மிழக அரசுக்கும் முதல்வருக்கும் பொருளாதார ஆலோசனை வழங்க சர்வதேச பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமெரிக்காவின் எஸ்தர் டஃப்லோ, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் ட்ரீஸ், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அர்விந்த் சுப்ரமணியன், முன்னாள் நிதிச் செயலாளர் டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் யார்? என்ன சாதித்துள்ளார்கள்?

stalinteam

எஸ்தர் டஃப்லோ

Advertisment

பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ பிறந்தது பிரான்ஸ்- குடியேறியது அமெரிக்கா. 2019-ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, மைக்கேல் கிரிமருடன் பகிர்ந்துகொண்டவர். இந்தியப் பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு வென்றவருமான அபிஜித் பானர்ஜியின் மனைவிதான் இந்த எஸ்தர் டஃப்லோ.

1997 முதலே இந்தியா மீதும் இந்தியப் பொருளாதாரம் மீதும் ஆர்வம்காட்டி வருபவர். பாவர்ட்டி ஆக்ஷன் லேப் என்னும் ஏழ்மையை அகற்றும் அமைப்பின் சக நிறுவனர் ஆவார். இந்த அமைப்பு உலகம் முழுவதும் ஏழ்மையை அகற்றுவதற்கான பொருளாதாரச் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளில் எஸ்தரின் கருத்துகள் மிக அதிகளவில் எடுத்தாளப்படுவது அவரது பெருமைக்குச் சான்றாகும். இந்தியாவின் விளிம்பு நிலை மனிதர்களைக் குறித்து ஆய்வு செய்தவர் என்பதால், இந்தியர்களைக் குறித்து எஸ்தருக்கு நன்றாகவே தெரியுமென்பது ஒரு ப்ளஸ்.

Advertisment

கொரோனா முதல் அலையின்போது, திடீர் ஊரடங்கால் தேசமெங்கும் கால்நடையாகவே ஊர் திரும்பிய மக்களைக் கண்டு மோடி மீது விமர்சனங்களை முன்வைத்தவர் எஸ்தர்.

ஜீன் ட்ரீஸ்

இவரும் இந்தியாவுக்கு அயலானவர் அல்ல. பெல்ஜியரான இவர் 1979 முதல் இந்தியாவிலே வசித்து இந்தியக் குடியுரிமையும் பெற்றிருக்கிறார். திட்டக் கமிஷனிலும் பங்காற்றியவர். பசி, பஞ்சம், கல்வி, பாலின சமத்துவம், குழந்தைகள் நலம், பள்ளிக்கூடத்திலே மாணவர்களுக்கு உணவளிப்பது தொடர்புடைய பல்வேறு பொருளாதார விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர். இந்திய கிராமங்களில் தங்கி அவர்களது ஏழ்மையைப் புரிந்துகொண்டு அவர்களது ஏழ்மையை அகற்ற ஆர்வம் காட்டிவருபவர் ஜீன் ட்ரீஸ்.

நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்யா சென்னுடன் இணைந்து சில புத்தகங்களை எழுதியவர்.

ரகுராம் ராஜன்

இந்தியப் பொருளாதார அறிஞரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரகுராம் ராஜனின் பெருமைகளை இரண்டொரு பத்திகளில் சொல்லி முடித்துவிட முடியாது. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் கணித்த யூகங்கள் யதார்த்தமானபோது, உலக கவனத்தைப் பெற்றார்.

சர்வதேச நாணய நிதியத் தலைவர், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு மதிப்புவாய்ந்த பதவிகளை வகித்திருக்கிறார். மன்மோகன்சிங்கின் பதவிக் காலத்தில், ரகுராம் ராஜனின் சிறப்பான ஆலோசனைகள் பல செயல்படுத்தப்பட்டன. இந்திய ரிசர்வ் பேங்கின் ஆளுநராகவும் தனது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். எனினும், மோடி அரசின் பணமதிப்பிழப்பு திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியால், நாசூக்காக தனது பொறுப்புகளிலிருந்து விலகிக்கொண்டவர்.

அர்விந்த் சுப்ரமணியம்

இவரும் தமிழர்தான். ரகுராம் ராஜனுக்கு அடுத்து இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை வகித்தவர். இந்திய, சீன பொருளாதார விவகாரங்களில் நிபுணத்துவம் உடையவர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் உதவி இயக்குநராகப் பதவி வகித்தவர். மோடி அரசுடன் எழுந்த உரசல், முரண்பாடுகள் காரணமாக, தனது பொறுப்பி லிருந்து விலகிக்கொண்டவர்.

100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக, அரவிந்த் சுப்பிரமணியத்தை ஃபாரின் பாலிசி இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரியை எவ்விதம் எளிமை யாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் இவர் எழுதியுள்ளார். உலக அளவில் பிரபலமான பொருளாதார ஆலோசகராக இருந்தபோதும், இவரது யோசனையை கடைப்பிடிக்கத்தான் மத்திய அரசுக்கு ஆர்வமில்லை.

எஸ். நாராயண்

ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.நாராயண், மத்திய அரசின் முன்னாள் நிதிச் செயலாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர். "திராவிட ஆண்டு கள்: தமிழ்நாட்டில் அரசியலும் நலத்திட்டங்களும்' என்ற தலைப்பில் நூல் எழுதியவர். தற்சமயம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பிரபலமான பொருளாதாரப் பத்திரிகைகளில் தற்போதும் கட்டுரைகள் எழுதிவருபவர்.

சர்வதேசக் கவனம்பெற்ற ஐந்து பொருளாதார நிபுணர்களின் குழுவொன்றின் நம்பிக்கையை யும் ஆலோசனையையும் தமிழக அரசு பெறுவதென்பது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் நன்மை பயப்பதாகும். கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை இந்நிபுணர்களின் ஆலோசனைகள் காப்பாற்றுகிறதா? பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திடுகிறதா… என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.