இந்தியா முழுக்க கோலோச்சிய காங்கிரஸ் கட்சி, இன்று ஆட்சியிலிருக்கும் ஒரு சில மாநிலங்களிலும் வேகமாக தன்பிடியை இழந்துவருகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்குமான மோதல் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
2013 தேர்தலில் வெறும் 21 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ், 2018-ல் ராஜஸ்தான் மாநிலத்துக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 200 இடங்களில் 107 இடங்களை வென்று ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் சச்சின் பைலட்டின் பங்கு அளப்பரியது. இதனால் இயல்பாகவே அடுத்த முதல்வராக சச்சின் பைலட்தான் வருவாரென்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதற்குமாறாக, காங்கிரஸ் தலைமை, அனுபவத்திலும் வயதிலும் மூத்த அசோக் கெலாட்டை முதல்வராகத் தேர்வுசெய்தது. துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்ட சச்சின் பைலட்டுக்கு அவர் எதிர் பார்த்த துறையையும் கெலாட் விட்டுத்தரவில்லை. அப்போதி லிருந்தே இருவருக்கும் உரசல்கள்தான்.
இந்நிலையில், பா.ஜ.க. அரசு மத்தியப்பிரதேச அரசைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அரசையும் கவிழ்ப் பதற்கு குதிரைபேர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக, அசோக் கெலாட் குற்றம்சுமத்திப் பேசத்தொடங்கினார். விரைவிலேயே அசோக் கெலாட்டின் கைவசமுள்ள காவல்துறை, இந்தக் குதிரைபேர பின்னணியில் தொடர்பிருப்பதாக சச்சின் பைலட், அரசுத் தலைமை கொறடா உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தன்னை திட்டமிட்டு முதல்வர் அவமானப்படுத்துவதாக நினைத்த பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பைலட் அறிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைமை அவசர அவசரமாக சமாதான நடவடிக்கையில் இறங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய்மக்கான், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோரை அனுப்பியது. மேலும் பல காங்கிரஸ் தலைவர்களும் பைலட்டை சமாதானப்படுத்த முயற்சித்தனர். எனினும் பலனில்லை. அதேசமயம் ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் வீட்டில் வைத்து நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கெலாட்டுக்கு ஆதரவாக 106 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக அறிவிப்பு வெளியானது. அவர்கள் அனைவரும் சொகுசுவிடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காங்கிரஸ் மேலிடத்தின் சமாதான முயற்சிகள் பலிக்காத நிலையில் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பொறுப்பும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவு அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மேலும் நெருக்கடி உருவாகியுள்ளது.
பல மாநிலங்களிலும் காங்கிரசில் தலைமைப் பொறுப்புக்கு போட்டியும் மோதலும் தொடர்கிறது. மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்துக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் ஏற்பட்ட தலைமைப் பொறுப்புக்கான மோதல்தான், அவர் பா.ஜ.க.வுக் குத் தாவ வழிவகுத்தது.
நீண்ட காலத்துக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கும் மாநிலம் பஞ்சாப். கேப்டன் அமர்நாத் சிங் முதல்வராக தாக்குப் பிடித்தபோதும் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பிரதாப்சிங் பஜ்வா, அமர்நாத்சிங்குக்கு தினமொரு தலைவலியைத் தந்துகொண்டிருக்கிறார். அப்படியே ஆம் ஆத்மியிலிருந்து காங்கிரஸுக்கு இடம்பெயர்ந்த நவ்ஜோத் சித்துவும் எதிர்க்கட்சிக்காரரைப்போல குடைச்சலைத் தந்துகொண்டிருக்கிறார்.
அகாலிதளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி யின் பிடியிலிருந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் எதிர்காலத்திலும் ஆட்சியில் தொடரவேண்டுமானால் எத்தகைய ஒற்றுமை நிலவவேண்டுமோ அதற்கு எதிர்மாறான நிலைமையே மாநிலத்தில் நிலவுகிறது என்கிறார்கள் கட்சியின் நலம்விரும்பும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.
ஆட்சியில் இல்லாத ஹரியாணாவிலும் உள்கட்சி மோதல்தான். சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், ஹரியானாவின் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கும் அசோக் தன்வாருக்குமான அரசியல் மல்யுத்தத்தில் பூபேந்தர்சிங் ஜெயிக்க, அசோக் தன்வார் வெளியேற்றப்பட்டார். எனினும் இந்த வெளியேற்றம் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் ஆட்சியமைக்கும் வாய்ப்பை கணிசமாகக் குறைத்தது. கட்சியில் பூபேந்தர் சிங்கின் கையே இப்போதும் ஓங்கியிருக்கிறது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட ரந்தீப் சுர்ஜீவாலாவை ராகுல்காந்தியே தேர்வுசெய்தபோதும், அதை மறுத்து தன் மகன் தீபேந்தரை நிறுத்தி தன் செல்வாக்கை காட்டினார்.
ஹிமாச்சலபிரதேசத்திலும் காங்கிரஸ் பெருந்தலைகளான வீர்பத்திர சிங், கௌல்சிங், குல்தீப் சிங் ரத்தோர் தலைமையில் நடக்கும் அரசியல் பீட போட்டிகளுக்கு பிறகுதான் எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் அரசியல் நடக்கிறது.
பெரும்பான்மையில்லாத பாஜ.க., கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கிறதென்றால் காங்கிரஸுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குமான புரிதலின்மை எவ்வளவு காரணமோ அதேயளவு காங்கிரஸுக்குள் நடந்த தலைமைப் போட்டிகளும் மற்றொரு காரணம். தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவிலும் காங்கிரஸின் நிலையைச் சொல்லவேண்டியதில்லை. தற் போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிர ஸின் தவறுகளால், தனிக்கட்சித் தலைவராகி முதல்வராகி விட்டார். மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வின் குயுக்தியான அரசியலைச் சமாளிக்கிற, மாநிலத் தலைமைகளுக்கு உறுதியான, தெளிவான கட்டளைகளைப் பிறப்பிக்கிற, வலிமையான அகில இந்திய தலைமை அமையாதவரையில் காங்கிரஸிற்கான எதிர்காலம் மங்கலாகவே இருக்கும்.
- க. சுப்பிரமணியன்