ன் கதையைத் திருடித்தான் இயக்குநர் ஷங்கர், "எந்திரன்' திரைப்படத்தை எடுத்திருக்கிறார்'’என்று நக்கீரன் முதன்மைத் துணைஆசிரியரும் எழுத்தாளருமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த காப்பிரைட் வழக்கில், "குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருக்கிறது'’-என தீர்ப்பு வழங்கி, கோலிவுட்டையும் பாலிவுட்டையும் ஒருசேர பரபரப்பாக்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

இதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுவரும் "எந்திரன்' கதைத் திருட்டு வழக்கு, இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

sa

"நக்கீரன்' குழுமத்தைச் சேர்ந்த "இனிய உதயம்' இதழில், 23 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1996 ஏப்ரல் மாதம், ஆரூர் தமிழ்நாடன் "ஜூகிபா'’என்ற ஒரு சிறுகதையை எழுதியிருந்தார். ரோபாட்டுக்கு மனித உணர்வுகளை உண்டாக்கினால், அது என்ன மாதிரியான உணர்வுச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் அந்தக் கதையின் கரு. இந்தக் கதை வெளியானபோதே, பலராலும் பாராட்டப்பட்டது. இதே கதை, 2007-ல் ’"திக் திக் தீபிகா'’என்ற அவரது தொகுப்பு நூலிலும் பிரசுரமானது. (சிறுகதையின் சில பகுதிகளைப் படித்தாலே, அந்தக் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்பதை வாசகர்கள் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்) ஒரு விஞ்ஞானியே தன் அனுபவத்தைச் சொல்வதுபோல் எழுதப்பட்ட அந்தக் கதையின் தொடக்கப் பகுதி இதுதான்...

Advertisment

"ஜூகிபா'

எனது நான்கு வருடங்களை செலவிட்டு உழைத்ததில்.. இதோ என் எதிரே உயிர்த்து நிற்கிறது "ஜூகிபா'.

இது மானுட சரித்திரத்தின் உச்சபட்ச சாதனை.

Advertisment

மூளையைக் கசக்கிக் கசக்கி நான் உருவாக்கிய கம்ப்யூட்டர் பார்முலாக்களுக்கு கண் முன் பலன்.

sssஜூகிபாவிற்காக தலையில் நிறைய முடி உதிர்த்திருக்கிறேன். உணவு உறக்கத்தை தியாகம் செய்திருக்கிறேன். என் ப்ரியமான காதல் பொழுதுகளைக் கூட வருஷக் கணக்கில் ஒத்தி வைத்திருக்கிறேன்.

என் கன்னப் பிரதேசத்து ரோமப்பயிரை (தாடி) வழித்தெறியக்கூட அவகாசமின்றி நான் நடத்திய விஞ்ஞான வேள்விக்கு இதோ கம்ப்யூட்டர் வரமாய் "ஜூகிபா' -என்று அந்த விஞ்ஞானி தனது முயற்சியையும் உழைப்பையும் சொல்கிறான். மேலும், "ஜூகிபா' ஒரு அதி அற்புத கம்ப்யூட்டர் ரோபாட். உருளும் நியான் விழிகளால் பார்க்கும் காட்சிகளை படம் படமாய் தனக்குள் பதிவு செய்துகொள்ளும். எலெக்ட்ரானிக் சிந்தசைசர் மூலம், கேட்கும் கேள்விகளுக்கு டக்டக்கென மெட்டாலிக் வாய்ஸில் பதில் சொல்லும்.

ஆதாம் காலம் தொடங்கி, இந்த நிமிஷத்து உலகம்வரை அத்தனை தகவல்களையும் தன் மெமரி கிடங்கில் சேமித்து வைத்திருக்கும். அதோடு, எந்திர மூட்டசைத்து அதிராமல் நடக்கும். தன் உலோகக் கைகளை கண்டபடி, கண்ட திசைகளிலும் சுழற்றி, கொடுத்த வேலையைக் கச்சிதமாய்ச் செய்யும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக சூழலைப் புரிந்துகொள்ளும் உணர்வுத் திறனும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து இயங்கும் சுய செயல்திறனும் "ஜூகிபா'விற்குப் புகட்டப்பட்டிருக்கிறது.

"என் "ஜூகிபா' ஒரு மனிதன். ஏறத்தாழ 95 விழுக்காட்டு மனிதன். பிள்ளைப் பேறு என்ற சங்கதிக்கும் ஏற்பாடு செய்துவிட்டால் நூற்றுக்கு நூறு மனிதனாய் மாறிவிடும்.

பார்வைக்கு ஒரு மனிதனைப் போலவே புறத்தோற்றத்தையும் விஷேச ஃபைபர் கொண்டு வடிவமைத்துவிட்டேன்'’-என்று அந்த ரோபாட்டின் திறமையைச் சொல்லி அந்தக் கதையின் நாயகனான விஞ்ஞானி வியப்பை ஏற்படுத்துவான்.

ra

"அதோடு ’இந்த "ஜூகிபா' எனக்கு வைரப் புதையல்! இனி அரசாங்கங்கள் என் அறிவுக்கு விலை பேசும். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், விஞ்ஞான கேந்திரங்கள், பல்கலைக்கழகங்கள் என்னைத் தேடிவந்து விருதுகளையும் பட்டங்களையும் வழங்கும். இந்த வருட நோபல் பரிசுகூட எந்த சிபாரிசும் இன்றி என் விலாசத்தை விசாரிக்கும்.

சிரிக்க -அழ -மிரட்ட -நெகிழ என சகலத்தையும் என் "ஜூகிபா'விற்குப் போதித்துவிட்டேன்' -என்று அந்த "ஜூகிபா' கதை நகர்கிறது.

பல வருட உழைப்பில், மனித உணர்வை ஊட்டி அந்த விஞ்ஞானி உருவாக்கிய அந்த ரோபாட்டிடம், அந்த விஞ்ஞானி தன் காதலி ஜோசஃபினை அறிமுகப்படுத்துவான். அவளின் அழகில் மயங்கிய அந்த ரோபாட், அவள் மீது காதல் கொள்கிறது. அவளைப் பற்றி கவிதைகளை சொல்லிப் புலம்புகிறது. அவளைத் தான் விரும்புவதாகவும் அவள் தனக்கு வேண்டும் என்றும், அவள் இல்லாமல் தன்னால் இருக்கமுடியாது என்றும் அந்த விஞ்ஞானியிடமே அது சொல்கிறது. உடனே விஞ்ஞானி தான் உருவாக்கிய அந்த ரோபாட் மீது கோபம் கொள்கிறான்.

""அளந்து பேசு "ஜூகிபா', நீ ஒரு ரோபாட். ஜோசஃபின் என்னைப் போல் சதையும் ரத்தமும் உள்ள மனுஷி''’ என்று அதற்கு கோபத்தோடு அறிவுறுத்தும் விஞ்ஞானி, ‘""முட்டாள் ரோபாட்டே. அவளைப் பத்தி நீ இனிமே பேசக்கூடாது. உடனே உன் ரூமுக்குப் போ.. யூ கெட் லாஸ்ட்''’-என்று அதன் மீது வெறுப்பாக திட்டுவான்.

-கடைசியில் விஞ்ஞானியின் காதலியை மறக்க முடியாத அந்த ரோபாட் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும். இதுதான் "ஜூகிபா' கதை. இந்தக் கதையில் வருவது போல அப்படியே காப்பியடித்து, ரோபோவின் உருவாக்கத்தில் தொடங்கி, ரோபோ காதல் கொள்வதில் வளர்ந்து, ரோபோவின் தற்கொலையில் (டிஸ்மேண்டில்) முடிகிறது இயக்குநர் ஷங்கரின் எந்திரன். இடையில் "ஜூகிபா'வுக்கு சிரிக்கவும் மிரட்டவும் அழவும் நெகிழவும் தெரியும். ஜூகிபாவின் விஞ்ஞானி தன் ரோபாட் பற்றி சொன்னதைக் கொண்டு, இவற்றின் கலவையாக வில்லத்தன ரோபோக்களையும் எந்திரன் படத்தில் உருவாக்கிக் காட்டியிருப்பார் ஷங்கர்.

அச்சு அசல் காப்பி

மிகுந்த பொருட் செலவில் மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட "எந்திரன்'’திரைப்படம் 2010 அக்டோபரில் ரிலீஸான நிலையில், அந்தப் படத்தைப் பார்த்த எழுத்தாளர் தமிழ்நாடனின் வாசகர்கள் கடிதம் மூலம் தெரிவித்ததை அடுத்து, "எந்திரன்' கதையும் தனது "ஜூகிபா' கதையும் ஒன்றாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே இனிய உதயத்தின் பதிப்பாளரும் ஆசிரியருமான நக்கீரன்கோபாலிடம், இந்தக் கதைக்கான காப்புரிமையின் பலன்களை பெறுவதற்கு அனுமதி பெற்று, படத்தின் இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் இது தொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் தமிழ்நாடன். அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வராததால், தன் படத்தின் கதையைத் திருடி மோசடி செய்த அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

dad

கதையை வாங்கிப் படித்து பார்த்த காவல்துறை அதிகாரிகள்..’""ஆமாம் இதே கதைதான் "எந்திரன்'’என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதோடு..’""ஆனால் எந்த வழக்கையும் அவர்கள் பதிவு செய்யாமல் தாமதப்படுத்தினர். இதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது காப்புரிமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு கிரிமினல் வழக்கைத் தொடர்ந்தார். அதேசமயம், இயக்குநரும் தயாரிப்பாளரும் தனக்கு நஷ்டஈடாக ஒருகோடி ரூபாய் தரவேண்டும் என்றும் "எந்திரன்' திரைப்படத்தின் கதை எனக்குச் சொந்தமானது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கையும் தொடர்ந்தார்.

எழும்பூர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2011-ல் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்ட இருவரும் உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் தங்கள் மீது தொடுக்கப்பட்டகிரிமினல் வழக்கு சட்டப்படி செல்லத்தக்கதல்ல எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் விசாரித்து எழும்பூர் நீதிமன்ற வழக்கை இடைக்கால தடை செய்து உத்தரவிட்டது.

இழுத்தடித்த இயக்குநர் - தயாரிப்பாளர்!

சக்தி படைத்த செல்வாக்கான திரைப்புள்ளிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்குகளின்போது, பல்வேறு சங்கடங்களையும் போராட்டங்களையும் எழுத்தாளர் தமிழ்நாடன் சந்தித்தார். அவரை மனரீதியாக நிலைகுலைய வைக்கும் முயற்சிகளும் நடந்தன.

எனினும் தனது வழக்கறிஞர்கள் சொன்னபடி தைரியத்தோடு விசாரணைகளை அவர் எதிர்கொண்டார். அதேபோல் இயக்குநர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாமல், மூலம் வழக்கை இழுத்தடித்து வந்தனர்.

உயர்நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட சிவில் வழக்கில் இயக்குநர் தரப்பும் தயாரிப்பாளர் தரப்பும் சட்டத்திற்குட்பட்ட கால வரையறைக்குள் பதிலுரை தாக்கல் செய்யாமல் வழக்கை அலட்சியப்படுத்தியதால், 2016 செப்டம்பரில், கலாநிதி மாறன் தரப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தது உயர்நீதிமன்றம். அதேபோல், இயக்குநர் ஷங்கருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இதே காரணத்துக்காக 2018, செப்டம்பரில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதன் பின்னர் நடந்த சாட்சிகளின் விசாரணையின்போது, எழுத்தாளர் தமிழ்நாடன் ஆஜராகி, "ஜூகிபா' கதையின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட படம்தான் "எந்திரன்' என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தார். அடுத்து இயக்குநர் ஷங்கர் தரப்பும் தயாரிப்பாளர் தரப்பும் எழுத்தாளர் தமிழ்நாடனிடம் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் குறுக்கு விசாரணையும் மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து விசாரணைக்கு உட்படவேண்டிய இயக்குநர் ஷங்கர் போக்குகாட்டத் தொடங்கினார். நீதிமன்றத்தின் கறாரான உத்தரவுக்கு பின்னர், தங்களிடம் விசாரிக்க எந்த சாட்சியும் இல்லை என்று தயாரிப்பு தரப்பு ஒதுங்கிக்கொள்ள, இயக்குநர் ஷங்கர் தரப்போ, தனக்குப் பதில் தன் உதவியாளர் ஒருவரிடம் விசாரிக்கும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இதை எழுத்தாளர் தரப்பு வழக்கறிஞர்கள் "இது சட்டத்திற்குப் புறம்பானது' என எதிர்ப்புத் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரணைக்கு வரவேண்டும் என்றும் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து மறுபடியும் வாய்தாமேல் வாய்தாவாக வாங்கத் தொடங்கியது இயக்குநர் ஷங்கர் தரப்பு. ஆனால், "சிவில் வழக்கில் இயக்குநர் ஷங்கருக்குப் பதிலாக உதவியாளரை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஷங்கர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்' என்று தேதி குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இறுதியில் ஷங்கர் தரப்பும் தங்களிடம் விசாரிக்க எந்த சாட்சியும் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிவிக்க... தற்போது அந்த வழக்கு வழக்கறிஞர்களின் இறுதி வாதத்திற்காக நிலுவையில் உள்ளது.

இதனிடையே கடந்த 9 வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்கை ரத்து செய்யும் மனு, மீண்டும் நீதிபதி திரு.புகழேந்தி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீண்டகாலமாக தடை தொடர்ந்துகொண்டிருப்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டு வழக்கறிஞர் வாதத்திற்காக தேதி குறிக்கப்பட்டது.

இயக்குநருக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் சீனியர் வழக்கறிஞர்கள் வில்சன், பி.எஸ்.ராமன் ஆகிய பிரபல வழக்கறிஞர்கள் கொண்ட பெரும் டீமே ஆஜராகி வாதாடியது. தமிழ்நாடனுக்காக தமிழக அரசின் முன்னாள் குற்றவியல் வழக்கறிஞர் குமரேசன், வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், கே.இளங்கோவன், பி.சதீஷ்குமார், எல்.சிவகுமார் உள்ளிட்டவர்கள் சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டனர்.

விவாதத்தின்போது "ஜூகிபா' என்ற கதைக்கும் "எந்திரன்' திரைப்படத்திற்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் காப்புரிமை சட்டப் பிரிவின்படி கிரிமினல் வழக்கும் சிவில் வழக்கும் ஒரே நேரத்தில் நடைபெறலாம் என்றும் சிவில் வழக்கு முடியும்வரை கிரிமினல் வழக்கை நிலுவையில் வைக்கத் தேவையில்லை என்பதை உச்சநீதிமன்றம் கூறியுள்ள பல்வேறு தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி வாதிட்டனர்.

அதிரடித் தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி திரு.புகழேந்தி அவர்கள் தற்போது அளித்த தீர்ப்பில் ""ஜூகிபா கதைக்கும் எந்திரன் திரைப்படத்திற்கும் உள்ள 16 ஒற்றுமைகளை மேற்கோள் காட்டி எந்திரன் திரைப்படம் ஜூகிபா கதையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இது காப்புரிமைச் சட்டத்தின்படி தவறாகும். எனவே இயக்குநர் ஷங்கர் காப்புரிமைச் சட்டத்தின்படி வழக்கை எதிர்கொள்ள வேண்டிய முகாந்திரம் உள்ளது'' என்றும், சிவில் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே இயக்குநர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதுவரை காலதாமதப்படுத்தியுள்ளார் என்பதையும் பதிவு செய்துள்ளது. அதேபோல் இயக்குநர் மீது 420 பிரிவைப் பயன்படுத்தத் தேவையில்லை’ என்றும் சொல்லி அந்தப் பிரிவை மட்டும் ரத்து செய்துள்ளது.

மேலும் அந்த தீர்ப்பில் நீதிபதி, ’கலாநிதி மாறன் படத்தின் தயாரிப்பாளர் மட்டும்தான். அவருக்கும் கதைக்கும் தொடர்பில்லை. எனவே அவர்மீது தொடுக்கப்பட்ட இந்த கிரிமினல் வழக்கு செல்லாது என்று அறிவித்ததோடு, ’இயக்குனர் பிரபலமானவர் என்பதால் அவர் விசாரணையின் போதெல்லாம் ஆஜரானால் பொதுமக்களால் இடையூறு ஏற்படும். எனவே அவசியம் கருதி கோர்ட் அழைக்கும்போது மட்டும் அவர் ஆஜரானால் போதுமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாடனின் "ஜூகிபா' கதையை ஒத்து இருக்கின்றன’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டதோடு, இது குறித்து தமிழ்நாடன் தரப்பு தாக்கல் செய்திருந்த 29 ஒப்பீட்டு பாயிண்டுகளில் இருந்து 16 பாயிண்டுகளை தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் நீதிபதி. அவை...

எந்தெந்த காட்சிகள்

rr

மேலும் தனது தீர்ப்பில், "ஒரு படைப்பாளியின் உண்மையான திறமைக்கும் உழைப்புக்குமான ஊதியம், அவருக்குக் கிடைத்தாக வேண்டும் என்பதற்காகத்தான் காப்பிரைட் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்கிறது' என்றும் அக்கறையோடு குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி.

பிரபலமான காப்பிரைட் வழக்கான "எந்திரன்' வழக்கில், கதாசிரியருக்கு சாதகமாகக் கிடைத்திருக்கும் இந்தத் தீர்ப்பு, திரைப்புள்ளிகளிடம் கதையைப் பறிகொடுத்த ஏனைய எழுத்தாளர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. காப்புரிமையை நிலைநாட்டப் போராடும் எழுத்தாளருக்கு இது ஒரு மைல்கல் ஆகும். இந்த தீர்ப்பையடுத்து விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கருக்கு எதிராக காப்புரிமை சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைந்து வழக்கின் விசாரணை முடிவுபெற்று, "எந்திரன்' வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

-சூர்யா