் சேகர் ரெட்டியின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தின ரும் அண்மையில் புனித நீராடலுக்காக நெல்லைக்கு வந்தாங்க. அவங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது, தி.மு.க. முன்னாள் அமைச்சரான கே.கே.எஸ். எஸ்.ஆர்.தானாம். இது குறித்து முதல்வர் எடப்பாடிக்கு நோட் போட்ட உளவுத்துறையினர், இது தி.மு.க. தலைமைக்குத் தெரியாமல் நடக்கலைன்னும் அதில் குறிப்பிட்டிருக்காம்.''’
""நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேம்பா. ரஜினி, தன் கட்சிப் பெயரை அறிவிக்கப் போறதா பர பரப்பு கிளம்பிய நிலையில், இப்போதைக்கு இல்லைன்னு சொல்லிட்டாரு. அவரோட பிறந்தநாளன்னைக்கு கட்சி ஆரம்பிக்கப்படும் தேதியை சொல்வாருன்னு ரஜினி அண் ணன் சத்யநாராயணா சொல்லியிருக்காரு. இப்ப கட்சி ஆரம்பிச்சி, எம்.பி. தேர் தல் நேரத்தில் பா.ஜ.க. வலையில் சிக்கிடக் கூடாதுன்னு கவனமா இருக் காராம் ரஜினி. அவரோட கவனமெல்லாம் மன்ற நிர்வாகிகள் விஷயத்தில் இருக்குது. ராக வேந்திரா மண்டபத்துக்கு அனுப்புற புகார் கள் சரியா போய் சேரமாட்டேங்குதுன்னு நிர்வாகிகள் நியமனம் தொடர்பான புகார்கள் ரஜினியின் மனைவி லதாவின் பெயருக்கு அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. எக்கச் சக்கமா புகார் குவிஞ்சதால, ’"பேட்ட' பட ஷூட் டிங்கை முடிச்சிட்டு சென்னை திரும்பிய ரஜினி, மன்றப் பிரமுகர்களான டாக்டர் இளவரசன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜசேகர், தூத்துக்குடி மா.செ. வான ஏ.ஜே.ஸ்டாலின் ஆகிய மூன்று பேரையும் 22-ந் தேதி ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச்சொல்லி, நிர்வாகிகள் நியமனம் தொடர் பான புகார்களை தோண்டித் துருவி விசாரிக்க ஆரம் பிச்சிட்டாரு.''’
_____________
இறுதிச் சுற்று!
சி.பி.ஐ. அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு!
சி.பி.ஐ.யின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவருக்குமிடையே நடக்கும் அதிகார மோதல்களை கடந்த மாதம் நக்கீரனில் விரிவாகப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்ச வழக்கை சி.பி.ஐ.யே பதிவு செய்திருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோஷி மீதான மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்க 5 கோடி பேரம் பேசப்பட்டு 3 கோடி பெற்றுள்ளனர் என்று ஐதராபாத் தொழிலதிபர் சதீஷ்பாபுசனா என்பவர் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் அஸ்தானா, சி.பி.ஐ., டி.எஸ்.பி., தேவேந்திரகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது டெல்லி சி.பி.ஐ.யின் 3-வது யூனிட்டில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அஸ்தானா உள்ளிட்ட 4 பேர் மீதும் லஞ்ச வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. மேலும், சதீஷ்பாபுசனாவின் வாக்குமூலமும் சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி முன்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டி.எஸ்.பி., தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு இயக்குநர் அஸ்தானா, சி.பி.ஐ.யின் உயர் பதவியிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார். சி.பி.ஐ.யை தன் பொறுப்பில் வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-இளையர்
மன்னிப்பு கேட்ட ஹெச்.ராஜா
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் விநாயகர் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்தபோது, ஆத்திரத்தில் காவல்துறையையும் நீதித்துறையையும் விமர்சித்துப் பேசினார் ஹெச்.ராஜா. இது சர்ச்சையாக எழுந்தபோது, “"வீடியோவில் இருப்பது என் குரலே இல்லை. யாரோ என் குரலை டப் பண்ணியிருக்கிறார்கள்' என மறுத்துப்பேசினார். இவ்விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் சி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு தானாக முன்வந்து ஹெச்.ராஜாமீது வழக்குப் பதிவுசெய்தது. இவ்வழக்கில் அக்டோபர் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா, "நீதிமன்றங்கள் குறித்து தான் பேசிய வார்த்தைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக'’ தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் எதிர்காலத்தில் இதுபோல் நேரக்கூடாதென எச்சரித்து வழக்கிலிருந்து விடுவித்தனர். தான் பேசாத வார்த்தைக்கு மன்னிப்பு கேட்கவும் ஒரு பெருந்தன்மை வேண்டும்தான் ராஜா சார்.
-க.சுப்பிரமணி