பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அரசு இல்லை என எடப்பாடி சொன்னது பா.ஜ.க.வை கொந்தளிக்க வைத்துள்ளது. அதனால் அடுத்த அரசியல் நகர்வாக தேர்தல் கமிஷனில் இருக்கும் இரட்டை இலை வழக்கை நோக்கி வேகமாகக் கொண்டு செல்கிறது பா.ஜ.க. அமித்ஷா அளித்த பிரஸ்மீட்டில் மிகத்தெளிவாகக் கூட்டணி ஆட்சி என்பதை சொல்கிறார். அதைத் தொடர்ந்து அவரிடம் எத்தனை பா.ஜ.க. மந்திரிகள் கூட்டணி மந்திரிசபையில் இடம் பெறுவார்கள் என்கிற கேள்வி எழுப்பப்படு கிறது. ‘அதை பின்னர் முடிவு செய்து கொள்ள லாம்’ என்று சொல்கிறார் அமித்ஷா. இந்த பிரஸ் மீட் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. 77ல் தோற்ற தி.மு.க., அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைப்போம் எனச் சொன்ன காங்கிரசுக்கு 117 தொகுதியை ஒதுக்கியது. அந்த கூட்டணி வெற்றிபெற்று அமையும் அரசு கூட்டணி அரசு என தி.மு.க.வும், காங்கிரசும் அறிவித்தன. ஆனால் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதற்குப்பிறகு கூட்டணி அரசு என்கிற பேச்சு தமிழகத்தில் எழவில்லை. இந்தியா முழு வதும் கூட்டணி ஆட்சிகள் நடந்த போதிலும் அது தமிழகத்தில் நுழையாமல் இரு திராவிடக் கட்சி களும் பார்த்துக் கொண்டன.
கூட்டணி அரசு என்கிற கோஷத்தை எதிர்த்து எம்.ஜி.ஆர். காலத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க., அமித்ஷா கூட்டணி அரசு என்று அறிவித்ததும் அதைக் கேட்டுக்கொண்டு எடப்பாடி மவுனமாக உட்கார்ந்திருந்ததும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத் தியது. எல்லாவற்றையும் பேசி முடிவெடுத்து தான் அறிவிக்கிறார்கள் என நினைத்த அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டணி விசயத்தில் பொங்கி எழுந்தார்கள். காங்கிரஸையே 1967க்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற வைக்காத தமிழகம், பா.ஜ.க.வை அமைச்சரவையில் இடம்பெற வைப்பார்களா? கூட்டணி ஆட்சி என்கிற ஒரு விசயத்தை வைத்து அ.தி.மு.க.வை மக்கள் தோல்வி யடையச் செய்வார்கள் என்கிற கருத்து அரசியல் தெரிந்த அனைவ ராலும் எடப்பாடிக்கு தெரிவிக்கப் பட்டது. இந்த சிக்கல் பெரிய சிக்கலாகிவிடும் என எடப்பாடி பயந்தார். கருவிலேயே குறை யுடைய குழந்தை யாக பிறந்திருக் கும் இந்த கூட்டணியில் உள்ள குறையை சரிசெய்ய கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை என எடப்பாடி மறுதலித்தார். எடப்பாடியின் இந்த மறுதலிப்பு பா.ஜ.க. வட்டாரங்களில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ஜ.க.வை நம்பி வந்த ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா ஆகியோருக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை. ‘அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிட மாட் டோம்’ என அமித்ஷா அறிவித்தது பா.ஜ.க.வினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அதை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும்போது பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி அரசு என்பதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தக் கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு என்ன லாபம் என்கிற விவாதம் தமிழக பா.ஜ.க.வில் எழுந்தது.
ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா உட்பட அனைவரையும் அ.தி.மு.க.வில் சேர்க்காவிட்டால் இந்த கூட்டணி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தோல்வியடையும். இந்த பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், "எடப்பாடி, அ.தி.மு.க.வை கொங்கு வேளாளர் கட்சி ஆக்கி விட்டார்'’என்கிற கோபத்திலிருக்கிறார்கள். அந்த கோபத்தை பா.ஜ.க.வுக்கு சாதகமாக நிறைவு செய்ய முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக பா.ஜ.க. கொண்டுவந்திருக்கிறது. ஆனால் அது போதாது. இந்நிலையில் கூட்டணி அரசு என்று சொன்னால்தான் முக்குலத்தோர் சமுதாயமும் இடம்பெறும் அரசு என்ற அர்த்தம் வரும். அதற்கு வாய்ப்பில்லாமல் எடப்பாடி பேசுகிறார். ‘காற்றே இல்லாத இடத்தில் மெழுகுவர்த்தி எப்படி எரியும்’ என பா.ஜ.க.வினர் எடப்பாடிக்கு எதிராக மத்திய தலைமைக்கு ரிப்போர்ட்டுகளை அனுப்பி வருகிறார்கள். பா.ஜ.க. மேலிடம் இதுவரை நம்பியிருந்த பா.ஜ.க.வுக்கு "அதிக சீட் அ.தி.மு.க. கொடுக்கும் அதிலே நாம் வெற்றியடையலாம்' என்கிற கான்செப்ட் முழுவதுமாக தோல்வியடையும். எடப்பாடி கொடுப்பதை வாங்கி வாயை மூடிக்கொண்டு போட்டியிட வேண்டும் என்கிற நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்படுவதை டெல்லி மேலிடமும் தமிழக பா.ஜ.க.வும் ஏற்கவில்லை.
“குறைந்தபட்சம் 100 தொகுதிகளை எதிர்பார்க்கும் பா.ஜ.க., சொற்ப தொகுதிகளுக்கு தன்னைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் எடப்பாடியை கூட்டணிக்கு வரவைத்த ‘இரட்டை இலை’ வழக்கு வேகம் பெறுகிறது. ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா போன்றவர்கள் இடம்பெறும் அந்த வழக்கை துருப்புச் சீட்டாக வைத்து அ.தி.மு.க.வின் ஆட்சியில் பங்கு பெற பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது என்பதோடு, நித்திய கண்டம் பூரண ஆயுசு என ஏகப்பட்ட சோதனைகளுடன் துவங்கியிருக்கும் பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு எடப்பாடியே முடிவு கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எடப்பாடியின் அசைவுகளுக்கு எப்படி தடைபோடுவது என பா.ஜ.க. மேலிடம் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்.