மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காவூரணியில் அமைந் துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்றுசேர்ந்து கூட்டமாகத் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஒரு மாணவரை சக மாண வர்கள் நிர்வாணப்படுத்தி காலணியால் தாக்கி துன்புறுத்துவது போன்ற அந்த வீடியோ காட்சி, மாணவர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த ஐ.டி.ஐ.க்குச் சென்றோம். முதல்வர் அசோகனிடம் பேசினோம். அவர் கூறுகையில், "பள்ளியில் இடைநிற்றல் ஆன மாண வர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மீண்டும் கல்வி வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தொழிற்கல்வி வழங்கும் நோக்கில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், செக்காவூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ.யில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இங்கு சேர்க்கப் பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி கற்றுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி இரவு 10 மணிக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீடியோ வைரலான பின்புதான் எங்களுக்கே தெரிய வந்தது. விடுதிக் காப் பாளர் பாலசுப்ரமணி யிடம் இதுகுறித்து விசாரணை செய்தோம். பாதிக்கப்பட்ட மாணவ ரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்களுக்கு எதிராக ராகிங் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலசுப்பிர மணியன் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
அரசு தொழிற்கல்லூரி இருக்கும் இடம் வேறு. மாணவர் விடுதி இருக்கும் இடம் வேறு. இந்த சம்பவம் நடந்தபிறகு அந்தசம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாணவனும் சேர்ந்தேதான் பள்ளிக்கு வந்தார்கள். அதே விடுதியில்தான் தங்கியும் இருந்துள்ளார்கள். ஒரே அறையில் தங்கிப் பயின்றுவருகின்ற மற்றொரு மாணவன் தனது செல்போனில் காணொலியாகப் பதிவிட்டு அதைப் பாதிக்கப்பட்ட மாணவன் தந்தையிடம் காண்பித்துள்ளதாகக் கூறப்படு கிறது. இதனடிப்படையில்தான் மாணவனது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது''’ என்றார்.
அந்த விடுதி, அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. அங்கிருந்த பள்ளி ஆசிரியர், “அரசு பள்ளி வளாகத்திற்குள் தொழில்நுட்ப ஐ.டி.ஐ. மாணவர்களின் விடுதியை வைத்ததே தவறு. அங்கு படிக்கும் மாணவர்கள், பள்ளியில் இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்றுவிப்பதற்காகச் செயல்படுகிறது. அந்த மாணவர்களின் தங்கும் விடுதி இந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் இருக்கிறது. எல்லாத் தரப்பு மாணவர்களும் இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை சாதியரீதியாக கொண்டுசெல்லப் பார்க்கிறார்கள். அது தவறு. வீடியோவை நன்றாகப் பாருங்கள். அந்தப் பையன் குளித்துவிட்டு துண்டோடு வருகிறான். துண்டை உருவுகிறார்கள். டேய், டவுசரைப் போட்டுவருகிறேன் என்கிறார். அவர்களிடம் விசாரித்த போது, ‘"விளையாட்டாகச் செய்தோம். எந்த உள்நோக்க மும் இல்லை. அடுத்தநாள் எல்லோரும் சேர்ந்துதான் கபடி விளையாண் டோம். இல்லையென்றால் வார்டனிடமோ அல்லது முதல்வரிடமோ அவன் சொல்லி யிருப்பான்'’என்றனர்.
நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவன் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த பையன். அவனை சுற்றியிருந்த மாணவர்களில் ஒருவர் மட்டுமே பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த மாணவன். மற்றவர்கள் பாதிக்கப்பட்ட மாணவனின் வகுப்பைச் சேர்ந்தவர்களே. அந்த மாணவரை அடிப்பதும் அதே வகுப்பைச் சேர்ந்த மாணவர்தான். இதில் எந்த சாதிய வன்கொடுமையும் வருவதாகத் தெரியவில்லை. ஆனால் ராகிங் செய்தது மனித உரிமை மீறல்தான். இங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கூல் லிப் போதை, நூற்கண்டு கஞ்சா உபயோகம் இருந்து பலமுறை சஸ்பெண்ட் நடந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 1,125 ஐ.டி.ஐ. தொழில்நுட்பப் பள்ளிகளின் தங்கும் விடுதிகள் உள்ளன. அதில் 60% விடுதிகளில் சமையல்காரர் களே இல்லை. 35% விடுதிகளில் வார்டன்கள் கிடையாது. 80% விடுதிகளில் வாட்ச்மேன்கள் கிடையாது. இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும் பாலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள். இடை நிற்றல் காரணமாக படிக்க வந்தவர்கள். அதற்கேற்ப கட்டமைப்பும் நிர்வாகமும் இருந்தால்தான் அந்த மாண வர்களை ஒழுங்குபடுத்தி நல்வழிக்குக் கொண்டுவர முடியும். அரசின் நோக்கம் சரியாக இருந்தாலும் மாண வர்கள் தங்கி கல்விகற்கும் விடுதிகளில் போதுமான பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன''’என்றார் புகாராக.
"நான் பணியில் சரியாகத்தான் செயல் படுகிறேன். இந்த சம்பவம் இரவு நடந்துள்ளது. அதுவும் நான்கு நாட்களுக்குப் பிறகு மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்த பிறகுதான் தெரிந்தது. சம்பந்தப்பட்ட மாணவனோ, பிற மாணவர்களோ எந்தவித புகாரும் தெரிவிக்காமல் எனக்கு எப்படி தெரியும்?''’என்றார் சஸ்பெண்டான வார்டன்.
செக்காவூரணி காவல் நிலைய ஆய்வாளர் திலகராணியோ, "பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து மூன்று மாணவர்களும் 18 வயதிற்குகீழ் வருவதால் புகாரை கூர்நோக்கு இல்ல மாவட்ட நீதிபதிக்கு அனுப்பியுள்ளோம். இதன் உண்மைத்தன்மையை விசாரித்து அதற்கான தண்டனை விவரங்களை அறிவிப்பார்''’ என்று முடித்துக்கொண்டார்.